ஆசிரியர் குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர். அறுவைசிகிச்சை நிபுணர். ஒரு நாவல், ஒரு குறுநாவல், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்தவை.
இது இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
அநேகமாக எல்லா சிறுகதைத் தொகுப்பிலுமே இவர் அசோகமித்திரன், ஆதவன் இருவரையும் நினைவுகூர்வதாக ஞாபகம். அதைத் தனியாகக் குறிப்பிட வேண்டுமா என்ன? இவரது எழுத்தில் அவர்கள் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள். இருவரிடமிருந்தும் விலகிய கதைக்களங்கள் மயிலனுடையவை, மொழிநடையும் இவருடைய தனித்துவம் தொனிப்பது, ஒருவேளை வார்த்தைகளின் நுட்பங்களில் அவர்களது நினைவு எனக்கு வருகின்றதோ தெரியவில்லை.
கயமையும், பாசாங்கும் அநேகமான கதைகளை ஒன்றிணைக்கும் கயிறாகும்.
இருத்தலைக் காப்பாற்றிக் கொள்ள, சுகத்தைக் காத்துக்கொள்ள எந்த நிலைக்கும் செல்லக்கூடிய கதாபாத்திரங்கள். ஒரு கதையில் ரயிலில் ஒரு பாத்திரம் சொல்லும், “எப்பயாச்சும் எவனாவது ஒருத்தன் என்ன மாதிரி முன்னாடி நிப்பான்”. மயிலன் இந்தக் கதைகளின் மூலம் வாசகர்களுக்குச் சொல்வதும் அதுவே.
மயிலனின் எல்லாக் கதைகளையும், அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகளையும் இரசித்திருக்கிறேன். இருந்தும் தனிப்பட்ட முறையில் நியமம், ஸ்படிகம் இரண்டுமே எனக்கு நெருக்கமானவை. நியமம் கதையில் தன்மையில் கதைசொல்பவனும், ஸ்படிகம் கதையின் தினகரும் மாம்பழம் மடியில் வந்து விழும் தருணத்திற்காகக் காத்திருப்பவர்கள்.
நியமம் கதை மொத்தமும் யாரோ அப்பாவின் முதிர்காமக்கதையைச் சொல்வது போல் போக்குக்காட்டி, அடுத்தவன் மனைவியிடம் நெருங்கிப் பழகும் குறுகுறுப்புக்காகப் போடும் வேஷத்தைச் சொல்கிறது. ஸ்படிகம் தினகர் ஒருநாளும் பாண்டிமதியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவன் செய்ததெல்லாம் அவள் கூண்டை விட்டு வெளியே வருவதற்குத் தூண்டுதலாக இருந்தது தான். இரண்டுமே பெரும்பாலான ஆண்களின் Best of the two worldsஐ அனுபவிக்கும் மனப்பான்மையே, ஆனால் கதை மொத்தமும் அது பற்றிப் பேசாது மற்ற எல்லா விஷயங்களைப் பேசுவதில் கதைகளின் நுணுக்கம் மறைந்திருக்கிறது.
கதிர் ( இருள் ஊடுருவும் சாளரம்) செய்ததை, அமலிக்கு அம்மாவிடமோ, தம்பியிடமோ சொல்லத் தெரிந்திருக்குமா? கணத்தில் தோன்றிய வெறுப்பு பெண்மையின் வெளிப்பாடா? தம்பி ஏன் அவள் பற்றி கதிரிடம் ( உண்மைப்பெயர் இதுவில்லை) பேசுவதைத் தவிர்க்கிறான்? நாற்பது வயதில் அமலி என்ன செய்யப் போகிறாள்? கதையை விட கேள்விகள் அதிகமாக என்னுள் எழுப்பிய கதை இது.
நிரபராதம் கதையில் எந்த இளம்பெண் வந்திருந்தாலும் அவனுக்கு மெலிண்டாவாகத் தான் தெரிந்திருக்கும். ஒவ்வொன்றாய் அவனைக் குற்றம் சாட்டும் தொனியில் கேள்விகள் கேட்பவளின் கடைசி எதிர்வினை சற்றும் எதிர்பாராதது. மயிலனிடம் எப்போதும் எதிர்பாராததை, எதிர்பார்த்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
அடிப்படைக் கல்வி இல்லாவிடில் புரிந்து கொள்ள முடியாத பல வார்த்தைகள் அடங்கிய நியமத்தில் இருந்து சன்னதம் கதை முழுக்கவே கிராமத்துப் பின்னணி மட்டுமல்ல, கிராமத்து மொழியும் கொண்டது.
மீன்களின் எல்லைக்கோடு, அப்பலாச்சியன் தடம் கதைகளில் இரண்டாவது கதாபாத்திரங்களின் கோணத்தில் கதை சொன்னால் முற்றிலும் வேறு ஒரு கதையாக இருக்கும். ஏகாந்தம் வித்தியாசமான முயற்சி.
மயிலன் எதிர்கால தமிழிலக்கியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பின்னுரையில் தொகுப்பில் அந்தப்பெயரில் கதையே இல்லாத தலைப்பான சிருங்காரம் எதற்காக வைத்தேன் என்று கூறி இருக்கிறார். அதைப் படித்திருக்காவிட்டால் Online stores எங்கு தேடியும் அகப்படாது, புத்தகக்கண்காட்சியில் எங்குமில்லாது, ஒரு குறிப்பிட்ட ஸ்டாலில் உள்நுழைந்து ஒளிந்திருந்ததைக் கைப்பற்றிய அந்தத் தருணத்தில், சிருங்காரம் கையகப்பட்டதாக நான் நினைத்துக் கொண்டிருப்பேன்.
பிரதிக்கு:
உயிர்மை பதிப்பகம் 044-48586727
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ.170.