முன்னுரை என்பது எப்போதும் கதைகளுக்கான வரைபடம். வாசகர்களை நுழைவாயிலில், எதைப் படிக்கப் போகிறோம் என்பதை தயார் படுத்துவது அதன் பணி. ஆங்கிலத்தில் Prologue என்பது
நூலுக்கான பின்கதையைச் சொல்லி வாசிக்க ஆரம்பிக்குமுன் அதன் தொனியைச் சொல்வது, Preface என்பது வழக்கமாக ஆசிரியர் எந்த சூழ்நிலையில் எதற்காக இந்த நூலை எழுதினேன் என்று சொல்வது,
Foreword என்பது விமர்சகர்களால் இது போன்ற நூல்கள் குறித்த ஒரு பார்வை, introduction என்பது ஆசிரியரோ, மற்றவர்களோ நூல் குறித்த உபரித் தகவல்களைச் சொல்வது, ,ஆனால் இந்த நான்குமே தமிழைப் பொறுத்தவரை முன்னுரை என்ற ஒரே சொல்லில் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான முன்னுரைகள் கதைகளின் பெரும்பகுதியைச் சொல்லி வாசிப்பனுபவத்தைப் பாழ்செய்கின்றன.

சுஸந்த மூனமல்பேயின் கதைகளில் மனிதர்கள் ஏதாவது உறவுச் சிக்கல்களில், சிக்கிக்கொண்டு தப்பிக்க வழிதெரியாது தவிக்கிறார்கள். பெண்கள் தங்களது சமுதாயநிலை மாறியதும் காதலித்தவனை மறந்து போகிறார்கள் அல்லது ஆண்கள் காதல் என்ற பெயரில் பெண்களுடன் உடல்ரீதியாகப் பழகி விட்டு செல்கிறார்கள்.
வேறு துணைகளுடன் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள், முஸண்டாஸ் மரத்திற்குப் பதிலாக செம்பருத்திச் செடியை நடுகிறார்கள். ‘இகாரஸின் வீழ்ச்சி’ கதையில் ஒருபாலின உறவு. எப்போதும் ஆண்-பெண் உறவுகளில் பெண்கள் அநேகநேரம் உணர்வுச்சிறையில் சிக்கிக் கொள்வதைப் போல ஆண்களில் பெண்பாத்திரத்தை எடுத்துக்கொண்டவன் மாட்டிக் கொள்கிறான்.

கைவிடல் என்பது பலகதைகளில் திட்டமிட்டே நடக்கிறது. ஆணோ பெண்ணோ யாராவது ஒருவர், மற்றவர் காதல் வெள்ளத்தில் மூழ்கியதும் கைவிடுகிறார்கள். மணம் செய்து கொள்வதற்காக, வேலை முடிந்ததும் கழட்டி விடுவதற்காக, குடும்ப சூழல் காரணமாக, இன்னுமொரு இடத்தில் அவள் எதிர்பார்த்த எதிர்வினையை செய்யாத காரணத்திற்காக,
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத பெண்ணையும் வீடியோ எடுத்து இமேஜ் படுகொலை செய்யும் கைவிடலாக என்று பலவும் நிகழ்கிறது. அடுத்தவரின் குற்றம் குறைகளுக்காக எந்த கைவிடல்களும் நேர்வதில்லை, அதே நேரத்தில் கைவிட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் நிலைகுலைந்து போவதுமில்லை இவர் கதைகளில்.

கதைகளில் நிறைய யுத்திகளைக் கையாளுகிறார். ‘விஜித்தின் வளையல்கள் யுகம்’ கதையில் அத்தனை காதல் கதைகளைச் சொல்பவன் கடைசியில் ஏன் துவண்டு போக வேண்டும் என்பதில் கதையின் மையமுடிச்சு இருக்கிறது. கதையில் இரண்டு சாத்தியங்களில் கதை நகர்வது சில கதைகளில் நேர்கிறது. எழுத்தாளர் கதை முடியும் நேரத்தில் கதைசொல்லியாக வருவதும் நடக்கிறது. ஒரு கதையில் கதாபாத்திரத்தின் மேல் பரிவு கொண்டு அவனுக்கு நிஜத்தில்(கதையில்!) இல்லாத பெண்ணை அவனுக்கு உருவாக்கி இன்பமாக இருக்க வைக்கிறார். இரண்டு கடிதங்களின் மூலம் கதை எதிரெதிர் கோணங்களில் இருந்து நடக்கிறது. ஐந்து விளக்குகள் கதையில் நிஜமும் நிழலும் அருகருகே பயணித்து ஒன்றுடன் ஒன்றாய் கலக்கின்றன.

இவருடைய கதைப்பெண்கள் வித்தியாசமானவர்கள். அந்தஸ்து மாறியதும் மாறும் பெண், இழந்த காதலை இன்னொருவனிடம் தேடும் பெண், மனதில் ஒளிந்திருந்த காதலைப் பலவருடங்கள் கழித்து கண்டுபிடிக்கும் பெண், காதலனைத் தேடித் தொடர்பு கொண்டு இவள் அவனைப் பொருட்படுத்தவில்லை என்று கூறும் பெண்,
இழந்தது குறித்துக் கவலையின்றி எதை எடுத்துக் கொள்ள முடியுமோ அதைக் கொண்டு முன்னேறிய பெண் என்பது போல் ஒருவருக்கொருவர் வித்தியாசமான குணஅமைப்பு கொண்ட பெண்கள்.

பத்து கதைகள் கொண்ட தொகுப்பில் ஒரு கதையில் கூட முடிந்த போரின் சாயலே இல்லை (ஒரு கதையில் குண்டு வெடித்து மரணம் நிகழ்கிறது). ஒரு கதையில் நவம்பர் இருபத்தேழு உயிர்நீத்த போராளிகளுக்கான நினைவு தினத்தில் விளக்கேற்றுவதை, பௌத்த பிக்குகள், சிங்கள அடிப்படைவாதிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மெல்லமெல்ல உணர்வு தலையெடுத்து விடக்கூடாது, முளையிலேயே கிள்ள வேண்டும் என்ற எண்ணமாக இருக்கலாம். ரிஷான் சிங்கள இலக்கியத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள நமக்கான வழிகாட்டியாக சில வருடங்கள் உடன் பயணித்து வருகிறார். தொடர்ந்து கவனிக்கையில் சிங்கள இலக்கியத்திற்கு நல்ல எதிர்காலம் இருப்பது தெளிவாகின்றது.

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 230

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s