Lisa அமெரிக்காவில் குடிபுகுந்த சீனத்தம்பதியருக்கு, நியுயார்க்கில் பிறந்தவர். இவருடைய The Leavers புலம்பெயர்ந்த ஒருவனின் சிக்கல்களைச் சொல்லும் கதை. NBA இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற நாவல்.
Sandra என்ற பெயரில் ஒரு பெண் நியூஜெர்ஸியிலும், இன்னொரு பெண் மணிலாவிலும், ஒரே Social media நிறுவனத்திற்கு ஒரே வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்குப் போக வேண்டிய மெயில் மற்றொருவருக்குத் தவறுதலாகப் போனபின், ஒரு ஆர்வத்தில் இருவரும் தொடர்பு கொள்கிறார்கள். இருவரது வாழ்க்கையும் இதனால் மாறப் போகிறது.
இந்தக் கதையில் இரண்டு பெண்கள், மற்றவருக்கு எல்லாம் கிடைத்து விட்டதாகவும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அடுத்தவர் மேல் பொறாமைப்படுவது முதல்படி. ஆனால் இந்தப் பொறாமை உணர்வு அழிக்கும் சக்தியாக மாறாமல் பார்த்துக் கொள்வது அடுத்து நிகழ்வது.
அடுத்ததாக நிரந்தரப் பணியாளருக்குப் பதிலாக, தற்காலிகப் பணியாளர்களை (Contract workers).அமர்த்தி, பத்தில் ஒரு பங்கு சம்பளம், பலமடங்கு அதிகவேலை என்று உழைப்புச்சுரண்டலை (Exploitation) நிகழ்த்துவது. இது எல்லா நாடுகளிலும் நடப்பது தான். பசித்தவர்கள் இருக்கும் வரை சுரண்டலும் இருக்கும். ஐந்தாண்டிற்கு முன், இங்கே ஒரு நிறுவனத்தில் ஏழாயிரம் ரூபாய் மாத ஊதியத்திற்குப் பணியாற்ற வடகிழக்கு மாநிலத்துக் கிராமத்தில் இருந்து ஒரு இரயில்பெட்டி நிறைய வந்து இறங்கிய அந்த வெள்ளைநிறச் சிறுமிகள் இப்போதும் பெங்களூரில் இருக்கிறார்களா?
கடைசியாக மொத்த ஊழியர்களும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டப்படும் போதும் கூட, இயல்பாகத் தோன்ற வேண்டிய comradeship வராமல், ஆண்கள் நீ என் தேவையைப் பூர்த்தி செய்தால் நான் உனக்கு இந்த சலுகை செய்வேன் என்று பாலியல்சுரண்டல் நிகழ்த்துவது.
Lisaவின் பெற்றோர் பிலிப்பைன்ஸில் இருந்து வந்தவர் என்பதால் அங்குள்ள வாழ்க்கையும், அமெரிக்க வாழ்க்கையும் எளிதாகச் சொல்ல முடிகிறது. மணிலாவில் இருக்கும் அம்மாவிற்கு நோய், மகளால் பயணச்சீட்டு எடுத்துப் போகும் அளவிற்குப் பணமில்லை. எதிர்பாராத செலவுகளால் அந்த மாதம் அனுப்பும் சிறுதொகை கூட அம்மாவிற்கு அனுப்பமுடியவில்லை. அம்மா பணம் அனுப்பினாயா என்று கேட்டு விட்டுச் சொல்கிறாள். ” இல்லை நான் நன்றாக இருக்கிறேன், பணத்தை வேஸ்ட் செய்யாதே, நான் அனுப்பி நடுவில் தொலைந்து போய்விடக் கூடாதே என்பதற்காகக் கேட்டேன்”.