தஸ்தயேவ்ஸ்கியின் உன்னதமான நாவல்கள் எல்லாமே அவர் சிறைசென்று வந்த பின் எழுதியவை. ஒரு தோல்வியடைந்த தாம்பத்யத்தைச் சந்தித்திருக்காவிட்டால் டால்ஸ்டாயால் அன்னா கரீனினா எழுதியிருக்க முடியுமா என்ற சந்தேகம் எப்போதுமே எனக்கு உண்டு. தி.ஜா, ஆதவன், இ.பா, கிருத்திகா போன்றோரின் படைப்புகள் பிற எழுத்தாளர்களில் இருந்து வேறுபட்டதற்குக் காரணம் அவர்களது டெல்லி வாழ்க்கை. ஜி.நாகராஜனும், ப.சிங்காரமும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியது அவர்களது பிரத்யேக அனுபவங்களை புனைவில் கலந்ததால் தான். அரைப்பித்து நிலையில் தான் நம்மை மயக்க வைக்கும் மொழி கொண்ட கன்னி நாவலைக் கிருபாவால் எழுதமுடிந்தது. எங்கெல்லாம் போர், பேரிழப்பு, வீழ்ச்சி, தடம்புரள்தல், வித்தியாசமான அனுபவங்கள்
நேர்கிறதோ, அங்கே தான் பேரிலக்கியங்கள், உன்னதமான நாவல்கள் உருவாக முடியும்.
ஒன்பதில் இருந்து ஐந்து வரை வாழ்வாதாரத்திற்கான வேலை, பத்திரமான தாம்பத்யம், பாதுகாப்பான சூழல், சமச்சீரான வாழ்க்கை என்ற சிறிய வட்டத்தில் மகத்தான நாவல்கள் ஒருபோதும் உருவாக முடியாது.
Exposure is the essence of extreme creativity. டில்லி, கல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து Partition stories ஏராளமாக வந்திருக்கையில் சென்னையில் இருந்து அதிகம் ஏன் வரவில்லை? சென்னையில் எம்டன் குண்டு, பல்லாங்குழி அளவு குழியைப் பறித்தது என்று தெரிந்த உடன் பாதிநகரம் பாதுகாப்பாகச் சொந்த ஊருக்குப் புறப்பட்டுப் போய்விட்டது.
சிறுகதை வடிவம் வேறு. ஒரு Spark போதுமானது, ஒரு நல்ல எழுத்தாளன் அதைச் சிறந்த சிறுகதையாக மாற்றுவதற்கு.
நாவலுக்குப் பொறிகள் போதுமானவையில்லை, மரங்களைச் சாய்த்து துவம்சம் செய்யும் காட்டுத்தீ வேண்டியதாகிறது. என் மனதுக்கு நெருங்கிய தமிழ் நாவலாசிரியர்கள் இவர்கள்.
- தி.ஜானகிராமன்
- அசோகமித்திரன்
- சுந்தரராமசாமி
- க.நா.சு
- நீலபத்மனாபன்
- ப.சிங்காரம்
- எம்.வி.வெங்கட்ராம்
- ஜி.நாகராஜன்
- சா.கந்தசாமி
- ஆதவன்.
சிறந்த இருபது நாவல்களில் பசித்த மானிடம், வாசவேச்வரம், நாகம்மா, இடைவெளி, நினைவுப்பாதை, அசடு, அபிதா, கிருஷ்ணப்பருந்து, கரமுண்டார் வீடு போன்ற நூல்கள் கண்டிப்பாக நுழைந்து விடும். எம்.வி.வெங்கட்ராம் மட்டும், நான் அனைத்து நாவல்களும் வாசித்ததில்லை, மற்ற எல்லோரது எல்லா நாவல்களும் வாசித்திருக்கிறேன். நீலபத்மனாபனின் தேரோடும் வீதி பெரும் ஏமாற்றம். ஆனால் தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் இரண்டுமே என்றும் மனதில் நிற்கும். இவர்களைத் தவிரக் குறைந்தது முப்பது ஆசிரியர்களேனும் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள், ஆனால் அவர்களால் பத்துக்குள் வரமுடியவில்லை என்பதில் எனக்கும் வருத்தமே.