Higashinoவை தஸ்தயேவ்ஸ்கி மற்றும் அகதா கிறிஸ்டி இருவரும் சேர்ந்த கலவை என்கிறது Wall Street Journal. உலக வாசகர்கள் மெல்ல இவரைப் படிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அமெரிக்கப் புத்தகக்குழுக்கள், நூலகங்கள் இவரது ஆங்கில மொழிபெயர்ப்புகளை முன்னிலைப் படுத்தும்போது இவர் அடையப்போகும் இடம் வேறு. அமெரிக்காவிலேயே தரமான Crime writers நூற்றுக்கணக்கில் இருப்பதால் அது நிகழ இன்னும் சற்று காலமாகலாம்.

Nihonbashi Bridge, டோக்கியோ ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம். இங்கிருந்து தான் ஜப்பான் தொடங்குகிறது என்ற அர்த்தத்தில் இதனை கிலோமீட்டர் ஸீரோ என்பார்கள். அந்தப் பாலத்தை நோக்கித் தள்ளாடியபடி நடக்கும் ஒருவரைப் பார்க்கும் காவலதிகாரி, அவர் மாலையில் வெகுசீக்கிரம் குடித்து விட்டதாக நினைக்கிறார். பாலத்தில் நடுவில் சுவரில் சாய்ந்து அசைவில்லாது இருப்பதைப் பக்கத்தில் சென்று பார்க்கையில், அவர் குடிக்கவில்லை, கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் நிறைய இழந்து தள்ளாடி இருக்கிறார் என்பது தெரிகிறது. நகரின் பிரபலமான இடத்தில் ஒரு கொலை. டோக்கியோ நகரப் போலீஸ் கொலையாளித் தீவிரமாகத் தேடுகிறது. ஒரு காவல் அதிகாரியைப் பார்த்த ஒருவன் அவசரமாகச் சாலையைக் கடந்துஓடுகையில் விரைந்து வந்த டிரக்கில் அடிபட்டுக் கோமா நிலைக்குச் செல்கிறான். அவனிடம் கொலையானவரின்
பணப்பை மற்றும் சூட்கேஸ் கைப்பற்றப்படுகிறது. அவன் கொலையானவர் உயர்பதவி வகிக்கும் நிறுவனத்தில் சிலகாலம் தற்காலிகமாக வேலை பார்த்து நீக்கப்பட்டவன். இவை இரண்டும் இவனே கொலையாளி என முடிவெடுக்கப் போதுமானவை. ஆனால் இவனுடன் ஒரே அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து, இப்போது ஒரே வீட்டில் வாழும் பெண் இவன் ஒருநாளும் கொலை செய்யும் அளவிற்குப் போகமாட்டான் என்கிறாள். அவள் மட்டுமல்ல, அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி ஒருவரும் அதையே நம்புகிறார்.

Higashinoவின் கதைகள் பரபரப்பாக நகர்ந்தாலும், லாஜிக்கை முன்னிலைப் படுத்திச் செல்பவை. இவரது எந்த நாவல்களிலும் யதார்த்தத்தைத் தாண்டிய எந்த சம்பவங்களும் இருப்பதில்லை. ஜப்பானின் மற்ற Crime writers போலவே, இவரது கதைகளும் ஜப்பானியக் கலாச்சாரம், உணவு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றில் ஆழ வேர் பதித்தவை. முரகாமியின் கதைகளில் வரும் மேற்கத்திய சாயல் இவர் கதைகளில் துளியும் காணக்கிடைப்பதில்லை.

கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாத ஒருவர்
ஏன் புத்தகோயிலில் வழிபாடு செய்ய வேண்டும்? எப்போதும் ஓட்டை சாக்ஸை அணிந்து செல்லும் ஒருவன் ஏன் அன்று மட்டும் ஓட்டை இல்லாத சாக்ஸைத் தேடி அணிந்து செல்ல வேண்டும்? அன்றாட வாழ்க்கையில் நாம் எளிதில் கடந்து செல்லும் விஷயங்கள் இவை. ஆனால் ஒரு கொலையை விசாரிப்பவரால் அப்படிக் கடக்க முடியாது. ஒருவேளை கடந்தால் கொலைக்கான காரணத்தையோ, கொலையாளியையோ அவரால் கண்டுபிடிக்க முடியாது.

மதம், உணவு, Mythology போன்ற பலவற்றில் சீனாவின் influence ஜப்பானை ஆழமாகப் பாதித்திருக்கிறது. Chinese Mythologyல் வரும் Kirin இந்த நாவலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அது போலவே Seven godly shrines. ஜப்பானியப் பள்ளிகளில் இப்போது நடக்கும் Bullying இந்த நாவலிலும் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது. அறிந்தோ அறியாமலோ, வாழ்நாள் முழுதும் ஒரே நிறுவனத்தில் வேலை, ஊழியர்களை உறவினராக மதித்தல், குடும்பஉறவுகளில் ஜப்பானியர்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை போன்றவை மெல்ல மெல்ல மாறி வருகிறது.

Higashinoவை அவருடைய The Devotion of Suspect Xல் இருந்து தொடங்கலாம். அதன் பின்னர் அவரை நிறுத்தாமல் வாசிக்க அவரே பார்த்துக் கொள்வார். இவரது மற்ற நாவல்களைப் போலவே இதுவும் ஒரு Roller coaster ride. இந்த நேரத்தில் ஒரு எச்சரிக்கை, இரவு எட்டுமணிக்கு மேல் இந்த நாவலை எடுப்பவர்களின் நித்திரைக்கேடுக்கு நான் பொறுப்பில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s