கே.ஆர்.மீரா:

இந்தியாவில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். பெண்ணியத்தைப் பிரச்சாரத் தொனி சிறிதுமின்றி இலக்கியமாக்கும் வித்தை தெரிந்தவர். சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளை வென்றவர்.

மோ.செந்தில் குமார்:

தமிழ் பேராசிரியர். பெயல் என்னும் ஆய்விதழின் ஆசிரியர். மீராவின் புகழ்பெற்ற நூலான The Hangwoman நாவலை ‘ஆராச்சார்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பைத் தொடங்கிய இவரது பயணம், குறுகிய காலத்தில் மீராவின் நான்கு நாவல்களை மொழிபெயர்க்க வைத்திருக்கிறது. இந்த நாவல் மீராவின் மற்றொரு முக்கிய நாவலான ‘ The Poison of Love’ நாவலின் தமிழாக்கம்.

மீராவின் ஐந்து நாவல்கள் தமிழுக்கு வந்த பிறகு அவர் அதிகமாக இங்கே Quote செய்யப்படுகிறார். அத்தனைக்கும் தகுதியானவர் மீரா. மீராவைப் போல ஒரு
படைப்பாளிகள் அடிக்கடி தோன்றுவதில்லை. 2000ல் சிறுகதை மூலம் இலக்கியப்பயணத்தை ஆரம்பித்த மீரா இப்போது கடந்து தூரம் மிக அதிகம்.

துளசியின் முதல்பிறப்பில் அவள் உடலுடன் விளையாடியது மாதவன். துளசி விஷ்ணுவிற்கு மிக நெருக்கமானவள் என்பது அவரது அடியார்களின் நம்பிக்கை.
தன்னை ஏமாற்றிய கடவுளை, துளசி அவரது வடிவமான சாலிக்கிராமத்தைப் பலமுறை மணக்கிறாள் மறுபிறவியில். ஆனால் மீராவின் கதையின் துளசி, புராணக்கதையின் துளசி இல்லை மாதவனை மன்னிக்க. அவள் எதையும் மறக்காதவள், பழி வாங்குபவள்.

துளசி ஏற்கனவே நன்கு அறிமுகமான, தன்னைப் போலவே IITயில் படித்த, பாதுகாப்பான மணமகனான வினயனை விட்டு, திருமணத்திற்கு முதல்நாள் வெளியேறி, குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி, ஏற்கனவே இருபத்தேழு பேரைக் காதலித்ததாகச் சொல்லும் மாதவனை ஏன் தேர்ந்தெடுக்கிறாள் என்பதற்கு அவளைத் தவிர யாரும் காரணம் சொல்ல முடியாது. இந்துக்கள் விதி என்பார்கள். ஆனால் காதலில் எந்த தர்க்கநியாயங்களும், விளக்கங்களும் செயல்காரணியின் ஊற்றுக்கண்ணை நிரூபிப்பதற்கில்லை. துளசி IIT rank holder என்ற தகவல் இங்கே முக்கியமானது.

பெண்கள் பெரும்பாலும் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த பிறகு சுக்கு நூறாக உடைந்து விடுகிறார்கள். ஆன மட்டும் கெஞ்சிப்பின் அன்பில்லாதவன் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட்டு விடுகிறார்கள். வெகுசில பெண்களே I will screw your happiness என்று சொல்வது. தங்களிடம் இருக்கும் எல்லாற்றையும் இழந்தும் அவனுக்குப் படிப்பினை கற்பிக்கத் துணிகிறார்கள். துளசி அந்தப் பெண்களின் பள்ளியில் தலைமையாசிரியர்.

பிருந்தாவனம் விதவைகளின் நகரம். பத்தாயிரத்துக்கும் மேலான விதவைகள், மொட்டையடித்துக் கொண்டு, பிச்சை எடுத்துக் கொண்டு, பஜன் பாடிக் கொண்டு, சாவுக்காகக் காத்துக்கொண்டு ……… துளசி மீராசாதுவாகிறாள். இந்த நாவல் புராணக்கதையின் மீட்டுருவாக்கம். கிருஷ்ணனின் மேலுள்ள கோபத்தைத் தீர்க்க இந்த நாவலை உபயோகித்துக் கொண்டார் என்று எனக்குத் தோன்றும். இந்த நாவலில் எதிர்வினைகள், முடிவுகள் வேறு. கே.ஆர்.மீரா ஒரு மாஸ்டர்.

மிகச்சிறிய நாவல் இது. ஆனால் மிகவும் Powerful ஆன நாவல்களில் ஒன்று. ஒரே காட்சியில் வரும் துளசியின் தங்கை தாமரையைக்கூட நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆராச்சாரில் சுருக்குக்கயிறு Metaphorஆகத் திரும்பத்திரும்ப வரும். இதில் எறும்புகள். தத்துவார்த்தம் சட்டென்று இடைவந்து பின் விலகிக்கொள்வது மீராவின் எல்லா நாவல்களிலுமே நிகழ்கிறது.

Poison of Loveஐப் படித்து விட்டு பலருக்குப் பரிந்துரை செச்திருக்கிறேன். ஆராச்சாரின் மொழிநடை வேறு. மீராசாது கவிதையும், பக்தியும், தத்துவார்த்தமும் கலந்த நடை என்பது ஆங்கிலத்திலேயே தெரிந்தது, இப்போது தமிழில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. செந்தில்குமார் அனுபவித்து மொழிபெயர்த்திருக்கிறார். அதிகபட்சம் இரண்டு மணிநேரத்தில் இந்த நூலைப் படித்து விடலாம், ஆனால் ஆயுளுக்கும் உங்களால் துளசியை மறப்பதற்கில்லை.

பிரதிக்கு:

எதிர்வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 150.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s