Resident கணக்கை NROவாக மாற்றத் தனியார் வங்கிக்குச் சென்றிருந்தோம். நான் இப்போது சொன்னால் மிகைப்படுத்துதல் என்றே பலரும் நினைக்கக்கூடும். அந்தப் பெண் எங்கள் ஒருவருக்கு எடுத்துக் கொண்ட நேரத்தில், நான் குறைந்தபட்சம் இருபது பேரை Attend செய்திருப்பேன். எந்தப் பதற்றமுமில்லாது, ஒவ்வொரு தாளையும் புள்ளி மாறாது பார்த்துக் கொண்டே இருந்தார். அயல்நாட்டில் வங்கிக்கணக்கு, Work permit வைத்திருந்து, அடுத்த ஆறுமாதங்களுக்கு முடிவடையாத விசா இருந்தால் போதுமானது இல்லையா? ஆவணங்களை வாங்கிக்கொண்டதற்கான
ஓப்புகையை அளிப்பதற்கு மேலாளரிடம் போய் கேட்டு வருகிறேன் என்று போய் வந்தார். மொத்தம் மேலாளரிடம் போய் வந்தது பதினோரு முறை.
Retailல் இருப்பவர்களுக்கு Corporate தெரிவதில்லை. Corporateல் இருப்பவர்களுக்கு Forex தெரிவதில்லை. இவர்கள் பணியாற்றும் பிரிவிலேயே கூடுதல் ஐயாயிரம் கிடைத்தால் வேறு வங்கிக்கு மாறிவிடுகிறார்கள். கடைசிவரை மொத்த வங்கிப்பரிமாற்றங்கள் இவர்களுக்குத் தெரியப்போவதில்லை. நாற்பது லட்சம் (தொண்ணூறூகளின் ஆரம்பத்தில் பெரிய பணம்) LC documentஐ சரிபார்க்கையில், ஐந்து ரூபாய் வட்டி சேமிப்புக்கணக்கில் குறைந்து விட்டது என்று கோபமாக என் அறைக்குள் நுழைந்திருக்கிறார் ஒரு வாடிக்கையாளர். (அப்போது Manual interest). இவ்வளவிற்கும் முதன்மை மேலாளராக நான் 2007ல் வாங்கிய கடைசி மாதசம்பளம் எண்பதாயிரம், மற்ற Perks பதினைந்தாயிரம் இருந்திருக்கும். ஆறு இலக்க ஊதியம் கனவாக முடிந்து விட்டது வங்கிவேலையைப் பொறுத்தவரை.
ஏற்றுமதியில் முன்னணி நகரம் அது. Shipmentக்கு முதல் நாளிரவு கோடீஸ்வர முதலாளிகள் Machineக்கு அடியில் படுத்துத் தூங்குவார்கள். அவர் ஒரு Medium exporter. பலத்த அடி தாங்கமாட்டார். அவருக்குக் குடும்பத்தில் ஒரு பிரச்சனை. சரியாக நிறுவனத்தில் கவனம் செலுத்தவில்லை. வங்கியில் அனுமதித்த தொகைக்கு மேல் பத்துலட்சம் ரூபாய் வேண்டியிருக்கிறது. Shipment நாள் நெருங்கிவிட்டது. ஒவ்வொரு மணிநேரமும் இப்போது முக்கியம். பத்து லட்சம் அதிகம் கொடுக்கும் அதிகாரம் மண்டல மேலாளருக்கு மட்டுமே. மண்டல மேலாளர் மீட்டிங்கில் இருந்தார். மண்டல முதன்மை மேலாளர் புதிதாகச் சேர்ந்தவர். அவரைக் கேட்க முடியாது. Clearing time முடியப் போகிறது. Cheque return என்பது வாடிக்கையாளருக்கு எழ முடியாத அடி. பத்துலட்சக் காசோலையை Pass செய்தாகிவிட்டாயிற்று. மண்டல மேலாளர் நான் சிறுவனாக இருக்கும் போதிருந்தே தெரிந்தவர். ஆனால் அன்று கோபமாக ‘ எனக்குத் தெரியாது, Ratify செய்ய முடியாது’ என்று சொல்லி விட்டார்.’ மூன்று நாட்கள் கழித்து தபாலில் Ratification வரும்வரை நிம்மதி தொலைந்து போனது. இதுபோல் ஒவ்வொரு கிளையிலும் நூறுமுறை நடந்திருக்கும். இப்போது யோசித்தால், ஒரு காதல் தோல்விக்காகத் தற்கொலை முயற்சி செய்வது போலவே இதுவும் முட்டாள்தனமாகத் தோன்றுகிறது.