சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்களின் அமெரிக்க வடிவம். மைக்கேல் கல்லூரி படிக்கையில் ஏழுபேர்கொண்ட குழுவில் எட்டாவதாகச் சேர்கிறான். ஆரம்பத்தில் குழுவில் யாருக்கும் அவனைச் சேர்த்துக் கொள்வதில் விருப்பமில்லை, ஆன்டி என்பவனைத் தவிர. பின் மெல்ல மெல்ல இணைந்து விடுகிறான். பின்னாளில் மீதி ஏழுபேர் சராசரி மற்றும் சராசரிக்குக் கொஞ்சம் கூடுதல் வாழ்க்கை வாழும் பொழுது, இவன் மிகவும் பிரபலமான எழுத்தாளராகிறான். பல வருடங்கள் தொடர்பில்லாதிருந்து ஐம்பத்தி இரண்டு வயதில் அவன் ஆன்டியைச் சந்திக்க வருவதாகச் சொல்கையில் கதை ஆரம்பிக்கிறது.
மைக்கேல் வருவதற்கான நோக்கத்தில் கதையின் மையமுடிச்சு இருக்கின்றது. Goodreads மற்றும் Amazonல் பலருக்கு அது பிடிபடாத காரணத்தினாலேயே,.நல்ல எழுத்தாளரின் மிகச்சாதாரணகதை என்ற கருத்து பரவலாக இருக்கிறது. கதையில் உப்புசப்பில்லாத விஷயங்களைப் பேசும் போது, கதையின் உயிர்நாடி துடிப்பது வேறொரு இடத்தில் என்பதை அறிந்து கொள்ளும் ஆனந்தம் தனி. ஆன்டி ஒரு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர். நெருங்கிய நண்பனின்ஒரு புத்தகத்தைக்கூடப் படித்ததில்லை. மனைவியிடம் கணவன் முன்னர் தன்னுடைய நண்பி ஓரிரவில் என்ன செய்தாள் என்பதைச் சொல்கிறான். Fun ஆக அதையே மனைவி அடிக்கடி செய்கிறாள். இது போல் சில நுணுக்கமான விஷயங்கள் கவனத்தை ஈர்க்காமல் சிதறிக் கிடக்கின்றன. நேரடிக் கதைசொல்லல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும் என்று தோன்றுகிறது.