எனது முன்னுரை:

நம் மண்ணுக்கு மட்டுமே பொருந்தும் விஷயங்கள் பேசி மாளாதவை. அப்பத்தா, பெரியம்மா, அத்தைகள், அண்ணிகள் என்று நிறைந்தது நம் உலகம். மேலைநாடுகளில் இவை வெறும் பெயர்கள். அத்தை வந்து இந்த மாசம் புருஷன்கூட சேரக்கூடாது என அறிவுரை சொல்லும் உலகம் நம்முடையது. அப்பா அம்மாவிடம் இன்று இரவு வீட்டுக்கு வரலாமா என்று கேட்டுவிட்டுச் செல்லும் நாசூக்கு கொண்டவர்களால் நம்முலகை புரிந்து கொள்வது சாத்தியமில்லை.

பெண்கள் அதக்கி முழுங்கக் காலங்காலமாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பத்திருபது வருட தாம்பத்தியத்திற்குப்பின் வேறொரு வாழ்க்கை வாழ்ந்திருக்கக்கூடும், வேறொரு முகம் துணையாகி இருக்கக்கூடும் என்ற சிந்தனை வந்து போகாத நம் அன்னையர், மனைவியர் யாருமிருக்க முடியாது. ஆண்களைப் போல் அவர்கள் வெளியில் சொல்வதில்லை. அதக்கி, முழுங்கி விடுகிறார்கள்.

மஞ்சுளாவின் கவிதைகள் நம் மக்களின் அன்றாட வாழ்க்கையை சுற்றி வருபவை. அற்புதமான வார்த்தைகளை அகராதியில் தேடியலையாமல், அற்புதமான தருணங்களை கவிதைகளில் கொண்டு வர யத்தனிப்பவை, பல கவிதைகள் கொண்டும் வந்திருக்கின்றன. எளிமையின் பிரம்மாண்டம் மஞ்சுளாவின் கவிதைகள்.

சிறுவயதில் நன்குபழகி நடுத்தரவயதை அடைந்த அல்லது கடந்த பெண்ணிடம் பேசி இருக்கிறீர்களா? உடல் கடந்த பார்வை பலருக்கு இங்கே இல்லாததால் அது எப்போதாவது தான் நேர்கிறது. அவர்களை நாம் இழந்ததற்கு நாமே முழுக்காரணம் என்று அவர்கள் சொல்வது எப்போதும் நிகழ்கிறது.

இந்தக் கவிதையில் ஒரு ஏக்கம், சோகம், நிதர்சனம், திரும்ப முடியாத தூரம் சென்றுவிட்ட புரிதல் இவற்றுடன் ஒரு காதல் இனிய இசையாக ஒலிக்கிறது. அவள் விட்டுப் போனதற்கு, ஒவ்வொன்றாய் அவளைக் குத்திக்காட்டும் ஆணின் எல்லாக் கேள்விகளுக்கும் அவள் கடைசியில் ஒரே வரியில் பதில் சொல்கிறாள். அவள் இருசக்கர வாகனத்தில் ஏறுவதற்கு வலுவான சூழ்நிலையாக உடைந்த கை, அறுந்த செருப்பு அமைகிறது.
கார் வைத்திருந்தவனை மணந்த அவள் ஏன் அறுந்த செருப்புடன் நாலுமைல் நடக்க வேண்டும்? பலரைப் போல் முப்பதாம் ஆண்டு மணநாள் என்று ஏமாற்ற முடியாமல் வெளிப்படையாகத் தெரியும் மணவாழ்வு.
அவன் ஏறச்சொல்லி இறைஞ்சும் குரலில் இருக்கும் அக்கறை, அவள் மேல் படக்கூடாது என்று முன்னே சரிந்து ஓட்டும் கண்ணியம், பட்டாலும் அது தற்செயல் தான் என்று எடுத்துக் கொள்வேன், உன்னைத் தவறாக நினைக்க மாட்டேன் என்ற அவளது புரிதல் எல்லாமே அழகு இந்தக் கவிதையில். மற்ற கவிதைகளில் அழகைச் சேர்த்திருக்கக்கூடிய ரசவாத உவமை கூட இங்கே பெரிய தாக்கத்தைக் கொடுக்காததற்கு அதில் பொங்கி வழியும் உணர்ச்சிகளே காரணம். பூ வண்டைச் சேர்த்து மூடிக்கொள்வது போல கவிதை நம்மை இழுத்து உள்ளுக்குள் புதைத்துக் கொள்கிறது.

கையில் தொட்டிலாய் ஆடும்
எலும்புமுறிவுக் கட்டோடு
நடந்தவளின் பக்கம் நின்றது
இருசக்கரவண்டி.
கார்க்காரன் எங்கே
காரைப்பாத்துதான அந்தக்காலத்துல
எங்களை எல்லாம் விட்டுப்போட்டு
அவனுக்குக் கட்டிவச்சாங்க என்றான்
அப்போதும் பேசவில்லை அவள்..
பங்காளி வெளியூர்க்கா என்றான்
அப்போதும் பேசவில்லை அவள்
காலேஜ்படிக்கற மைனர் எங்க
இப்படி ஆத்தாள
நடக்கவிடுவானாக்கும் என்றான்
அப்போதும்பேசவில்லை அவள்.
உயிரை விடும்வரை உலோகத்தை மாற்றப்பார்க்கும்
ரசவாத வைத்தியர்போல பிடிவாதமாய்
நடந்தாள் அவள்.
அறுந்த செருப்போட நாலு மைல் நடக்க முடியாது ஏறு என்றவனின் இரங்கிய குரல்
அவளை வண்டி ஏற்றியது.
கொஞ்ச தூரம் போன பின் சொன்னாள்
தொடவேண்டிய காலத்திலேயே தொடல
காலம் போன காலத்துலயா தொடப்போற
நல்லா பின்னாடி தள்ளி உட்கார்ந்து ஓட்டு.
முன்னாடி விழுந்திராத.

பிரதிக்கு:

Zero degree Publishing 89250 61999
முதல்பதிப்பு நவம்பர் 2022
விலை ரூ.130.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s