ராஜாவின் அம்மா மலையாளி. அப்பா தமிழ். இருவரும் மருத்துவர்கள். அனைவரும் உட்கார்வது, படிப்பது, படுப்பது எல்லாம் ஒரே ஹாலில் என்ற வீட்டில் வளர்ந்த என் போன்ற பலருக்கு, ராஜாவின் மொட்டை மாடியில் இருந்த தனியறை ஒரு ஆச்சரியம். வீட்டிலிருக்கும் தனியறையில் நினைத்தபொழுது புகைபிடிக்க முடியும் என்பது சுதந்திரத்தின் உச்சம். ஒரு சிகரெட் வாங்கி இருவர் அல்லது மூவர் பகிரும் பொருளாதாரச் சூழலில், ராஜா அவனுடைய அறையில் பாக்கெட் வாங்கி வைத்திருப்பான். ஆளுக்கொன்றைப் பற்ற வைத்துக் கொண்டு, அப்பா, அம்மா யாரும் வரமாட்டாங்கள் இல்லையாடா என்போம். “அவர்கள் வருவதில்லை, அக்கா, தங்கை யாரேனும் மாடிக்கு வருவார்கள், ரூமுக்குள் வரமாட்டார்கள், நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம்” என்பான் அலட்சியமாக.
மற்ற நாடுகள் போலில்லாமல், இந்தியாவில் 1970களிலேயே கருக்கலைப்பு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது. மதுரை போன்ற பழமையான நகரத்தில் மணமாகாத பெண்கள் மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்துகொள்ள முடியாமைக்குப் பல காரணங்கள் இருந்திருக்கக்கூடும். ராஜாவின் அறைக்குச் செல்லும் போது முதல்மாடியில் பலதடவை அழுகைக்குரல்கள், நாசிக்கு சகிக்க முடியாத துர்நாற்றத்தைக் கடந்து சென்றிருக்கிறோம்.
ராஜாவின் தனியறை அவனது சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, அங்கே வருகின்ற பெண்களின் சுதந்திரத்திற்கும் சேர்த்துத்தான் இருந்திருக்க வேண்டும்.
கால்பந்து உலகக்கோப்பை அப்போது தான் முதல்முறையாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. நேரஇடைவெளி காரணமாக இந்தியாவில் தாமதமாகவே போட்டிகள் ஆரம்பிக்கும். ராஜாவின் வீட்டில் அம்மா, அப்பா இருவரும் இல்லை, முதல்மாடி காலியாக இருக்கும், அங்கிருக்கும் தொலைக்காட்சியில் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பார்க்கலாம் என்று வற்புறுத்தினான். ஆறேழுபேர் போயிருந்தோம். முதல்மாடியில் நாங்கள் நுழையும் முன்பே வாசனைப்பத்திகள் பொருத்தி வைத்திருந்தான். என்றாலும் அடர்த்தியான துர்க்கந்தம் அங்கே நிரந்தரமாக. குழாமாக இருக்கையில் எதுவும் தெரிவதில்லை. புகையும், உற்சாகக்குரல்களுமாக அரைமணி கழிந்திருக்கும். முதல்மாடியின் கதவு தட்டப்பட்டது. விடுபட்ட நண்பன் யாரோ என்று நான் தான் கதவைத் திறந்தேன். ராஜாவின் அக்கா புயல்போல் நுழைந்தார். பின்னால் தயங்கியபடியே தங்கையும். ராஜாவை அவர் பார்க்காமலேயே ” என்ன மாதிரி பையன்கள் நீங்கள்? இரண்டு வயதுக்கு வந்த பெண்கள் இருக்குமிடத்தில் கும்மாளம் போடுகிறீர்களே! உங்கள் வீட்டில் அனுமதிப்பீர்களா?” என்று ஐந்து நிமிடம் விடாது பெருங்குரலெடுத்துக் கத்தினார். நான் அவருக்குப் பின்னே இருந்ததால் அனைவரது கலவரமான முகங்களையும், ராஜாவின் சலனமில்லாத முகத்தையும் நன்றாகவே பார்க்க முடிந்தது. இப்போதெல்லாம் உலகக்கோப்பை கால்பந்தை முழுதும் உட்கார்ந்து பார்க்கும் பொறுமையில்லை. எப்போதேனும் சிறிது நேரம் பார்க்க நேர்ந்தால், எல்லோருக்கும் முன்பு நான் படியிறங்கிக் கொண்டிருக்கிறேன். எனக்குப்பின் குனிந்த தலைகள் வரிசையாக நகர்கின்றன. ஏன் ஒரே காட்சியே திரும்பத்திரும்ப வந்து கொண்டிருக்கிறது!