ஆசிரியர் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவ நல்லூரில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியம் மற்றும் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணிபுரிபவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு வரலாற்று நூல் எழுதிய இவரது சமீபத்திய நாவல் இது.

கல்லறைக்குள் இருவர் பேசிக் கொள்ளும் ஆவலாதிகள் Mairtín O Cadhainன் Dirty Dust.
The Posthumous Memoirs of Bras Cubas என்ற Machadoவின் நாவல், கல்லறையில் இருந்து ஒருவன் தன்வாழ்வை பின்னோக்கி நினைத்துப் பார்ப்பது. V J Jamesன் Anti Clock சவப்பெட்டி செய்பவனின் கல்லறைத் தோட்டக்கதை. யாத்வஷேமே யூதக்கல்லறையில் ஆரம்பிக்கின்ற கதை தான். இந்த நாவலும் கல்லறையில் ஆரம்பித்துக் கல்லறையிலேயே முடிகிறது. நாவலில் இறந்தவர்கள் யாரும் அவர்கள் கதைகளை கல்லறையில் இருந்து எழுந்துவந்து சொல்வதில்லை. இருப்பவர்கள் கல்லறையில் வசிப்பவர்களின் கடந்தகாலத்தைப் பேசிக்கொள்கிறார்கள். Aids வந்து மடிந்த பேரழகியான Hollywood நடிகை, பணம் இல்லாது கஷ்டப்பட்டவனின் கல்லறையில் பத்து டாலர் நோட்டுக்களை இறைக்கும் பெண் என்று வாழ்வில் தவறவிட்ட தருணங்களை சாவிற்குப்பின் மீட்டெடுக்கப் பார்க்கிறார்கள்.

ஆறு தலைமுறைக்கு முன் கிருத்துவராக மட்டுமல்ல, உபதேசியாராகவும் மாறிய சத்தியநாதன் என்ற கதைசொல்லியின் தாத்தாவின், தாத்தா சொத்தை, அவரது இந்துவாகவும், கிருத்துவராகவும் உள்ள வாரிசுகள் பிரித்துக்கொள்ளச் செய்யும் முயற்சிகள் நாவலின் ஒரு இழை. தாத்தாவின் தாத்தா கதையை அவன் எழுத முயல்வது இன்னொரு இழை.

புலமாடன் என்ற பரம்பரை இந்து, வெள்ளைக்காரனால் கவரப்பட்டு, சத்தியநாதன் ஆகிறான். ஊர்ஊராக சென்று தன் மக்களை கிருத்துவர்களாக மாற்றுகிறான். புலமாடனின் அம்மா சிலுவையில் அறையப்பட்டு இறந்து போன இயேசுவுக்கு அழுவது மிக நுட்பமான விஷயம். படிப்பறிவு இல்லாத அப்பாவி ஜனங்களை கிருத்துவத்துக்கு மாற்றுவது எளிது. உன் கடவுள்கள் சாத்தான் என்று சொல்கிறார்கள். விக்கிரக ஆராதனைக்கு நரகம் என்கிறார்கள். கடைசியில் பதில் சொல்ல வேண்டும் என்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத நமக்கே கொஞ்சம் பயம் வருகிறது.

ஆண்களின் அத்தனை காதல் மொழிகளையும், வழிசல்களையும் அள்ளி எடுத்துக் கொண்டு, பிடிகொடுக்காது நழுவும் மாலாவும், அமெரிக்காவில் உடன் வேலை பார்க்கும் ஜெனியும் கதைசொல்லி ஜோவைக் காதலிப்பவர்கள். ஆனால் ஜோவிற்கு கல்லறைகளைச் சுற்றித்திரிவது சின்னவயதில் தாத்தா ஆரம்பித்து வைத்த பித்து, இன்னும் தீரவில்லை.

தீனுடைய யாசகம் மற்றும் மைனிகள் இவருக்கு மிகவும் அனுபவம் வாய்ந்த களங்கள். மீன்குட்டியும் நீச்சலும் போல. சந்தனத்தம்மை எனக்கு ஒரு ஆச்சரியம். இந்து மதத் தொடர்பான கதையை நல்ல புரிதலுடன் எழுதியிருந்தார். ஆனால் இந்த நாவலில் அந்தப்புரிதல் குறைவு என்று எனக்குத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க கல்லறையிலேயே (மாலாவின் சாதனைகளும் ஜெனியின் வேதனைகளும் இல்லாமல்) இந்த நாவல் சுற்றி வந்திருக்கலாம். அப்போது அந்த முடிவும் அழுத்தமாக இருந்திருக்கும். நெல்லை மக்களின் வாழ்வும் மற்ற விவரணைகளும் தீனுடைய பிற நாவல்களில் வந்தது போலவே இதிலும் ரசிக்க வைக்கின்றன. கல்லு மிதக்கணும், வேதத்துக்கு வாரோம் என்பது போல இவருடைய இயல்பான மொழிநடையும், லில்லி ராஜம் இந்துவான பிறகு ராஜம்மாள் என்று கூப்பிடாவிட்டால் கோபப்படுவது போன்ற பூடகமான மொழியும் (ஆமாம் திரும்பவும் தாய் மதத்திற்கு வருகிறார்களா என்ன திருநெல்வேலியில்!) வழமை போலவே இந்த நாவலிலும். ஆனால் இவருடைய மற்ற நாவல்களில் இருந்ததும் இதில் இல்லாததும் என்ன என்று தீன் யோசித்தால் அவருக்கே தெரிந்துவிடும்.

பிரதிக்கு:

சந்தியா பதிப்பகம் 044- 24896979
முதல்பதிப்பு 2022
விலை ரூ.260.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s