ஆசிரியர் குறிப்பு:

திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இதற்கு முன் நான்கு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவல் முதலியன வெளியாகியுள்ளன. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

இரண்டு வருடங்கள் முன்பு லாவண்யா என்னிடம் தகவல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட தமிழ் படைப்புகள் குறித்துக் கேட்டபோது உப்புக்குச் சப்பாணியாய் ஒன்றிரண்டு நூல்களைச் சொன்ன நினைவு. துறைசார்ந்த எழுத்துகள் தமிழில் எப்போதும் குறைவு. இங்கே எல்லாவற்றைப் பற்றியும் எல்லோரும் எழுதி மகிழ்வது இயல்பு. துறைசார்ந்த எழுத்துகள் அருகிய சூழலில் ITஐ மையமாகக் கொண்ட சிறுகதைகள் இவை.

கண்ணாடிக் கட்டிடங்களில், அழகான உடைகளில் நவநாகரீகமாக நடக்கும் மனிதர்களின் பின்னிருக்கும் வரலாறு இந்தக் கதைகள். எப்போதும் பாதுகாப்பில்லாது உணர்கிறார்கள், குடும்பத்தை விட வேலையைக் காப்பாற்றிக் கொள்வது அல்லது குடும்பத்திற்காக வேலையை விடாமல் பற்றிக்கொள்வது என்ற Vicious circleல் மாட்டிக் கொள்கிறார்கள், குழுவாக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உடன் இருப்பவர்களுக்கு மனஉளைச்சல் கொடுக்கிறார்கள், தங்கள் தவறை மறைக்க பலியாடுகளைத் தேடுகிறார்கள், நாள் முழுதும் வெளியில் இருந்து மார்பில் பால் கனக்க வருபவளும் பாலூட்டுவதை விட அலுவலகச்சிக்கல் முடிச்சை அவிழ்த்ததில் அதிக ஆசுவாசம் அடைகிறாள், மாதம் வரும் பணத்தை நம்பி ஏற்கனவே செய்து கொண்ட
பொறுப்புகள் அதிகநேர வேலைக்கும், வெளிநாட்டுக்கும் துரத்துகின்றன. அழகான, விலையுயர்ந்த ஷோபாவில் ஒருநிமிடம் உட்கார நேரமின்றி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

லாவண்யா பார்த்த, அனுபவித்த விஷயங்களைத் தாண்டிக் கதைகள் எழுதுவதில்லை. காடுகொடியில் இந்த நேரத்தில் போக்குவரத்து அதிகம், காஜியாபாத்தில் இருந்து இந்த வழியில் கார் சென்றது என்பது போன்ற விவரணைகள் இவர் கதைகளில் அதிகம். ‘பறத்தல்’ கதை ஒரு Classic example. Sweden போகாமல், செலினாவைச் சந்திக்காமல் அந்தக் கதையை எழுத முடியாது. Scandinavia பெண்களுக்கும் இந்தியப் பெண்களுக்குமான கலாச்சார வித்தியாசத்தைச் சொல்லும் கதை. போகாத ஊர்களில் கற்பனைக்குதிரையைத் தட்டிப் புழுதியைக் கிளப்புவர்கள் கதைகளுக்கும் இதற்குமுள்ள மிகப்பெரிய வித்தியாசம் Authenticity.

மனம் விரும்பியவனுடன் முதல் கூடலை முடித்த முகபாவத்தைக் கொண்ட பெண், கையின் விரல்கள் போல் மடல்விரித்த கல்யாணமுருங்கை, குல்மஹர் மலர் நீலக்கம்பளம் விரிப்பது என்பது போல லாவண்யாவின் கதைகளின் பெண்கள் ஓடிக் கொண்டேயிருக்கும் இயந்திர வாழ்க்கையில் ரசனையைக் கைவிடாது இருக்கிறார்கள். முரட்டுப்பச்சை, உடன்பாட்டறிக்கை, புகை போன்ற கதைகளில் ஆண்களை மையக்கதாபாத்திரமாக்கி அவர்கள் கோணத்தில் கதைகளை நடத்திச் சென்றிருக்கிறார். உளமாரக் காதலிப்பவனும், பெண்ணை டீஸ் செய்பவனாக இல்லை அவள் அடுத்த ஆணுடன் பேசினால் சந்தேகப்படுபவனாக இருக்கிறான். ஆண்களில் நல்லவர்களே இல்லை போலிருக்கிறதே!

பத்து கதைகள் கொண்ட தொகுப்பு, எல்லாமே இதழ்களில் வெளியானவை. விமானத்தூக்கத்தில் கொழுந்தனைக் கனவு காணும் பெண், லாவண்யாவின் Special touch. மீறல்கள் அழகியல் இலக்கியமாக மாறுவது அவை நிதர்சனத்துடன் கைகோர்த்து நடைபயிலும் போது தான். தொகுப்பை படித்து முடிக்கையில் சிறு பெண்ணாகப் பார்த்ததை, இடைவெளிக்குப்பின் சேலைகட்டி பார்த்ததைப் போன்ற மகிழ்வு ஏற்படுகிறது. பரவலான வாசிப்புக்கும், கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டிய தொகுப்பு. Lavanya at her Literary best in this collection.

பிரதிக்கு:

காலச்சுவடு பதிப்பகம் 4652- 278525
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 200.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s