Silvia மெக்ஸிகோவில் பிறந்து இருபதுகளில் கனடாவில் நிரந்தரமாகக் குடிபுகுந்தவர். ஒவ்வொரு நாவலையும் வேறுவேறு ஜானரில் எழுதுபவர். இவருடைய சமீபத்திய Velvet was the Night இவரை வாசிக்க விரும்புபவர் தொடக்கப்புள்ளியாகக் கொள்ளலாம். இந்தக் கதை இவருடைய கொள்ளுப்பாட்டியின் உண்மைக்கதை.
1917 மெக்ஸிகோவின் ஒரு கிராமம். உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. போராளிகளும் ராணுவவீரர்களும் அடிக்கடி ஊருக்குள் வந்து வளர்ப்புப் பிராணிகள், உணவுப்பொருட்களை பொதுமக்களிடமிருந்து அபகரித்துச் செல்கிறார்கள். பதிமூன்று வயதுப்பெண் Tomboy போல் பையன்களுடன் திரிகிறாள். உணவைப் பதுக்கிவைக்க அவளையும் அவள் சகோதரனையும் ஒரு குகையில் விட்டு விட்டுச் செல்கிறார்கள். மழையும் இருட்டுமான ஒரு நாளில் வழிதவறிய புலி குகைக்குள் நுழைகிறது.
சிறுவன் கனவுலக சஞ்சாரி. சிறுமி போராளி.
நாட்டுப்புறக்கதைகள், Jules Verneன் 20000 Leagues Under the Sea படித்துச் சிறுவன் சிறுமிக்குச் சொல்கிறான். சிறுமிக்குப் படிக்கத் தெரியாது. சிறுமிக்கு எண்பத்து ஏழு வயதானபின் எல்லாவற்றையும் நினைவு கூர்கிறாள். போனதெல்லாம் புதைந்தழிந்தே போனது. நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
மிகவும் சாதாரணமான கதையை Adventureஆகவும் கடைசியில் Melancholy ஆகவும் சொல்வது Silviaவின் திறமை. கதையை எழுதத் தெரிந்தவர்கள் இல்லாமல் போனால் அவை வாய்மொழியாக உயிர் தரிக்கின்றன. பல தலைமுறைகள் கழித்தேனும் ஒருவர் எழுதவருவார் என்று பொறுமையுடன் காத்திருக்கின்றன.