ஆசிரியர் குறிப்பு:

விருதுநகரில் பிறந்தவர். ஊடகத்துறையில் பணிபுரிந்தவர். சிற்றிதழ் நடத்தியவர். சால்ட் பதிப்பகத்தை நடத்தி வருபவர். மூன்றுகவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள இவரது சமீபத்திய நாவல் இது.

” எங்கு என்பதை விட யாரோடு என்பதில் தான் பயணத்தின் அத்தனை சுவாரசியங்களுமிருக்கிறது -பராரிகள்”

மணமாகி நான்கு வருடங்களுக்குள் கணவனை இழந்தவனிடம், மாமியார் சொல்கிறாள். “ஒரு நல்லது பொல்லாததுக்கு முன்னாடி நிக்கவிட மாட்டாங்க, மூலைல உட்கார வைப்பாங்க, இங்கே இருந்து போயிடு, உங்க அம்மா விட்டுக்கும் வேணாம். சாக மட்டும் முடிவெடுக்காத. சரியா” அவளும் முப்பத்தெட்டு வயதில் இருந்து இந்த வேதனையை அனுபவிப்பவள். கண் முன் காட்சிகள் விரிகின்றன. இது வரை சரி. அடுத்து அவள் சொல்வது தான் கவிஞர்கள் கதை எழுத வருவதில் இருக்கும் வித்தியாசம். ” காடு கரைக்குப் போனா இந்த வெள்ளைச்சீலைல பச்சையா நாலு ஒட்டுப்புல்லு ஒட்டினா எவ்வளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா?”

மறுநாள் மனதுக்குப் பிடிக்காத கணவருடன்
செல்ல வேண்டியிருக்கும், இன்றைய இரவை மனதுக்கு நெருங்கியவனுடன் அனுபவிப்போம் என்று வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவிட்டுச் செல்லும் பெண், கணவனைக் கொன்று சிறைத்தண்டனை அனுபவிக்கும் பெண்ணுக்கு ஆங்கிலேய டாக்டர் மேல்வரும் காதல், கணவன் இறந்த நான்காம் நாள், என்னை ஏற்றுக்கொள் என்று முன்பின் தெரியாதவனிடம் சொல்லும் பெண், ஒத்த ரசனையுடன் களங்கமில்லாமல் பழகும் மனைவியையும், தம்பியையும் சேர்ந்திருக்கச் சொல்லி, சொத்தையும் இரண்டு பிள்ளைகளையும் அவர்களிடம் விட்டுவிட்டு பரதேசம் போகும் கணவன் என்று வித்தியாசமான மனிதர்கள் பலர் இந்த நாவலில்.

மாடுகள் தான் கதையை நடத்திக் கொண்டு செல்கின்றன. மாடு விற்கும் சந்தையின் இரண்டு மனிதர்கள் நாவலில் மையக் கதாபாத்திரங்கள். ஆண்டுகள் பலவாயினும் கன்றாக இருந்த போது வளர்த்தவனை மாடு அடையாளம் கண்டு கொள்கிறது. பன்றி காரில் அடிபட்டால் குடும்பத்திற்கு ஆகாது என்ற நம்பிக்கையை வைத்து நெடுஞ்சாலையில் புதிய கார்களுக்கு முன்னால் பன்றியை ஏவிவிடும் கும்பல் என்று வித்தியாசமான கதைக்களம்.

பராரி என்றால் பயணி என்று சொல்லலாம். திக்குத் தெரியாமல் திரியும் பயணி. நாவலின் ஆரம்பத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை யாரேனும் நடந்து கொண்டே இருக்கிறார்கள். நடந்து நடந்து கால்களின் வயது, ஆளின் வயதை விட மிக அதிகமாகப் போகிறது. பலவருடங்கள் கழிந்தும் தலைநிமிராமல் கால்களைப் பார்த்தே யார் என்று அடையாளம் கண்டுபிடிக்கிறார் வயதுமுதிர்ந்த கன்னியாஸ்திரி.

மூன்று Timelineகளில் நடக்கின்ற கதை இது. தொடராக வந்ததால் ஏற்படும் Missing links இந்த நாவலிலும் இருக்கின்றன. புத்தகமாகப் போடுமுன் மீண்டும் ஒருமுறை எடிட் செய்ய வேண்டும். நரனின் கவிதைகளில் வரும் நரன் வேறு, கேசம், சரீரம் நரன் வேறு, இந்த நாவலை எழுதிய நரன் வேறு. நாட்டார் கதைகள் பாணியில் இந்தக் கதைகள் விரிந்து கொண்டே போகும் தன்மையுடையன. நரனின் மொழிநடை இந்த நாவலில் அங்கங்கே நுட்பமாக, பெரும்பாலும் எளிதாக எந்த வாசகனையும் வேறொரு உலகத்துக்குக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும். சிறந்த வாசிப்பனுபவத்தைக் கொடுக்கும் நாவல். இருபது வருடங்களாக, ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டே போகும் நரனின் மாஸ்டர்பீஸ் இனிமேல் தான் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.

பிரதிக்கு:

சால்ட் 89394 09893
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 500.

One thought on “பராரி – நரன்:

  1. எவ்வளவு கச்சிதமான விமர்சனம் …..கவிதைபோல விமர்சனத்தினையும் நுட்பமாக இயம்பும் பாங்கு தங்களுடைய மாண்பினைக்காட்டுகிறது..தாங்கள் படித்து வினையாற்றுவதே படைப்பாளிக்கான அங்கீகாரமாகத்தான் காண்கிறேன்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s