ஆசிரியர் குறிப்பு:

இலங்கை யாழ்/நயினா தீவில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இதற்கு முன் நான்கு நாவல்களை எழுதியிருக்கும் இவரது சமீபத்தில் வெளிவந்த ஐந்தாவது நாவல் இது.

என்னுடைய சிறுவயதில் கேட்ட இலங்கை வானொலியின் வர்த்தகசேவை தமிழ் நிகழ்ச்சியில், பக்திப்பாடல்களில் இந்து, கிறிஸ்துவ, முஸ்லீம் பாடல்கள் ஒலிக்கும். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் பிரச்சனையின் போது மும்மதத்தினரும் கூடித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இலங்கையிலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும், மதத்தின் பெயரால் தமிழர்கள் தனித்தனியாகும்படி ஆகிப்போனது. இலங்கையில் முஸ்லீம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது தங்களைத் தமிழராக அறிமுகம் செய்து கொள்வார்கள்.

ஆக்காண்டி என்பது ஒரு பறவை. மட்டக்களப்பின் நாட்டுப்பாடல்களில் இடம்பெற்ற பறவை. இந்த நாவலின் தலைப்புக்கு அந்தப்பெயர் கச்சிதமாகப் பொருந்துகிறது. இலங்கை ராணுவம் சோனகர்களுக்கு (முஸ்லிம்கள்) ஆயுதங்கள் வழங்கி, ஊர்க்காவல் படையை அமைத்து தமிழர்கள் மேல் நடத்திய Organised Crimes தான் இந்த நாவலின் மையச்சரடு.

உயிருக்குப் பயந்து ஓடும் கூட்டத்திடம் இருந்து நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, புதிய நிலஉரிமைகள் சோனகர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஆங்கிலேயர் செய்த அதே பிரித்தாளும் சூழ்ச்சி. இனி இவர்கள் ஒருபோதும் ஒன்றாய் இருக்க வாய்ப்பேயில்லை. நகைகள், கால்நடைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. பெண்கள் வல்லுறவுகளுக்குப் பின்னும் பிழைத்திருந்தால் நிர்வாணமாக நடத்திச் செல்லப்படுகிறார்கள். இனவழிப்பு என்பது கும்பலாகக் கொல்வது, இலங்கை ராணுவத்தால் ஒரளவிற்கு மேல் இயங்க முடியாது, என்னவிருந்தாலும் ராணுவ சட்டதிட்டங்கள் கட்டுப்படுத்தும், ஆனால் ஊர்க்காவல் படைகளுக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை, பிஞ்சுக் குழந்தைகளைக் கூட வெட்டிக் கொல்லலாம்.

இந்த நாவல் ஒரு முழுமையான அரசியல் நாவல். சமகால வரலாற்று சம்பவங்களை தன்னகத்தே கொண்டிருப்பதால் Historical novel. வாசு முருகவேல், புனைவை விட அதிகமாக நடந்த நிகழ்வுகளை நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். ஊர்க்காவல் படையின் அத்துமீறல்கள், தமிழினம் சாய்ந்தபின் சிங்களவருக்கும் சோனகர்களுக்கும் நடக்கும் மோதல்கள், தமிழர்கள் பெரும்பான்மையாகச் செல்லும் தேவாலயங்களில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் என்று சமகாலச் சம்பவங்கள் பலவும் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. புத்தபிக்குகள் நவீன நாஸிகளாகிறார்கள்.

கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் ஆக்காண்டி பாடலுடன் நாவல் முடிகிறது. தன் குஞ்சுகளை ஒவ்வொன்றாய் இழக்கும் தாய்ப்பறவையின் சோகம். ஈழத்தமிழர்களில் பாதிக்கு மேல் இறந்து போனார்கள், இல்லை வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். பெரிய பணம் லஞ்சம் கொடுத்தால் குற்றவாளிகளும் இலங்கையில் இருந்து தப்பிக்கமுடியும் என்பது பல நூல்களில் வரும் நிதர்சனம். வாசு அங்கங்கே பகடியை உபயோகிக்க யத்தனித்திருந்தாலும், இரத்த வெள்ளத்தில் அது சுவடே தெரியாது மறைகிறது. இந்த நாவல் ஒரு ஆவணம். வாசுவால் கூட இதை ஈழத்தில் இருந்து கொண்டு எழுதியிருக்க இயலாது. இதற்காக மட்டக்களப்புத் தமிழர்கள் வாசுவிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ.180.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s