சுஜித் ப்ரசங்க:
இலங்கையின் காலி மாவட்டத்தில் பிறந்தவர். கவிஞர், பாடலாசிரியர், நாவலாசிரியர். இதுவரை நான்கு நாவல்களை எழுதியுள்ள, இவரது மூன்றாவது நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பு இந்த நாவல்.
ரிஷான் ஷெரீப்:
தமிழ் எழுத்தாளர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்தில் இருந்தும் சிங்களத்தில் இருந்தும் பல முக்கிய படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்புக்காகப்
பல விருதுகளை வென்றவர்.
இலங்கை புதிர்களின் தேசம். தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் முப்பது சதவீதத்திற்கும் குறைவான மொத்த மக்கள்தொகை கொண்ட இந்த சிறிய தேசத்தில் நூறு குழுக்கள். மலையகத்தில் தேயிலைத் தோட்ட வேலையை சிங்களவர்கள் ஒதுக்கியதால், தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலேயர்களால், அவர்களது வழக்கப்படி, அடிமைகள் போல் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் அங்கேயே நூற்றாண்டுகளாகத் தங்கிய போதும் அவர்கள் மற்றவர்களுக்குச் சமமாக நடத்தப்படுவதில்லை என்பது வரலாற்று உண்மை.
சாமிமலையில் தேயிலைத் தோட்டவேலை செய்பவர் குடும்பங்களுக்கு மிகக்குறைந்த வசதியில் (வசதி என்பதன் Literal meaningஐத் தவிர்க்கவும்) லயன்வீடுகள். கடுமையான உழைப்புக்கும் தூக்கத்திற்கும் இடையே சின்ன இடைவெளியில் குடும்பத்தைப் பார்க்கலாம் என்ற ஒரு மகிழ்ச்சி வாழ்க்கையைக் கடக்க உதவும் நம்பிக்கைமுனை. ஆனால் எல்லோரும் கைவிட்ட மக்களை இயற்கையும் கைவிடுகிறது. மலைச்சரிவு, லயன் வீடுகளின் குடும்பங்களை மண்ணுக்கடியில் விதைக்கிறது. அந்த விபத்தில் மொத்தக் குடும்பத்தையும் இழந்த தீபாவின் கதை இது.
அவள் மூலமாக மலையக மக்களின் கதை.
ஒரு சிங்களநாவல் முழுவதும் தமிழர்களின் கதை வருவது ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் இலங்கை ராணுவத்தினர் இஷ்டப்படும் பெண்ணை என்ன செய்தாலும் கேள்வியில்லை, மீறி முறையிட்டால் சுட்டுவிடுவார்கள் என்று சித்தரிப்பது. ஒரு இலக்கியம் எப்போது, இனம், மதம், மொழி போன்ற பற்றுகளை விட்டு உண்மைகளை புனைவின் பாவனையில் சொல்கிறதோ அப்போது அது வேகமாக வளரத் தொடங்குகிறது. கருணா திலகவைத் தொடர்ந்து எந்த சார்பும் எடுக்காத சுஜித் ப்ரசங்க வின் எழுத்து.
நாவல் இரண்டு காலகட்டங்களில், முன்னும் பின்னுமாய் நகர்கிறது. இரண்டு கதாபாத்திரங்களின் வாக்குமூலங்கள், பெரும்பாலான கதைப்போக்கைத் தீர்மானிப்பதுடன், ஒரு பாத்திரத்தின் நீள்வெட்டுத் தோற்றத்தின் வரைவாகவும் அமைகின்றன. வர்க்கபேதங்களில் நன்றி என்ற உணர்ச்சிக்கு இடமெப்போதும் இருப்பதில்லை.
தீபாவின் Coming of age story இது. சிறுவயதில் ஏராளமான அனுபவங்களைச் சுமப்பவர்களின் உடல்,மன வயதுகள் சமநிலையில் இருப்பதில்லை. சுஜித் தீபாவை அவரறியாமல் நேசித்து விட்டதாகத் தோன்றுகிறது. சென்டிமென்டல் காட்சிகளைத் தவிர்த்து, நுட்பத்தை ஏற்படுத்த அது தடையாக இருந்திருக்கும்.
போர் முடிந்த காலகட்டத்தில் நாவல் ஆரம்பிக்கிறது. மூன்றுமுறை கருக்கலைப்பு செய்தவள் என்பதைவிட அவள் தமிழச்சி என்பதற்காக மணமுடிக்க, சிங்களச்சிப்பாய் அதிகம் அச்சப்படுகிறான். நாவலின் முக்கியமான முடிச்சு அவிழாமலேயே முடிகிறது, நாவலில் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதால். ரிஷானின் மொழிபெயர்ப்பு வளமையைப் போலவே இனிமையும், எளிமையும். விதி வலியது என்பது எப்போதும் எளியோருக்கு மட்டுமே பொருந்துவது.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 250.