Chuden அவருடைய சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருதை வென்றவர். இவருடைய முதல் நாவலான இது இவ்வாண்டு JCB இறுதிப்பட்டியலில் ஒன்று.
Ajit எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாளர், பதிப்பாளர். நேப்பாளிய மொழி இலக்கியத்தை உலகிற்கு அறிமுகம் செய்யத் தொடர்ந்து பாடுபடுபவர்.
நேப்பாளிய மொழியின் எழுத்து வடிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தொடங்குகிறது. அதன் நவீன இலக்கியம் 1930களில், எனில் நூற்றாண்டுக்கும் குறைவான வயது. 1992ல் நேப்பாளியமொழி இந்திய அரசியலமைப்பின் அங்கீகாரம் பெறுகிறது. JCB விருது ஆரம்பித்ததில் இருந்து ஒருவருடம் தவிர்த்து ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் ஒரு மலையாள நூலேனும் இறுதிப்பட்டியலுக்கு வருகிறது. இதுவரை தமிழில் இறுதிப்பட்டியலுக்கு வந்த ஒரே ஆசிரியர் பெருமாள் முருகன். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு அதிக படைப்புகள் செல்லாததும் ஒரு முக்கிய காரணம்.
நஸீம்: ” மொத்த மலையும் பற்றி எரிகிறது. ஆனால் நீ, பிரதான் பெண்(Pradhan- உயர்ஜாதி ஷத்திரியர்) வீட்டிலேயே இருந்து, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிரு. நான் பிரதான்கள் காசே குறியானவர்கள், கோழைகள் என்று கேள்விப்பட்டேன்”
ரச்சீலா: ” வீட்டில் எல்லோரும் கண்டன ஊர்வலத்திற்குப் போய் விட்டார்கள். நீ பேசுவது ரொம்பவே அதிகம். கொஞ்சம் காத்திரு. நானும் வருகிறேன்”
ஊர்வலத்தில் கலவரம். குண்டடிபட்டு இறந்தவர்களில் ரச்சீலாவும் ஒருத்தி.
Kalimpong, சிறிய நகரம். எண்பதுகளில் அங்கே ஒரே ஒரு பள்ளி. அங்கே வருவதற்கு சாலை இல்லை. அந்த ஊரில் மின்சாரம் இல்லை. உழைக்காமல் பிழைக்க வழியில்லை. அந்தப் பள்ளிக்கு இளம்ஆசிரியை ஒருத்தி வெகுதூரத்திலிருந்து வருகிறாள். படிக்கும் நான்கைந்து மாணவர்களிடம் அவள் கனவுகளைத் துரத்துங்கள் என்கிறாள். RSSம் அங்கே வருகிறது. பாரதமாதாவிற்கு ஜே போடச் சொல்கிறது. கூர்க்காவிற்கு தனிநாடு எனும் புரட்சியும் வருகிறது. அந்த சிறிய நகரில் மட்டுமல்ல, டார்ஜிலிங்கில் எல்லாமே மாறப்போகிறது.
பதினைந்து வருடங்களுக்குப்பின் தன்னுடைய பால்ய நண்பன் இறந்த செய்தி கேட்டு ஊர் திரும்பும் ஒருவனது நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன. சிறுவயதில் அந்த நண்பனுடன் தான் இவன் வீட்டைவிட்டு ஓடினான். அப்போது சந்தித்த, போன தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் இவனுக்கு Gorkhaland போராட்டத்தின் கதையைச் சொன்னான். அந்தக்கதை தான் இது.
Gorkhaland என்பது இன்றைய தேதி வரை அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இது தோற்றுவிட்ட கனவின் கதை. போராளிகள் தன்னை முன்னிறுத்த. தனித்தனியாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு தன் இனம் வெட்டி சாய்கிறார்கள். மாநில அரசும், மத்திய அரசும் இரும்புப்பிடியில் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. எப்போதும் போலவே காட்டிக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். எப்போதும் போலவே உயிருக்கு உத்திரவாதமின்றி இருக்கும் நிலையிலும் காதலில் விழுகிறார்கள். குழந்தை பெற்றுக் கொண்டு குடும்பத்தை நிர்கதியாக விட்டு மரணிக்கிறார்கள். தங்களுக்குத் தனிநாடு கிடைத்தால் பாலும் தேனும் வீதியில் ஓடும் என்ற வாக்குறுதியை நம்பி இருப்பதையும் இழந்தவர்களின் கதை இது.
இந்தியா பல கலாச்சாரங்கள் சங்கமிக்கும் நாடு. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகத் தங்கி இதை நாடாக ஏற்றுக்கொண்ட நேப்பாளிகளுக்கு இங்கே அடையாளச்சிக்கல் எப்போதுமுண்டு. Chuden மொத்த இனத்தின் குரலாக அவர்களது போராட்டத்தைத் துளியும் எந்த பிரச்சாரமும் இல்லாது கதையாகச் சொல்லி இருக்கிறார்.
Ajit இதை அழகான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். போராட்டங்களில் காணாமல் போகிறவர்கள் இறப்பதே இல்லை. அவர்கள் என்றாவது திரும்பி வருவார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.