ஆசிரியர் குறிப்பு:
இலங்கையின் யாழ்பாணத்திலுள்ள சரசாலை என்ற கிராமத்தில் பிறந்தவர். சமூக செயற்பாட்டாளர். தொன்ம யாத்திரை எனும் இதழின் ஆசிரியர்களில் ஒருவர்.
‘மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. இது சமீபத்தில் வெளியான இவருடைய முதல் நாவல்.
நூலிலிருந்து:
” அவள் என்றைக்குமில்லாத நிறங்களை உடலெங்கும் பரவவிடுவதும், அவளுடைய கரிய வாளிப்பான உடல் ஒரு கருங்கடலைப்போல் அலைகொள்ளத் தொடங்கி, அவன் நிதானத்தை நடுக்கடலுக்கு எடுத்துச்சென்று புதைப்பதையும் அவனால் பார்க்கமட்டும் தான் முடிந்தது. தான் வீழ்த்தப்படுவதைக் கவனித்துக் கொண்டே மனம் அவள் இசைத்தலுக்கு சதிர் கொண்டது. காங்கேசனுக்குள் ஒரு ஒப்பிடுதலையும் குற்ற உணர்வையும் அவள் நிறுவ முயன்றாள். ஆனால் ஒரு வார்த்தை கூட அவளுக்கு அதற்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. தேகத்திலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்க்கயிறும் இறுக்கிக் கட்டுவதற்குப் பதிலாக மனமத்தில் சுழன்று காங்கேசனைக் கடைந்தன. அவளாக விலகினால் மட்டும் தான் அவன் விலகமுடியும்”.
ஈழத்தில் பல குழுக்கள். பல அரசியல் நிலைபாடுகள். தமிழர்கள் கணிசமாக இருக்கும் எந்த நிலத்திலும் குழுக்கள் உருவாகாமல் இருந்ததில்லை. அவற்றை விட்டுவிட்டு இலக்கியம் என்ற மையப்புள்ளியில் எல்லோரையும் இணைத்தால், ஈழத்திலிருந்து வரும் இலக்கியம் சமீபகாலங்களில் தமிழுக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறது. தனியாகப் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை, ஆனால் இலக்கிய நுட்பத்தில் அவர்கள் இங்கே யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர். அந்த வரிசையில் யதார்த்தன் வந்து சேர்கிறார். முதல் அத்தியாயத்திலேயே விருந்து தயாராக இருக்கிறது என்ற ஆர்வமும், ஈழத்தமிழ்மொழி விரைவான வாசிப்பிற்கு உகந்ததல்ல, ரசித்துப் படிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் வந்துவிட்டன.
ஈழத்தில் இயக்கங்கள் அதிகாரத்துடன் இருக்கும், போர் மூளும் அபாயம் இருப்பதாக எல்லோரும் பதறும் காலம். போர்க்காலச் சூழல் பின்னணியில் வருகிறது. ஆனால் இது போர் நாவலல்ல.
கீரிமேடு என்ற வன்னியின் சிறுகிராமம் ஒன்றின் அந்த நாளைய வாழ்க்கை. மையக்கதாபாத்திரம் என்று தனியாக ஒருவரைச் சொல்ல முடியாத வகையில் பலரது வாழ்க்கையையும் படம்பிடிக்கும் நாவல். சிறுதெய்வங்கள் காக்கும் என்று திடமாக நம்பிய எளிய மக்களின் வாழ்க்கை அலைக்கழிக்கப்படப் போகிறது.
விடுதலைப்புலிகள் ஆண் மற்றும் பெண் சிறார், சிறுமிகளைப் பிள்ளைபிடிப்பவர்கள் போல் பிடித்துச் செல்வது நாவல் நெடுகிலும் வருகிறது. கட்டாய ராணுவசேவை பல நாடுகளில் உண்டு. விருப்பமில்லாதவர்களை வற்புறுத்தித் தூக்கி செல்லுதல் தவறு. நாவலில் விடுதலைப்புலிகள் மற்ற இயக்கங்களின் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொல்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் இல்லையென்றால் ஈழத் தமிழர் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இன்னும் எத்தனை பெடியள்களின் மேல் கை வைக்கப்பட்டிருக்கும்! பொதுமக்கள் கூடி இருக்கும் இடத்தில் குண்டுகளை வீசுவது என்ன மாதிரியான அரசு? போர்க்குற்றங்களில் இருந்து எளிதாக சிங்களவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். தமிழர்கள் வீழ்ந்துபட்டனர்.
நாவலில் பல நுட்பமான காட்சிகள் வந்து போகின்றன. துவக்கில்லாத சின்ராசு ஊனமுற்றவனாய் நினைப்பது. காங்கேசு துரிதம் உறவு வளர்வது. உன் குழந்தையா என்று நிரூபிக்க பால் கொடு என்று கன்னிப்பெண்ணிடம் சொல்வது, ராணுவப்பகுதிக்கு செல்லும் மக்கள் தன்ஊர் என்று கொல்லாமல் விட்ட விடுதலைப்புலி இருக்கும் இடத்தை இராணுவத்திடம் காட்டிக் கொடுப்பது, மார்கழி எதற்காக இரகசியமாய் பொறுப்பாளரிடம் பேசினாள் என்பது தெரிய வருவது என்று பல அற்புதமான தருணங்கள்.
பாவுநூல் இழையறுந்தது போல் பலரது முடிவு வேண்டுமென்றே சட்டென முடிக்கப்படுகின்றன. பலரது கதைகள் ஒரு வாழ்வியலையும், போரால் அது நிலைகுலைந்ததையும் சொல்வதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. சிறுதெய்வங்கள், நம்பிக்கைகள், பண்பாடு, தொன்மம், சடங்குகள், மரபின் எச்சங்கள் போன்றவற்றிற்கு யதார்த்தன் கொடுக்கும் அழுத்தமே ஒரு சமூகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. சொல்லப்போனால் போர் ஒரு பின்னணி இசை மட்டுமே. நாவலின் கடைசிப்பகுதி, தொன்மம், Metaphor, Symbols என்று பலவற்றின் கலப்பில் கனவின் சாயலோடு, இதயத்தில் பாரத்தை ஏற்றி முடிகிறது.
ஈழத்தமிழில் நல்ல பரிட்சயம் இருப்பவர்களால் மட்டுமே விரைவாக வாசிக்கமுடியும் மொழி, சில நேரங்களில் Visualsஆக, பலநேரங்களில் ஆற்றொழுக்கு நடையாக விரியும் மொழிநடை, தொன்மத்தையும் நவீனத்தையும் இணைக்கும் கதைசொல்லல், சாரங்கன் போல, செயல்களை வைத்தே அந்தந்தக் கதாபாத்திரத்தைத் தெளிவாக சித்தரித்திருப்பது, விடுதலைப்புலிகளின் சில போர்கள் குறித்த நீண்ட வர்ணனைகள் வந்த போதிலும் எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி முன்னால் நிற்கும் வன்னி கிராமத்தின் வாழ்வு என்று பல விஷயங்கள் இந்த நாவலில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன. அரசியல் பார்வையைத் தாண்டி, இது ஒரு நல்ல நாவல். இலக்கிய வாசகர்கள் தவறாது வாசிக்க வேண்டிய நூல்.
பிரதிக்கு:
வடலி வெளியீடு
விற்பனை உரிமை கருப்புப் பிரதிகள்
94442 72500
முதல்பதிப்பு ஆவணி 2022
விலை ரூ.750.