ஆசிரியர் குறிப்பு:
திருப்பூரில் பிறந்தவர். நைஜீரியாவில் பதினான்கு ஆண்டுகள் வசித்துப்பின், தற்போது சென்னையில் வசிப்பவர். ஆங்கில முதுகலைப்பட்டம் பெற்றவர். ஒரு கவிதைத் தொகுப்பும், இரண்டு மொழிபெயர்ப்பு நாவல்களும், ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு.
எட்டு வெவ்வேறு ஆசிரியர்களின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஆப்பிரிக்க, லத்தீன்அமெரிக்க, அமெரிக்க, ஜப்பானிய, எத்தியோப்பிய, அரேபிய மொழிகளின் கதைகள். Odd man out ஆக மராத்திக் கதை ஒன்றும் இருக்கிறது. தங்கத்தின் நிறத்தைத் தோற்கடித்து தகதகவென மின்னும் பெண் குழந்தையின் கன்னத்தில் வைக்கும் திருஷ்டிப்பொட்டு இந்த மராத்தியக்கதை.
முதலில் மிகமிக பாப்புலரான இஸபெல் அயாந்தே மற்றும் ஹிரோமி கவாக்கமி கதைகள். கவாக்கமியின் கதை கீழைத் தத்துவார்த்த மனத்தைத் தொடரும் கதை. பத்து சதவீதத்தில் இருத்தலும் இல்லாமையும் இடம்பெயர்கிறது. கவாக்கமியின் மூன்று நாவல்களுமே Powerful. பெண்களின் எண்ண ஓட்டங்கள் அழகாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கும். இஸபெல் அயாந்தே ஒரு மாஸ்டர். மற்ற எழுத்தாளர்கள் மெலோடிராமாவாக எழுதி இருக்கக்கூடிய கதையில் எவ்வளவு Depthnessஐக் கொண்டு வந்திருக்கிறார்!
ஆப்பிரிக்கக்கதை ஒரு திருட்டை மட்டும் சொல்லவில்லை. மேல்தட்டு, கீழ்த்தட்டுப் பெண்களின் நடத்தையையும் சொல்கிறது. அடுத்த வீட்டுக்குச் சேர்த்து சமைப்பவளையும், உடன்பிறந்தவளிடம் பணமில்லை என்றதும் பாராமுகம் காட்டுபவளையும் ஒரேதட்டில் எப்படி நிறுத்த முடியும்? முதலாமவள் படபடவென்றும் இரண்டாமவள் தேனொழுகவும் பேசுகின்றார்கள். இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் கலாச்சாரத்தில் பெரிய வித்தியாசமில்லை.
அம்புரோஸ் பியர்ஸின் கதை, கவிதையாக விரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதையில் இவர் உபயோகித்த யுத்தியை இந்நாளில் Shehan Karunatilakaவரை எத்தனைபேர் உபயோகித்து விட்டார்கள். Civil war காலத்திய கதைகள் பலவும் மிக சுவாரசியமானவை.
ரெபெக்கா லீ யின் கதை இரண்டு கலாச்சார வித்தியாசங்கள், Depression, Deception, மீண்டெழுதல் முதலியவற்றைக் கொண்ட கதை. இரண்டு தலைமுறைப் பெண்களுக்கு ஒரே விதமான பிரச்சனை வந்தாலும் ஒரே முடிவை எடுப்பதில்லை என்பது அமெரிக்காவிற்கு மட்டுமன்றி உலகின் எந்த நாட்டிற்கும் பொருந்தும்.
மெரோன் ஹெட்ரோவின் எத்தியோப்பியக் கதை ஒரு மாஸ்டர் பீஸ். வாசிக்க மிக எளிமையாக இருக்கும் கதைக்குள் எத்தனை உள்ளீடுகள்! ஒரு அதிகப்படியான வார்த்தை இல்லாமல், அநாவசிய விளக்கம் இல்லாமல் கதை எழுத இதுபோன்ற கதைகளைப் படிக்கலாம்.
ஈராக்கின் எழுத்தாளர் ஹஸன் பிஸாஸிம்மின் கதையில் Kafkaவின் கதைகளில் வருவது போன்ற ஒரு Absurd element கதையை உயிர்ப்புடன் கொண்டு வந்திருக்கிறது.
கடைசியாக கதாநாயகி லதா அருணாச்சலம்.
லதாவின் மொழிபெயர்ப்புத் துல்லியத்தைப் பற்றி ஏற்கனவே அனைவரும் அறிந்ததால் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு ஆச்சரியமூட்டுவது இவரது Story selection. ஏழு கதைகளுமே நிறைந்த வாசிப்பனுபவத்தை அளித்து, அறியாத கலாச்சாரக்கூறுகளை அறிமுகம் செய்பவை.
சிறந்த உலகச்சிறுகதைகளை நல்ல மொழிபெயர்ப்பில் வாசிப்பது, அடிக்கடி Fantasize செய்த பெண், அவசரமா போகணும், பைக்கில் பின்னால் ஏறிக்கொள்ளட்டுமா என்று கேட்டுவிட்டு நம் முகத்தை உற்றுப்பார்ப்பதற்கிணையான ஆனந்தம்.
பிரதிக்கு:
சால்ட் பதிப்பகம் 93 6300 7457
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 275