ஆசிரியர் குறிப்பு:
1980ல் இருந்து பல இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருபவர். காலச்சுவடின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். பல சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இது இவரது முதலாவது நாவல்.
“பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்”
என்ற சினிமா பாடலின் வரிகளே இந்தக் கதையின் கரு. பழி வாங்கும் உணர்ச்சி ஒரு மனிதனை, மனிதத்துக்கும் மிருகத்தன்மைக்கும் மாறிமாறிச் செல்ல வைக்கிறது. ஒரு பொருளை உரிமைகோரி, நன்கு தெரிந்த உடைமையாளரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு வந்தபின், வெற்றிக்களிப்பு ஏற்படாமல் எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படுவது ஒரு உளவியல். இந்த நாவலிலும் அதுவே நிகழ்கிறது.
பெயரில்லாத கதைசொல்லியின் அக்கா, முப்பது வருடங்களுக்கு முன் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். அதைச் செய்தவன் அவனது செல்வாக்கால் குடும்பத்தையே ஊரைவிட்டுத் துரத்துகிறான். கதைசொல்லிக்கு இப்போது அதற்கான பழிதீர்க்க சரியான சந்தர்ப்பம் வந்ததாகக் கருதுகிறான். முன்னும் பின்னுமாக கதை இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது.
சாரதா அந்த நிகழ்வில் அப்போது பாதிக்கப்பட்டிருந்தாலும், அதிலிருந்து விரைவிலேயே வெளியே வந்து விடுகிறாள். அவள் கதைசொல்லியைத் தூண்டும் சக்தியாகக் காட்டியிருப்பது அவன் நம்ப விரும்பும் ஒன்று. அல்லது இவனைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு உள்ளுக்குள் பழைய நினைவு பெருகி வரலாம், மற்றபடி அவள் சாதாரணமாகவே இருக்கிறாள். சிறுவன் தானாகவே மனதுக்குள் பகையை வளர்த்திருக்க முடியும், சிறுவயதில் இருந்த கையறுநிலை வளர்ந்தபின்பு வெறிகொண்டு பரவும் தீ போல ஆக்ரோஷமாக மாறக்கூடியது.
ஆனால் முதல்நாவலிலேயே ஒரு நுட்பமான நாவலாசிரியர் தமிழுக்குக் கிடைத்து விட்டதற்கான உறுதிப்பாடுகள் நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன. ஏராளமாக உதாரணங்கள் சொல்லலாம், குறிப்பாக Cuckold கணவன், கடை வைத்து முடித்ததும் இருமிக் காட்டுவது, சுகந்தி தேடிவராமல் இருப்பது, சுலோ இனி நான் என்னப்பா செய்வேன் என்று ஆறுதல் தேடி தோளில் சாய்ந்து அழுவது, நெருக்கமாகும் நேரத்தில் விலகிக் கொள்வது, சுலோவின் மார்பகங்கள் அக்காவின் மார்பகங்களை நினைவுபடுத்துவது, கொலை செய்திருந்தால் கூட மதிப்பான முடிவாக இருந்திருக்கும் எனத் தனக்குள் மருகுவது, கத்தி ஒருவர் துறந்தாலும் இன்னொருவர் கரங்களால் இரத்தத்தைப் பார்த்தே தீருவது என்று குறைந்தது ஐம்பது இடங்கள் அதிநுட்பமாக இந்த நாவலில் வந்திருக்கின்றன.
Wuthering Heightsல் வரும் Heathcliff அவ்வளவு மோசமாக நடந்து கொள்ள காதல்தோல்வி காரணமாக இருப்பது போல இதில் கதைசொல்லிக்கு Revenge. பழிஉணர்ச்சி மட்டுமே உந்துசக்தியாக இருக்கவில்லை, காமமும் நாவல் முழுவதும் ஒரு அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அக்காவின் கதையைக் கேட்டு சுயமைதூனம் செய்யும் நண்பன்! மனைவியை இன்னொருவனுடன் அனுமதித்துக் குறட்டைவிட்டுத் தூங்குவது போல் நடிக்கும் கணவன்!
வாழ்பனுபவங்களில் புனைவு கலந்து எழுதுகையில் அதன் நம்பகத்தன்னை முழுஉண்மையைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும். தேவிபாரதி ஒவ்வொரு நாவலிலும் அதையே செய்கிறார். சிறுகதையாக எழுத ஆரம்பித்தது என்றிருக்கிறார் முன்னுரையில், அதுவே சக்திவாய்ந்த நாவலாக முடிந்திருக்கிறது. கதைசொல்லியைப் பார்த்து அந்தக் கந்துவட்டி இளைஞன் ஒருமுறைக்கு மேல் கேட்பான் ‘ நீங்கள் கருணாகரனா” என்று. ஆமாம் இவனும் கருணாகரன், இன்னொரு கருணாகரன்.
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 4852- 278525
முதல்பதிப்பு டிசம்பர் 2011
விலை ரூ. 125.