ஆசிரியர் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு.
இயற்பியலுக்கும் எனக்கும் நான் திருமணம் செய்யும் வரை ஸ்நானப்ராப்தி கூட இல்லை. இப்போது இயற்பியல் முப்பது வருடங்களுக்கு மேலாக என்னுடன் குடும்பம் நடத்தி வருகிறது. இலக்கியம் படித்தவர்களே நல்ல கவிதை எழுத முடியும் என்று ஒரு கற்பிதம், சொன்ன வரிகளின் சுடுகாற்று ஆறுமுன்னே நமக்குமறந்து போகும் பாடமான இயற்பியலைக் கற்பிப்பவர்களின் ரசனை குறித்து மற்றொரு கற்பிதம் எல்லாமே போனது. ஆயின் என்ன வாழ்க்கை தன் ஆச்சரியச்சாளரங்களை அவ்வப்போது திறந்து காட்டிக் கொண்டே இருக்கிறது.
கவிதை மொழி என்பது, கவிஞர் மனதில் சிறைபட்ட காட்சிகளை அழகுணர்ச்சியுடன் வெளிக்கொண்டு சேர்ப்பது. எங்கோ உள்ள வாசகன் மனதில் அதே காட்சியை உயிர்த்தெழச் செய்வது. இந்தக் கவிதை அதை மட்டும் செய்யவில்லை, நெய்தல் நிலத்தையும் காட்சியுடன் கூடப்பிணைக்கிறது.
” ஜிப் பழுதாகிய
பழைய கவுன் பின் திறப்பின்
மேலிருமுனை இழுத்து
ஊக்கு குத்திவிடுகிறாள் தாய்
முழுவதும் மூடாமல்
படகுவடிவில்
திறந்து தெரிகிறது
மகளின் முதுகு.
எண்ணெய் குறைச்சலினால்
பழுப்பு நிறமான கேசம்
பின்னப்பட்டதும் மரத்துடுப்பாகி
படகின் மேல் அமர்கிறது
இனி புத்தகப்பையை மட்டும்
ஏற்றிவிட்டால் போதும்.
கரை சேர்ந்துவிடும்
இந்தப்படகு.”
மாட்டுக்கு சினை பிடிக்க ஊசி போடுவது மனிதம் மரத்துப் போன்ற செயல்களில் ஒன்று. அதைக் கவிதையில் கொண்டு வந்தால் விலங்குநண்பன் தொனி வந்து விடும். ஆனால் அதற்குள்ளேயே, சிறுவயதில் மாடு இணைசேரும் ஒலிகேட்டு வெட்கத்துடன் கவனத்தை மாற்ற இசை கேட்ட பெண்ணையும், புல்லாங்குழல் அதன் மகிமையை இழந்து கட்டைப்பையின் உடைந்த மரக்கட்டைக்குப் பதிலாக வைக்கும் பயன்பாடு இந்த ஊசி போடும் வேலை என்றும் சொன்னால் அது அழகிய கவிதையாகும்.
கவிஞர்கள் கையில் வார்த்தைகள் கலைடயாஸ்கோப்பின் வண்ணச்சித்திரங்கள். இடம்வலம் என சுழற்ற மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகள்.
” வேரெனக்கூட இல்லாது போனாலும்
வெந்தயவாசமாகவாவது இரு”
” ஒட்டகதானம் பெற்ற மாட்டுவண்டிக்காரன்”
“நடவுசெய்து வரப்பேறியவன்
நகஇடுக்குச் சகதி அரைவட்டம் “
“தந்தை மகளுக்கு எடுக்கும் வகிடு
அரச அலங்காரங்களினும் அற்புதம்”.
“வாசனைத் திரவியக் கலனுக்கான மூடி
இறுக்கமாக இருத்தல் தானே நியாயம்”
“பிள்ளைத்துணி காய்கிற கொடியில்
தூளியாடும் திண்ணைக்காற்று”
“உள்ளாடை கொக்கி தற்செயலாய் அறுபட்டவளின் ரகசியமான அவஸ்தை”
நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்தக் கவிதைத் தொகுப்பில் எல்லாப் பகுதிகளிலுமே நெய்தல் வாசம். தனிப்பட்ட முறையில் எனக்கு நெருக்கமானது கடைசிப்பகுதி. இரண்டு குடம் சுமக்கிறவள் பாரத்தினால், சட்டென்று வந்த மாதவிடாய்க் குருதியை அடக்க முயல்வது போல எத்தனையோ சித்திரங்கள் அதில். காணும் காட்சி எல்லோருக்கும் பொதுவானது, அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் வித்தியாசமிருக்கிறது. காதலர் பிரியப் போகின்றனர், கண்ணில் மைதீட்டும் கவனத்தோடு விலகும் அண்மை என்கிறார். இன்னொரு இடத்தில் ஊர்செல்லும் காதலனுக்கு உப்பிட்டு உலுக்கிய முத்தங்களைக் கொடுத்து வழியனுப்புகிறாள். முத்தங்கள் நாள்பட கெடாமல் இருக்க வேண்டுமே. நல்ல கற்பனை வளமும், நெய்தல் திணையில் ஊறிய கவிதைகளும் இவரது பலங்கள். இவர் தவிர்க்க வேண்டியது மிகையுணர்ச்சியளிக்கும் நாடகவரிகளை. “வாழிய கண்ணே செழுந்தமிழாய்” போன்ற வரிகள் மன்னவன் வந்தானடி சிவாஜிநடைநடக்கும் ஒருவன் நடுவில் சோப்புத் தண்ணீரில் வழுக்கி விழுந்தது போல் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
பிரதிக்கு:
வாசகசாலை 99426 33833
முதல்பதிப்பு நவம்பர் 2022
விலை ரூ. 150.