நல்ல கவிதைகள் அடையாளம் கண்டுபிடிக்கப்படாமல் போவதன் காரணம், கும்பலில் தொலைந்து போவது. சமீபகாலத்தில் சிறுகதைகளும், நாவல்களும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சராசரிக்கு மேலிருப்பதைக் கண்டுபிடித்தல் எளிது. எது எப்படியாயினும் இந்த மூன்றையும் எழுதுபவர்கள், எழுத்தின் தரம் பார்க்கப்படாமலேயே கவிஞர், எழுத்தாளர் என்று பெயரிடப்படுகிறார்கள்.

R.P. ராஜநாயஹம் முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

இலக்கியம், தத்துவம், அரசியல், கலை, சினிமா போன்று, இவர் எழுதாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். எழுத்திலும் தனக்கென தனித்துவ மொழியில், நினைவுகளின் அழகியலைக் கொண்டு வருபவர். முக்கிய எழுத்தாளர்கள் என்று யார் பட்டியல் கொண்டு வந்தாலும் அதில் ராஜநாயஹத்தின் பெயர் இல்லாதிருப்பது ஒரு முரண். இவ்வளவிற்கும் பல எழுத்தாளர்கள், ராஜநாயஹத்தின் எழுத்தைப் பலமுறை பாராட்டியிருக்கிறார்கள். உள்ளடக்கத்தை மட்டும் வைத்து, தரம் நிர்ணயிக்கும் வாசகர்கள் கணிசமான அளவு சேரும்பொழுது, ராஜநாயஹத்தின் இலக்கியஇடம் வேறாக இருக்கும்.

Jump-cut method இவர் எழுத்துகளில் அதிகம் காணப்படுவது. உதாரணத்திற்கு எழுத்து-புரிதல் என்ற கட்டுரையை எடுத்துக் கொண்டால், ஹெகல்-கான்ட்- கான்ராட்- Mann- பார்த்- பூக்கோ- தெரிதா என்று கடந்து ழாக் லக்கானில் நிறைவுறுகிறது. இவ்வளவிற்கும் இது பத்து வரிகளில் அடங்கும் கட்டுரை. அநேகமாக இவரது எல்லாக் கட்டுரைகளிலுமே நினைவுகளின் தாவல் இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது.

நகைச்சுவை இவரது எழுத்துகளில் எப்போதும் விரவிக் கிடப்பது. ‘கெட்ட வார்த்த ஏசு சாமி’ போல வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை, எவனோ சிரிச்சுக்கிட்டே செத்திருக்கிறான் என்ற நாகேஷின் புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை, அசோகமித்ரனின் ‘என்ன ஒரு உழைப்பு’ என்ற நுட்பமான நகைச்சுவை என்று எல்லாவிதமானவையும் இவரது எழுத்துகளில் தோரணமாகி இருக்கும்.

Quotes இவரது எழுத்துகளை அலங்கரிக்க அங்கங்கே கலந்து இருக்கும். எமிலியின்
‘Proud people breed sad sorrows’ ஆக இருக்கட்டும், பூமித்தோலில் அழகுத்தேமல் என்ற பிரமிளின் கவிதை வரிகளாகட்டும்,
Life is a walking shadow என்ற ஷேக்ஸ்பியரின்
மேற்கோள்கள், ‘வானவில் கனவுகள் நிறமிழந்து விட்டது தெரிகிறது’ என்ற சுஜாதாவின் வரிகள் என்று ஏராளமான Quotes இவர் எழுத்தினிடையே வந்து கொண்டே இருக்கும்.

தத்துவார்த்தத்தையும், இலக்கியத்தையும் இவரிடமிருந்து பிரிக்கவே இயலாது. Profanityஐ நகைச்சுவையின் அழுத்தத்தைக்கூட்ட உபயோகிப்பது இவரது வழக்கம். காரணச்செறிவு என்ற இந்த நூல் இவரது கலவையான எழுத்துகளின் சோற்றின் பதமாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாமும் இருக்கின்றன இந்த நூலில். எல்லாவற்றிற்கும் மேல் ராஜநாயஹம் தெளிவாகத் தெரிகிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s