ஆசிரியர் குறிப்பு:
சென்னையில் பிறந்து, தில்லி, மும்பை போன்ற நகரங்களில் வசித்தவர். மத்தியஅரசின் நிறுவனம் ஒன்றில் உயர்பதவி வகித்தவர். தீவிர வாசகர். இது இவரது முதல் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு.
இந்த நூல், பலவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாகப் பணி ஓய்வுபெற்று, பல வருடங்கள் கழித்து அனுராதா, தன் முதல் மொழிபெயர்ப்புத் தொகுப்பின் மூலம் எழுத்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். இரண்டாவது, இவை அனைத்துமே இந்திய மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை. கடைசியாக இதில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் அனைவரும் பெண்கள். பெண்கள் என்பதற்கான எந்தவித சலுகையையும் எதிர்பார்க்காமல், Commonraceல் கலந்து கொண்டு, பலரையும் முந்தி இலக்கைத் தொடக்கூடியவர்கள்.
அம்ரிதா ப்ரீதம், கிருஷ்ணா ஸோப்தி, இஸ்மத் சுக்தாய், ஆஷா பூர்ணாதேவி போன்ற மாஸ்டர்கள், தமிழில் பரவலான வாசகர்களால் இன்னும் அறியப்படாமலேயே இருக்கிறார்கள். இவர்களது முக்கிய படைப்புகள் தமிழுக்கு இந்நேரம் வந்திருக்க
வேண்டும். நம்மில் பலருக்கு வாயில் நுழையாத பெயருள்ள நாட்டிலிருந்து எழுதுபவர் நன்றாக எழுதுவார் என்ற கற்பிதம் இருக்கின்றது.
அம்ரிதாவின் அங்கூரி பல்லடுக்குகள் கொண்ட கதை. முதலாவதாக கிராமத்தில் பெண்கள் எவ்வாறு Exploit செய்யப்படுகின்றனர், திருமண வாழ்க்கைக்கு அவர்கள் சம்மதம் தேவையில்லை, பெண்கள் படிப்பது பாவம் என்ற பிற்போக்கு நிலை குறித்துப் பெண்ணியம் பேசுகிறது. இரண்டாவதாக பெரிதும் உரையாடல்கள் மூலம் நகரும் கதையில் வரும் இரண்டு பெண்கள், வேறுவேறு உலகத்தைச் சார்ந்தவர்கள், ஆனாலும் அவர்களுக்குள் பகிர ஒரு அந்தரங்கம் இருக்கின்றது. அடுத்ததாக இரு ஆண்களின் உருவ அமைப்பு குறித்த ஓரிரு வரிகள் வாசகரைத் தயார்நிலைக்குக் கொண்டு வருகின்றன. இலக்கியப் படைப்புகளில் சிறுகுறிப்புகள் முக்கியமானவை. நான்காவதாக, ஆசைக்கும், பாவபுண்ணியத்திற்கும் நடக்கும் நித்திய போராட்டத்தில் ஆசையே வெற்றி கொள்வது. அங்கூரியை, அம்ரிதா மாவு என்றிருப்பார். சப்பாத்தி உருண்டைக்கு, இழுத்து அப்பளம் இட, எண்ணெய்யில் பொரித்தால் உப்பி வர என்று பல மாறுதல்கள் கொள்ளும் மாவு. பார்வைக்கு எளிமையாகத் தோன்றும் இந்தக் கதையை எழுதுவது எளிதல்ல. இந்தியாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.
சாதாரண மாமியார்-மருமகள் Ego clash ஆக முடிந்திருக்க வேண்டிய கதை கிருஷ்ணா ஸோப்தியின் சரிகை வேலைப்பாடுகளால் நல்ல கதையாகி இருக்கிறது. குர்ரத்துலைன் ஹைதரின் கதையில் மனம்போன வாழ்க்கை வாழும் பெண் அவளை நியாயப்படுத்திக் கொள்கிறாள். இஸ்மத் சுக்தாயின் போர்வை கதை பெரும் சர்ச்சைக்குள்ளாகி அவரை லாகூர் நீதிமன்றத்தில் ஆஜராக வைத்த கதை. (அது ஏன் தொகுப்பின் நடுவே முகம்மூடி போர்த்தி ஒளிந்து கொண்டிருக்கிறது?) ஆஷா பூர்ணா தேவியின் கதையில் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்வது எதற்காக என்பது கதையின் கடைசி வரியின் டிவிஸ்டில் தெரிகிறது. மன்னு பண்டாரி ஐம்பது வருடங்களுக்கு முன்னரே அருமையான உளவியல் கதையை எழுதி இருக்கிறார். உஷா பிரியம்வதாவின் கதை நிதர்சனம். லாட்டி பயங்கரம்.
பதினான்கு கதைகள் கொண்ட தொகுப்பு. எட்டு இந்திய மொழிகளில் எழுதப்பட்டு, இந்தி மூலமில்லாதவை, இந்திக்கு மாற்றம் செய்யப்பட்டு அதிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எல்லாக் கதைகளும் ஒரே தரமானவை என்று சொல்ல முடியாது, ஆனால் எல்லாமே சராசரித் தரத்தை மிஞ்சியவை. இரண்டு மொழிகள் தெரிந்து மொழிபெயர்ப்பது வேறு, அந்தக் கலாச்சாரத்தின் நடுவே சிலகாலம் வாழ்ந்து பின் மொழிபெயர்ப்பது என்பது வேறு. அந்த Advantage அனுராதாவின் மொழிபெயர்ப்புக்குக் கிடைத்திருக்கிறது. மேலும் இந்தக் கதைகளின் தேர்வுக்காகவும் அனுராதாவிற்கு முதுகில் ஒரு ஷொட்டைத் தாராளமாகக் கொடுக்கலாம்.
பிரதிக்கு:
சிறுவாணி வாசகர் மையம் 99409 85920
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 220.