ஆசிரியர் குறிப்பு:
1980ல் இருந்து பல இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருபவர். காலச்சுவடின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். பல சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இது இவரது இரண்டாவது நாவல்.
Last Emperor படத்தில் தான் அரசாண்ட அரண்மனைக்குப் பார்வையாளனாக வரும் மனிதனின் தளர்ந்த நடையைப் பார்த்திருப்பீர்கள். Last Mughal நாவலில் பகதூர் ஷாவிற்கு ஆங்கிலேயர் இழைத்த அவமானத்தை விட, அவரது மனைவியால் வந்த அவமானம் அதிகம். வரலாறு எப்போதுமே வீழ்ந்தவர்களிடம் கருணை காட்டுவதேயில்லை. சாமானியர்கள் அவமானத்தை, உச்சந்தலையில் விழுந்த காக்கை எச்சமென, சுற்றும்முற்றும் பார்த்து விட்டுத் துடைத்துக் கொண்டு நகர்கிறார்கள்.
செல்வாக்கானவர்கள் வீழ்கையில் வரலாறு அதிக வன்மத்தைப் பொதுமக்கள் மூலமாகக் கக்குகின்றது.
ந என்பவன் மிகச்சாமானியன். சத்துணவு அமைப்பாளராக யாரும் அவனை மதிக்காத பள்ளி ஒன்றில் தற்காலிக வேலையில் இருப்பவன். வ என்ற மனைவியுடனும் இரண்டு குழந்தைகளுடனும் பாழடைந்த, ஊருக்கு ஒதுக்குப்புறமான அரண்மனை ஒன்றின் சிதிலமடையாத காவலர்கள் தங்கியிருந்த அறையில் குடியிருப்பவன். இரவில் வரும் நாகத்தைப் பார்த்து பயப்படுபவன். சத்துணவு வேலைக்கு முன் வட்டி வசூல் செய்யும் நிறுவனத்தில் தினமும் வசவுகளை வாங்கிக் கொண்டு அதில் பாதியை கடன் வாங்கியவர்களுக்குத் தந்தவன். கூட்டத்தில் தொலைந்து போன, யாரும் இரண்டாம் முறை ஏறிட்டுப் பார்க்காத,
கடையனினும் கடையனாய் தன்னை உணர்ந்து எதையும் எதிர்க்கத் துணிவில்லாத ந வின் வாழ்க்கை, அவன் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரனான, அரசாண்ட மாவீரன் காளிங்க நடராஜா என்னும் அரசனின் ஒரே வாரிசு, இவன் பெயர் வெறும் ந இல்லை நடராஜ் மகராஜ் என்பது தெரிந்ததும் முற்றிலும் மாறப் போகிறது.
ந தான் நாவல் முழுதும் வருகிறான். அதிகாரம் கிடைத்ததும் தான் மனிதர்கள் மாற வேண்டும் என்றில்லை, அரச வாரிசு என்ற தகவலே ந வை முற்றிலுமாக மாற்றி விடுகிறது. அடுத்ததாக ஆண்ட பரம்பரை என்பது ஆங்கிலேயர் இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னரே முற்றிலும் சிதிலமடைந்து போனது. வரலாற்றில் ஏற்பட்ட தவறை சரிசெய்ய வேண்டும், ந விற்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய வேண்டும் என்பதில் யாருக்குமே இரண்டாம் கருத்து என்பதேயில்லை.
இன்னொரு வகையில் இந்த நாவல் சமூகம் மற்றும் அரசியல் மீதான விமர்சனமும், நையாண்டியும். கதையின் இறுதியில் அது உரத்த குரலாகிறது. விதந்தோதுதல், உணர்ச்சிவசப்படுதல், நிறைவேறா வாக்குறுதிகள் கொடுத்தல் எல்லாமே சந்தர்ப்பவாதத்தின் பல முகங்கள். ந வை முன்னிறுத்தி இதையே தேவிபாரதி ஆழமாகச் செய்திருக்கிறார். ந வின் மனைவியும் கூட கூர்ந்து கவனிக்க வேண்டிய கதாபாத்திரம். அவள் பேசுவதை விடப் பேசாதது நிறையவே இருக்கிறது. ஊர்வலத்தில் தனக்கு நேர்வதை இன்னொருத்திக்கு நேர்வதாகக் கற்பனை செய்யும் மனம்!
வழக்கமான திருப்பூர் கிராம வட்டார வழக்கு இந்த நாவலிலும் முற்றிலுமாக வருகிறது. ஒரு புறம் சமகால யதார்த்த நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், கற்பனையும் உடன் பயணிக்கிறது. தேவிபாரதியின் மற்ற நாவல்களில் இருந்து விலகி, யதார்த்தமோ, மாயயதார்த்தமோ இல்லாது, புனைவின் அதிகபட்ச சாத்தியத்தை உபயோகித்துக் கொண்ட நாவல் இது. பகடி அதிகமாக கலந்திருப்பதும் இதில் தான். சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கும் நாவல் இது. எப்போதும் நூறு எடுத்தாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விசிறிகளுக்கு வெகுசில கிரிக்கெட் வீரர்கள் மட்டும் ஏற்படுத்துவதில்லை, தேவிபாரதி போன்ற நாவலாசிரியர்களும் ஏற்படுத்துகிறார்கள்.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652-278525
மூன்றாம் பதிப்பு ஜூலை 2017
விலை ரூ. 350