ஆசிரியர் குறிப்பு:
திருவாரூர் மாவட்டம், திருப்பேருவேளூர் என்கின்ற மணக்கால் அய்யம்பேட்டை இவரது சொந்த ஊர். இருபது வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறார். ஏற்கனவே இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வெளிவந்த நான்காவது சிறுகதைத் தொகுப்பு.
கிருத்திகாவின் கதைகள், பெண்களின் உலகை, குறிப்பாக நடுத்தரவயதுப் பெண்களின் உலகைத் திரைவிலக்கிக் காட்டுபவை. பெண்கள் அவர்களுக்குள் பேசும் பேச்சுகள் மட்டுமன்றி அவர்களது அகஉணர்வுகளை, அலைபாய்தல்களை துல்லியமாகச் சித்தரிப்பவை. இவரது இன்னொரு பலம் விவரணைகள். எடுத்துக் கொண்ட கதையை படுபாந்தமாக மாற்றும் சக்தி கொண்ட விவரணைகள்:
” அரிசி களைந்த தண்ணீரைத் தொட்டி முற்றத்தில் ஊற்றிவிட்டு நிமிர்ந்தவளுடைய நெற்றியில் மினுக்கிய வியர்வையில் சிங்கர் சாந்துப்பொட்டு கோடு போல் மூக்கில் வழிந்திருந்தது.”
‘கற்றாழை’ பெண்ணுடலின் இன்னொரு பக்கத்தைச் சொல்லும் கதை. ஆணுறுப்பு அடுத்தவனை விடச்சிறியது என்று பையன்கள் மனம் வருந்துவது போல, பெண்கள் மார்பு சிறிதாக இருந்தால் வருந்துகிறார்கள். மிக அழகான, கச்சிதமான உடல் அமைப்பு கொண்ட பெண்களின் பெண்கள் எப்போதும் வெளிப்பார்வைக்கு சுமாராக இருப்பது விதை ஒன்று போட சுரை ஒன்று முளைப்பது. White discharge பற்றியும் அதன் Smell குறித்தும், அதனால் வரும் மனகிலேசத்தையும் நுட்பமாகக் கதையில் கொண்டு வந்திருக்கிறார். தீக்கொன்றை மலரும் பருவத்தில் பிந்தா பத்திகளை ஏற்றி வைப்பாள்.
வியர்வை கசகசப்பில் புடவையின் இடுப்புப்பகுதி நசநசக்கிறது, வேகமாக நடந்து நடந்து தொடைகள் உரசி காயமாகிறது, பிள்ளையை சுமக்கும் உடம்பில் கொலுசு அழுத்தினாலும் குழிவிழுகிறது, வெள்ளைப்படுதலை யாரும் பார்க்காத போது போட்டிருக்கும் துணியால் அழுந்தத் துடைக்க வேண்டியதாகிறது, நாற்பது வயதில் காமம் உப்பு போல சிட்டிகை போதும் என்று தோன்றுகிறது, பால் கொடுக்கும் காம்பில் வெடிப்பு ஏற்பட்டு தாளாத வலி உண்டாகிறது. கிருத்திகாவின் கதைகளைப் படிக்கையில் பெண்களின் உலகிற்குள் புகுந்த கூச்சம் கொஞ்சமாய்த் தொட்டுப் பார்க்கும்.
அனுபவம், கண்கூடாகப் பார்த்தவையே என் கதைகள் என்று கிருத்திகா அடிக்கடி சொல்லி இருக்கிறார். பிரதானப் பாத்திரங்களாகப் பெண்களே பெரும்பாலும் வரும் கதைகளில் Artistic touch அவற்றை இலக்கியமாக்குகிறது. ‘கடன்’ கதை, மூளை வளர்ச்சி இல்லாத பதின்மவயது சிறுவனை அன்னையின் பார்வையில் முழுக்கக் கொண்டு நகரும் கதை. தம்பதிகள் மத்தியில் பேச்சு வார்த்தை குறைகிறது. வெளியாட்களுக்குப் பிள்ளை காட்சிப் பொருளாகிறான். எல்லாமே சரி தான், ஆனால் அந்தக் கடைசிப் பத்தி கதையை அப்படியே திருப்பிப் போடுகிறது. நீண்ட சாலையில் வேகமாக வந்த கார் ஒரு விபத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கும் காட்சி போல மனம் ஒருமுறை Slow motionல் முன்னர் சொல்லியவற்றை ஓட்டிப் பார்க்கிறது. ‘படிமங்கள்’ கதை Alzheimer நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. Nicholas Sparks, Note Book என்ற நாவல் முழுக்கச் சொல்லிச் செய்யமுடியாத தாக்கத்தை கிருத்திகா இந்த சிறுகதையில் செய்திருக்கிறார். தேர்ந்த சிற்பிகளுக்கு மட்டுமே சித்திக்கும் செய்நேர்த்தி இந்தக் கதையில். ‘ மணப்பு’ கதையிலும் கூட போகிற போக்கில் சொல்வதுபோல் வரும் மாமா பற்றிய ஓரிரு வரிகளுக்குள் அம்மாவுக்கும், அத்தைக்குமான பிணக்கு ஒளிந்திருக்கிறது.
ஒன்பது சிறுகதைகள் கொண்ட குறுந்தொகுப்பு இது. என்னுடைய பார்வையில் ‘இடைவேளை’, ‘உயிர்த்தெழல்’
இரண்டும் Flat ஆக முடிந்ததாகத் தோன்றுகிறது. இரண்டுமே நல்ல கதைக்கருக்கள், சிறப்பான உள்ளடக்கம், செறிவான விவரணைகள் கொண்டவை. Shock value ஏதுமின்றி நல்ல அழுத்தமான முடிவிற்கு முழுத்தகுதி கொண்டவை. இது நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்கும் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் கிருத்திகா முன்னேறி சில அடிகளேனும் நடந்திருக்கிறார். புதிதாக சிறுகதை எழுத ஆரம்பிப்பவர்களுக்குக் கிருத்திகாவை நான் பரிந்துரை செய்கிறேன்.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652- 278525
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 140.