ஆசிரியர் குறிப்பு:
சென்னை சிந்தாதிரிப் பேட்டையைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆனந்தவிகடனில் சிலகாலம் பணிபுரிந்து பின் தற்போது திரைப்படங்களில் கதாசிரியராக, வசனகர்த்தாவாகப் பணிபுரிகிறார். ‘பேட்டை’ நல்ல வரவேற்பு பெற்ற இவரது முதல்நாவல்.
அசடு நாவலின் கணேசனை யாரும் மறக்க முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, சகல அவமானங்களையும் சந்தித்து, அநாதையாய் இறந்து போகிறவன். இந்த நாவலின் மையக்கதாபாத்திரம், கோசலை மூன்றடி உருவம், போறாததுக்கு முதுகில் கூன். கணேசனைப் போலவே பெற்றோர், உறவினர், உடன் பிறந்தான், சமூகம் என எல்லோராலும் ஒதுக்கப்படுபவள். ஆனால் கோசலை கணேசன் நடந்த பாதையின் எதிர்திசையில் பயணத்தைத் தொடங்குகிறாள்.
நாவலின் ஆரம்பம், திரைப்படத்தில் கதாநாயகி அறிமுகம் போலவே அமர்க்களமாக வருகிறது. ஆனால் கதை மெல்லமெல்ல கோசலை என்ற கதாபாத்திரத்தின் முழுச்சித்திரத்தை நம் கண்முன் வரைய ஆரம்பிக்கிறது. தவமணிச்சித்தியிடம் அப்பாவின் Advances இவளுக்குப் புரிவது கண்டு அவர் பயப்படுவது, கணேசன் முற்றிலும் இவளைச் சார்ந்து இருப்பது, சமையல் மற்றும் மற்ற வேலைகளால் தன் முக்கியத்துவத்தை உடல் ஊனத்தை மறைத்துக் குடும்பத்தில் நிலை நிறுத்திக் கொள்வது, பின் காதலில் விழுவது என்று அவளை நாம் உன்னிப்பாகக் கவனிக்கும்படி கதையை நகர்த்திக் கொண்டு போகிறார் தமிழ்ப்பிரபா.
கிருபாவின் ஒரு கவிதை போல் கோசலையை ஒவ்வொருவராகக் கைவிடுகிறார்கள். சாதியின் பெயரால் அப்பா, குடும்பஅமைதிக்காக சகோதரன், கணவனுக்குப் பிடிக்காது என்று சித்தி, உபயோகம் முடிந்ததென்று கணவன், இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்கும் யத்தனத்தில் மகள். கடைசிவரை கோசலை தன்னைக் கைவிடுவதில்லை.
உறவுகள் கோசலையைப் பொறுத்தவரை எப்போதும் பெறுபவர்களாகவே அமைந்து போனதற்கு அவளே காரணமாக இருந்திருக்கலாம், ஆனால் ஒவ்வொருவர் விலகும் போதும், அவரவர் குற்றஉணர்வை மறைக்க, அதற்குத் தகுந்த காரணத்தை அவர்களே கற்பனை செய்து கொண்டு அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.
சிந்தாரிப்பேட்டையும் இந்த நாவலின் ஒரு முக்கியமான கதாபாத்திரம். பேட்டையைப் போலவே எளியமக்களின் வாழ்க்கை அவ்வளவு இயல்பாக நாவலின் பிற்பகுதியில் வருகின்றது. ஆனால் எல்லாவற்றையும் பின்தள்ளி முன்னே தெரிவது கோசலை. பதினாறு வயது சிறுமியாக குடும்பபாரத்தை ஏற்றுக் கொள்வதில் இருந்து சமூகப்போராளியாக
மாறுவது வரையான அவளது பயணம், அதில் பல ஏற்ற இறக்கங்கள். அப்பா நடுவில் விட்ட வெற்றிடத்தைக் கோசலை நிரப்புகிறாள். பிறந்து, வளர்ந்த இடத்திற்கு மாறுதல் கேட்டு வருவதில் இருந்து, சித்தி,தம்பி எல்லோரிடமும் செய்யும் எதிர்வினையில் இருந்து கோசலை தனித்துத் தெரிகிறாள்.
தவமணி சாடையாக திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கையில், அதை மறுத்து அவள் உடலில் இச்சை கொள்வது, மூன்றடி உயர கோசலை, இரவில் விளக்கின் அடியில் நீளும் நிழலைப் பிரிய மனமின்றி மெதுவாக நடப்பது என்பது போல் பல இடங்கள் அழகாக வந்துள்ளன. பல இடங்கள் தமிழ்சினிமாக் காட்சிகள் போலும் வந்திருக்கின்றன. நல்ல எடிட்டர் இந்த சிறுகுறையைக் களைந்திருக்கக்கூடும். ஐந்து வருடங்கள் இடைவெளி இரண்டு நாவல்களுக்கிடையே. முதல்நாவலின் வெற்றிக்குப் பிறகு, பொறுமையும், சிரத்தையும் இருந்தாலே இது முடியும். எளிமையும், அமைதியும் கொண்ட மொழிநடை. கோசலை ஒரு வித்தியாசமான நாவல். உடல் குறைபாடு உள்ள பெண்ணின் கதையை நாவல் முழுக்கச் சொல்லவே தனியாக தைரியம் வேண்டும். நமக்கெல்லாம் மான்விழி, தேன்மொழி அதிகமாகப் பழகிவிட்டது இல்லையா?
பிரதிக்கு :
நீலம் பப்ளிகேஷன்ஸ் 63698 25175
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரு.300.