கலா அக்கா எண்பதுகளில் நிச்சயமாக வித்தியாசமானவர். நண்பன் துரை அவரை அண்ணனின் காதலி என்று அடிக்கடி சொல்லியும் நான் பொருட்படுத்தவில்லை. அப்போதிருந்த ஆண்களில் தொண்ணூறு சதவீதம், பெண்கள் விஷயத்தில் பொய் சொல்வார்கள். அப்படியில்லை என்று நிரூபிக்கவே துரை என்னை கலா அக்கா வீட்டிற்குக் கூட்டிச் சென்றிருக்க வேண்டும்.
கலா அக்கா வீட்டில், அவர், அம்மா, தங்கை வசந்தி ஆக மொத்தம் மூன்றுபேர். துரையின் அண்ணனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதால் கலா அக்கா அவருடைய நிரந்தரக் காதலியாக இருக்கத் தீர்மானித்து விட்டார். கலா அக்கா மட்டுமே அந்த வீட்டில் சம்பாதிப்பதால் அவரை எதிர்த்து அவரது அம்மா ஒன்றும் சொல்லவில்லை போலும்.
வசந்தி புத்தகப்பிரியை. ஆரம்பத் தயக்கம் உடைந்து இருவரும் சரளமாகப் பேச ஆரம்பித்து விட்டோம். துரையுடன் பேசிக்கொண்டிருந்த கலா அக்காவின் கண்கள் அடிக்கடி என்மேல் பதிவதை என்னால் உணரமுடிந்தது. அப்போதிருந்த அப்பாவி முகமோ, தவறான எடைபோடுதலோ ஏதோ ஒன்று என்னை ஆபத்தில்லாதவனாக அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். கல்கி, சாண்டில்யன், சுஜாதா என்று அப்போது பேச நிறையப்பேர் இருந்தார்கள். பார்க்கும், பேசும் எல்லாப்பெண்களையும் காதலிக்க வேண்டும் என்ற கட்டாய மனநிலை அன்று எனக்கிருந்தது. வசந்தி எனக்கு இரண்டுவயது பெரியவள் என்பதை அது பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இலக்கிய விவாதங்கள் வாரத்தில் இரண்டு நாட்களேனும் நடைபெற்றன. வசந்தி இந்த பூமியிலேயே அழகான பெண் என்பதில் எனக்கு சந்தேகமிருக்கவில்லை.
துரைக்கு வசந்தி மேல் எந்த ஈடுபாடுமில்லை
என்பதில் எனக்கு பரிபூர்ண திருப்தி. அவனுக்கு Moral rights அதிகம் இருப்பதாக என் ஆழ்மனம் நம்பியதே காரணம். எல்லாக் காதலையும் ஆண்கள் தான் முன்னோக்கி நகர்த்தியாக வேண்டியிருக்கிறது பல சமயங்களில். தொடக்கப்புள்ளியாக வலது கையை அவள் இடது கையை நோக்கி மெல்ல நகர்த்தினேன். பெங்களூரின் டிசம்பர் மாதத்தின் மார்பிள் தரை போன்ற குளிர்ச்சி அந்தத்தீண்டலில். வசந்தி கையை விலக்கிக் கொள்ளவில்லை. அவளது அம்மா வரும் சத்தம் கேட்டு நான் கையை விலக்கிக் கொண்டேன். அடுத்து வரும் நாட்களில் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று ஆயிரம் திட்டங்கள் மனதுக்குள் ஓடின.
இன்னும் ஒரு வருடம் பள்ளிப்படிப்பு முடிந்து விடும், மூன்று வருடங்கள் கல்லூரி முடித்தால், ஒருவருடம் வேலை கிடைக்க என்றாலும் மொத்தம் ஐந்து வருடங்கள். வசந்தி எனக்காக ஐந்து வருடங்கள் காத்திருப்பாளா? அவள் ஐந்து நாட்கள் கூடக் காத்திருக்கவில்லை. துரை, அவள் டியூசன் வாத்தியாரோடு ஊரை விட்டு ஓடிவிட்டதாக வளையம் வளையமாகப் புகையைவிட்டுக் கொண்டே சொன்னான்.