பெங்களூரில், மலையாளத் தம்பதிகளுக்குப் பிறந்தவர். ஓமனிலும் இந்தியாவிலும் வளர்ந்தவர். பதினேழு வயதில் அமெரிக்காவில் குடிபுகுந்தவர். இவரது சிறுகதை 2020ன் சிறந்த சிறுகதை விருதைப் பெற்றது. இவருடைய முதல் நாவலான இந்த நூல், National Book Award 2022ன் இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற ஐந்து நூல்களில் ஒன்று.
அசாதாரணமானவர்களின் கதைகள் சுவாரசியமானவை. சாதாரணமானவர்களின் அசாதாரணக்கதைகளும் ஈர்க்கக்கூடியவை.
சாதாரணமானவர்களின் சாதாரணக் கதைகளை ரசிக்கும்படி எழுதுவது கடினம்.
அதைத் தான் இந்த நாவலில் செய்திருக்கிறார் சாரா.
ஸ்நேகாவின் பதினான்கு வயதில் அவளது குடும்பம் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்கிறது. அவளது அப்பா உடன்இருந்தவர்களின் மோசடிக்கு பலியாடாகி, சிறைசென்று, விடுதலையாகி இந்தியாவிற்குத் திரும்ப அனுப்பப்படுகிறார். அவருடன் அவளது அம்மாவும். டீன்ஏஜ் ஸ்நேகா மட்டும் தனியே அமெரிக்காவில். பட்டப்படிப்பை முடித்து நல்ல வேலையில் அமரும் ஸ்நேகாவிற்கு Recessionஐக் காரணமாகச் சொல்லி அவள் முதலாளி சம்பளத்தை நிறுத்துகிறார். ஸ்நேகா Heterosexual இல்லை, அவள் ஒரு Gay.
முதலாளித்துவம், நிறவெறி, Lesbianism, Coming of age, தனிமை ஆகியவை இந்த நாவலின் முக்கியமான தீம்கள். சாராவின் மொழிநடை இந்த நாவலின் பெரிய பலம்.
சாரா ஒரு வாழ்க்கை என்னும் பெட்டியை நம் கண் முன்னே திறந்து உள்ளிருப்பதை ஒவ்வொன்றாகக் கடைபரத்துகிறார். எந்த வழியில் போனால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்? எந்த வழியில் போனாலும் இன்னொரு வழியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று தோன்றச் செய்வதே வாழ்க்கை. இன்பவாழ்வு என்பது பாவனை.
சாரா, எதையுமே அதிகம் விளக்கிக் கொண்டு போவதில்லை. ஸ்நேகாவின் சிறுவயதில் அவளது மாமா அவளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததைச் சொல்கிறாள். ஆனால் அதனை விளக்க விரும்பவில்லை. அவளால் செய்ய முடிந்தது பெரியவளான பின் மாமாவின் கல்லறைக்குச் சென்று தூ தூவென்று மூன்றுமுறை கல்லறையின் மேல் காறி உமிழ்வது. Physical relationship என்பது இயல்பான ஆண்-பெண் உறவுகளிலேயே அதிநுட்பமானவை. எவ்வளவு அழகாக இருந்தாலும், எந்நேரமும் துணையின் காதில் சீழ்வடிந்து கொண்டிருந்தால் எத்தனை காலம் பொறுத்துக் கொள்ள முடியும்? இதில் ஒருபாலின உறவு, இருவரும் பெண்கள் என்றாலும் அங்கே கலப்பது இந்திய மனமும், அமெரிக்க மனமும். கலாச்சார வித்தியாசங்களுக்கான சிக்கல்கள் வந்தே தீரும். இந்தியத் தந்தையை விட தாய் எளிதாக தன் பெண்ணின் ஒருபாலின உறவை ஏற்றுக் கொள்வது ஆழ்ந்து யோசிக்க வைத்தது. இந்தியப்பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாகவே Adaptability அதிகம்.
இந்த நாவலின் மற்றொரு முக்கிய இழை நண்பர்கள். எப்படி நண்பர்களை நாம் வாழ்க்கையில் பெருகிறோம் என்பது வாழ்வின் பாதையை திசைதிருப்பவல்லது.
புலிட்சர் விருது அமெரிக்கர்கள் மட்டுமே பெறமுடியும். இந்த ஆண்டு புக்கர் இரண்டு விருதுகளை இந்திய, இலங்கை எழுத்தாளர்கள் பெற்றிருக்கிறார்கள். NBA2022ன் விருதை வெல்வதற்கு எல்லா சாத்தியங்களும் இருக்கும் நாவல் இது. சாராவை இந்திய- அமெரிக்க எழுத்தாளர் என்றே சொல்ல வேண்டும். பல வருடங்களாக இந்த நாவலை எழுதி, திருத்தி வந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
நல்ல வரவேற்பைப் பெற்று, இந்த வருடத்தின் நாவல் என்று பலரால் பாராட்டப்பட்ட நாவல் இது. நாளை, இந்த நாவல் விருதை வெல்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும். வெல்லாவிட்டாலும் Modern Novels எப்படி எழுதப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமிருப்பவர்கள் வாசிக்க வேண்டிய நாவல் இது. திறமைகள் கொட்டிக் கிடக்கும் ஊரில் முதலாவது, இரண்டாவது போன்ற எண்கள் இருப்பதில்லை.