இப்போது இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. அப்போது வங்கிகளில் வர்க்கபேதம் இருந்தது. எழுத்தர்களுடன் அலுவலர்கள் ஒன்றுசேர மாட்டார்கள். அலுவலரும் மேலாளரும் இருவருமே Scale II என்றாலும் மேலாளர் அலுவலரைத் தள்ளி வைப்பார். Hierarchy என்பது வங்கியில் இருந்தது, ஆனால் 4.59க்கு போட்டது போட்டபடி மூட்டையைக்கட்டும் ( காசாளரால் அது முடியாது) எழுத்தரையோ, சரி சரி என்று பணிவாகச் சொல்லிவிட்டு வேலையை முடிக்காத அலுவலரையோ மேலாளரால் ஒன்றும் செய்வதற்கில்லை.
எந்த ஊருக்குப் புதிதாகச் சென்றாலும், உடனேயே அருகாமையில் உள்ள வேறு வங்கிகளின் கிளைகளுக்கு வாடிக்கையாளர் போல் சென்று அங்கு நடப்பவற்றைக் கவனிப்பது என் வழக்கம். அந்த அரசுடமையாக்கப்பட்ட வங்கியில், வாடிக்கையாளர்களை அநேகமாக அந்த வங்கியில் வேலைபார்த்த எல்லோருமே தொந்தரவு செய்ய வந்தவர்களை நடத்துவது போல் நடத்தினர். அது சென்னையில் ஓய்வுபெற்றவர்கள் அதிகமாக இருக்கும் பகுதி. சேமிப்புக்கணக்குகளின் எண்ணிக்கை பல்லாயிரத்திலும், இருப்பு பலகோடிகளிலும் இருக்கும். டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களை விட அதிக இயல்திறம் கூடிய பகுதியது. வாடிக்கையாளர்கள் காட்சிக்கு எளியனாகவும் வங்கியில் வேலைபார்ப்பவர் கடுஞ்சொல்லனாகவும் இருந்தனர்.
புகைபிடிக்கும் பழக்கம் ஒரு Filthy habit. இருந்தாலும் தேநீரும் புகையும் எப்படி நட்பை வளர்க்கும் என்பது பலர் அறியாதது.
அந்தக்கிளையில் மட்டுமல்ல எங்குசென்றாலும் புகைபிடிப்பவர்களால் ஒரு மணிநேரம் தாண்டி உட்கார்ந்திருப்பது கடினம். ஒரு Substaff மேலாளருடன் நின்று புகைபிடிக்கும் போது, அவருக்குப் பகிர்ந்து கொள்ள இருக்கும் தகவல்கள் வேறெந்த நேரத்திலும் கிடைப்பதில்லை. அந்தக்கிளையில் என்னுடன் புகைபிடிக்க யூனியன் GSல் இருந்து எல்லோரும் வருவார்கள். அவர்களைப் பாதிக்கும் தகவலை நான் சொல்வதில்லை, அவர்களும் அப்படியே. இது நாங்கள் பேசிக் கொள்ளாது ஏற்படுத்திய விதி.
ஏழுநாள் வாரம் இன்னும் வியாபாரத்தைப் பெருக்கும் எனப் பரிந்துரை செய்தேன். தலைமை அலுவலகம் அனுமதி கொடுத்து,
கூடுதல் ஊழியர்களை உடனே கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டது. யூனியன் என்னிடம் எதுவும் பேசாமல் தலைமை அலுவலகத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. அந்த நேரத்தில் எனக்கு முக்கியமான பயிற்சி ஒன்றிற்காக பத்துநாட்கள் வெளியூர் செல்ல வேண்டியதாகியது. நான் பயிற்சிக்கு சென்ற அன்று மேலதிகாரிகள் பலரிடமிருந்து எதற்காக இந்த சூழலில் கிளையை விட்டு வந்தேன் என்று கேள்வி. அதில் ஒருவர் அங்கே யூனியனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நான் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றார். பத்து நாட்கள் மயான அமைதி. நான் திரும்பிய பதினோராம் நாள் யூனியன் மீண்டும் அழுத்தத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. மனிதவளத்துறைத் தலைவர் எனக்கு மேலாளராக இருந்தவர். அதன் அடிப்படையில் எனக்கும் அவர்களுக்கும் என்ன புரிதல் என்றார். ” புகைபிடித்தல்” என்றேன். சற்று இடைவெளிவிட்டு “யாரிடமும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நடிக்காமல், அவர்களை நட்பாக நடத்தினால், அவர்களால் நம்மைக் கைவிடுவது கடினம் சார்” என்றேன். இப்போது யோசித்தால் யூனியனுக்கு மட்டுமில்லாது பெண்களுக்குக்கூட இது பொருந்தும் போலிருக்கிறதே.