மனோரஞ்சன் வங்க எழுத்தாளர். பங்களாதேஷில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதாகையில் இவர் குடும்பம் மேற்கு வங்காளத்திற்குப் புலம் பெயர்ந்தது.
பதினான்கு வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், இருபதுகளில் நக்சல்பாரி இயக்கத்தினருடன் சேர்ந்ததால் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார். மகாஸ்வேதா தேவியே இவரை எழுதுவதற்குத் தூண்டியவர். பன்னிரண்டு நாவல்கள் எழுபது சிறுகதைகள் எழுதியுள்ளார். பெங்கால் தலித் சாகித்ய அகாதமியின் தலைவர் இவர். இந்த நாவல் JCB 2022 இறுதிப் பட்டியலில் ஒன்று.
இமான் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும் போது, அவனது அம்மா, அப்பாவைக் கொன்ற குற்றத்திற்கு, ஜெயில் தண்டனையை அனுபவிக்கிறாள். உடன் இமானும். இவனுக்கு ஆறு வயதில் அவள் இறந்து போகிறாள். இந்தியாவில் நீதித்துறையும், ஜெயில் நிர்வாகமும் எளியவர்களிடம் எப்படி நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இமானை எல்லோரும் மறந்து விடுகிறார்கள். ஆறுமாதக் குழந்தையாக வந்தவனுக்கு இருபது வயதாகையில், பத்திரிகையாளர் ஒருவர் அவன் கதையை எழுத அவசரமாக முழித்துக் கொண்டு அவனை விடுதலை செய்கிறார்கள். எழுதப்படிக்கத் தெரியாத, இதற்கு முன் சிறையை விட்டு வேறு உலகத்தைப் பார்த்திராத இமான் இப்போது கல்கத்தா நகர வீதிகளில்.
நாலாயிரம் பேர் உள்ள சிறையில் நாற்பது பேர் கெட்டவர்களாக இருக்கக்கூடும். ஆனால் வெளியில் லட்சக்கணக்கில் கெட்டவர்கள் உலா வருகிறார்கள். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாதவரிடம், நாள் வட்டி வாங்குபவர்கள், எதிர்ப்பவர்களை உயிருடன் குழி தோண்டி உப்பைப் போட்டு புதைப்பவர்கள், வீடு புகுந்து திருடுபவர்கள், திருட்டு சேலையை வைத்து ஆசைகாட்டி பெண்களிடம் காரியத்தைச் சாதித்து கொள்பவர்கள், பிணத்திற்கு விலைகொடுத்து வாங்கி ஊர்வலத்தில் விழும் சில்லறையில் லாபம் பார்ப்பவர்கள், வீட்டு வேலைக்கு வந்த சின்னப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குபவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் இந்த நாவலில் வருகிறார்கள். இவர்களுக்கிடையே ஏதுமறியாத இமான்.
ஆண்களை விடப் பெண்கள் இந்த நாவலில் திருத்தமாக வந்திருப்பதாகத் தோன்றுகிறது. கணவனைத் தீர்த்துக்கட்ட சமயம் பார்க்கும் அமோடி, கணவன் இல்லாத போது வாழ வழியில்லாது ஒத்துக் கொண்ட உறவை அவன் சிறையிலிருந்து வந்த பிறகும் தொடரும் ராணி பாலா, கணவர்களை மாற்றிக் கொண்டே இருந்தாலும் கல்யாணம் பண்ணாவிட்டால் தொடமுடியாது என்று கட்டுப்பாடு விதிக்கும் காமினி, இரண்டு நாட்களுக்கு மேல் ஒரே ஆணை அனுமதித்தால் காதல்வயப்பட நேரும் என அவனை விரட்டும் ஆய்னா, வசதிபடைத்த ஆண்கள் ஒரு பெண்ணைக் குறிவைத்து அடைந்தே தீர வேண்டும் என்று துடிப்பது போல் அப்பாவிப் பையனை அடையத் துடிக்கும் போலாஷி, விபச்சாரம் செய்யும் ஐஸ்வர்யா என்று வித்தியாசமான பெண்கள்.
நாளை மற்றுமொரு நாளே போலவே இதுவும் விளிம்புநிலை மனிதர்களின் இருள் உலகத்தின் கதை. சட்டம், தர்மம், ஒழுக்கம் எல்லாவற்றையும் விட இருத்தலே இங்கு முக்கியமானது. மனோரஞ்சன் சிறையில் இருந்திருக்கிறார், இது போன்ற மனிதர்கள் நடுவே வாழ்ந்திருக்கிறார் அதனால் நிதர்சனமாக இந்த உலகத்தை நாவலில் கொண்டு வந்திருக்கிறார். சின்ஹாவின் நல்ல மொழிபெயர்ப்பு. தமிழில் மட்டும் வாசிப்பவர்களுக்கு நற்செய்தி, இந்த நூல் தமிழில் அகநாழிகை வெளியீடாக விரைவில் வருகின்றது.