Khalid Jawed இன்று எழுதிக்கொண்டிருக்கும் உருது எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுவரை புனைவுகளும், அல்புனைவுகளும்
சேர்த்து பதினைந்து நூல்களை எழுதியுள்ளார். ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இது சமீபத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது நாவல்.
Baran Farooqi அதே பல்கலையின் ஆங்கிலப் பேராசிரியர். Faizன் கவிதைகளை மொழிபெயர்த்தவர்.
Hafees பெற்றோரை இழந்த ஒரு அனாதை. ஆனால் அவன் அனாதை என்பதை உணரவிடாமல் அவனது அம்மாவின் உடன் பிறந்தோர், அப்பாவின் உடன் பிறந்தோர் எல்லோரும் ஒரு வீட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள். மத்தியவர்க்க முஸ்லீம் கூட்டுக்குடும்பத்தில் Hafees வளர்கிறான். அறுபத்தெட்டு வயதான Hafees தன்னிலையில் சிறுவயதில் இருந்து நடந்தவைகளை நினைவுகூர்வதே இந்த நாவல்.
நினைவுகளைப் பின்னோக்கி செலுத்துகையில், நானூறு பக்க அளவில் நாவலாக வருவதற்கு, சுவாரசியமான பல விஷயங்கள் நடந்திருக்க வேண்டும். கொலை செய்வது சுவாரசியமான விஷயமென்றால் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்னரே, ஒன்றல்ல, இரண்டு கொலைகளை Hafees செய்திருக்கிறான். ஆனால் அதன் பின்னரான ஐம்பது வருடங்கள் எந்த விறுவிறுப்புமில்லாத monotonous life. பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால் அது எல்லோருக்கும் ஒருநாள் நேர்வது தானே. Hafees மிகவும் சிரப்பட்டு LLB மூன்றாம் வகுப்பில் முடிக்கிறான். வக்கீல் தொழிலில் கோர்ட்டைச் சுற்றி வந்தது தவிர பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. இதற்கிடையில் கடைசிவரைக் காப்பாற்றிக் கொண்ட படுதோல்வியுற்ற திருமணவாழ்க்கை. Hafeesஐத் தெருவில் கடந்திருந்தால் நீங்கள் அரைவிநாடிக்கு மேல் கவனித்திருக்க மாட்டீர்கள்.
Banana Yoshimotoவின் Kitchen நாவலில், Kitchen என்பது, குடும்பம், பிணைப்பு இவற்றின் Symbol. கதாநாயகி Kitchenஐ விரும்புவதன் மூலம் குடும்பஉறவை அமைத்துக் கொள்ள விரும்புவாள். இந்த நாவலில் Jawed பலமுறை சொல்வது போல் Kitchen ஒரு அபாயமானபகுதி. இந்த நாவலில் மூன்று கொலைகள் Kitchenல் தான் நடக்கின்றன. இரண்டு நாட்களில் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண், அடுத்தவனுடன் உறவுவைத்துக் கொள்வதும் Kitchenல் தான். Kitchenல் தான் எல்லா சண்டைகளும் உருவாகுகின்றன. Kitchenல் தான் அணுஆயுதத்தால் எல்லாமும் அழிந்தாலும் அழியாத கரப்பான்பூச்சி அங்கு நடப்பவைகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
குடல்- intestine எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது. சரியான உணவு சரியான நேரத்தில் தயாரிக்கப்பட வேண்டும். தவறான சமயத்தில் சமைக்கப்படும் உணவு Hafeesக்கு முன்கூட்டியே வரப்போகும் ஆபத்தை உணர்த்துகிறது. ஒன்று Extra marital affair நடக்கிறது, இல்லை தற்கொலை, கொலை, கலவரம் ஏதாவது ஒரு அபாயம் நேர்கிறது. இந்திரா மற்றும் ராஜீவ்காந்தி இருவரும் கொல்லப்பட்ட தினத்திலும் கூட Hafees வீட்டில் தவறான உணவே தயாரிக்கப்பட்டது. அதை அவனால் முன்னரே உணரமுடிந்தது. ஆனால் அவன் பேச்சை யாரும் பொருட்படுத்துவதில்லை.
வாழ்க்கை, இறப்பு, குற்றம், தண்டனை, இழந்தது, மீண்டது ஆகியவை இந்த நாவலின் முக்கியமான தீம்கள். நினைவுப்பயணம், உண்மைக்கும், ஃபாண்டஸிக்கும் மாறிமாறிச் செல்கிறது. தத்துவார்த்தமான கருத்துகள் தொடர்ந்து வருகையில் Absurdism வருகிறது. நடந்த காட்சிகளின் விவரிப்புக்கு நடுவே சர்ரியல் காட்சிகள் வருகின்றன. Metaphor,, Simile இவற்றில் நம்பிக்கையில்லை என்று கதைசொல்லி பலமுறை கூறினாலும் அவை அழுத்தமாக நாவலில் வருகின்றன. கதைசொல்லி எனக்கு எழுதத் தெரியாததால் கோர்வையாக சொல்ல முடியவில்லை என்று இடையிடையே சொல்கிறான்.
நம்வாழ்க்கையை நாம் விட்டுவிலகி தூரத்தில் இருந்து பார்த்தால் எவ்வளவு அபத்தமாகக் கழிந்திருக்கிறது என்ற சிந்தனை பலருக்கும் வரக்கூடும். கதைசொல்லி நாவலில் சொல்ல யத்தனிப்பதும் அதுவே. சிறுவயதில் நெருக்கமாக இருந்தவர்கள் அந்நியர்களாகிறார்கள். இதுகாறும் அந்நியர்களாக இருந்தவர்கள் வாழ்க்கைத் துணையாகிறார்கள். நேசிக்கப்படாத ஒன்றை நேசம் என்ற புரிதல் கொள்கிறோம்.
வாழ்க்கையில் தனிப்பட்ட வெற்றி தோல்விகளுக்கு ஏற்ப உறவுகளின் வர்ணங்கள் மாறுகின்றன.
இது dark and gloomy story. வாசிப்பதற்கும் எளிதான நூலல்ல. ஆனால் அதற்குள் அழகியலும், நுட்பமும் ஒளிந்திருப்பது இதனை முக்கியமான சமகால இலக்கியப்படைப்பாக்குகிறது. இந்த வருடம் இறுதியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இவ்வருடத்தில் நான் வாசித்த சிறந்த பத்துநூல்களில் ஒன்றாக என்னால் இதை யோசிக்காது கூறமுடியும். மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு இது. எனினும் உருதுவில் இருந்து இதை நேரடியாகத் தமிழுக்குக் கொண்டு வந்தால், தமிழ்இலக்கியத்திற்கு அளிக்கும் கொடையாக இருக்கும். இன்னும் ஒரு மணிநேரத்தில் 2022 JCB விருதின் முடிவு தெரிந்திருக்கும். நான் நீதிபதியாக இருந்தால் இந்த நூலையே விருதுக்குத் தேர்ந்தெடுப்பேன்.