ஆசிரியர் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறார். படைப்பு, புரவி உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் எழுதிய இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது.
இவரது கடலுக்கு யார் சாயல் என்பது தெரியாது, ஆனால் தீபிகாவின் கவிதைகளுக்கு குழந்தைமையின் சாயல்.
சிறுகதைகளோ, கவிதைகளோ ஏதோ ஒன்றில் நம்மைத் தொலைக்க முடிந்தால் போதும், என்றேனும் நம்மாலும் சிறப்பாக எழுத முடியும். வாசிப்பும், பயிற்சியும் தூக்கிச் செல்லும் தூரம் கற்பனைக்கெட்டாதது. எழுத உட்காருமுன் யோசிக்காத பலவும் தானே வந்து எழுத்துக்களாக மாறியதாக, பல மிகச்சிறந்த எழுத்தாளர்கள் கூறி இருக்கிறார்கள்.
இந்த வரிகளில் என்னை நான் காண்பது போல பலரும் காணக்கூடும். Going into a shell என்பதற்கு ஒவ்வொருவருக்கு ஒரு காரணம். இந்தக் கவிதை சொல்லும் காரணம் முற்றிலும் வேறு
” ஒற்றைக் கூட்டிற்குள்
உயிர் சுருக்கும் நத்தையாய்
ஒற்றை அறையை உலகாக்குவதில்
பெரும் சௌகரியம் எனக்கு”
காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை என்று கண்ணதாசன் சொல்வது வேறு எதற்கு வேண்டுமானாலும் பொருந்தலாம், காலங்கடந்து கையகப்பட்டவைக்கு ஒரு போதும் பொருந்துவதில்லை.
” குடும்பமாய்
கோவிலுக்குப் போனோம்
அவர்கள் வரம் வாங்க
நான் பலூன் வாங்க
வன்மையாய் அது
மறுக்கப்பட்ட நாளில்
சபதமெடுத்தது
என் மனக்குழந்தை
இனி சொந்தக்காசில்தான்
பலூன் வாங்குவதாய்.
இதோ
பத்து பலூன் வாங்கிவிட்டேன் இன்று
பால்யத்தைத் தொலைத்துவிட்டு…….”
ஏன் கவிதை எழுதுகிறீர்கள் என்று கேட்டால் ஒவ்வொருவர் ஒரு விடையைச் சொல்லக்கூடும். மோனத்தவத்தில், உயிரை உருக்கி உளி செய்து, வார்த்தைகளைச் செதுக்கி, கவிதை படைத்தேன் என்று கூட சொல்லக்கூடும். ஆனால் எளிமையாய்ச் சொன்னால் இதுவே உண்மை.
” பிறந்த நாளுக்கோ
திருமணத்திற்கோ
அன்பைச் சொல்லவோ
காதல் தோல்விக்கோ
பிரத்யேகமாய்
கவிதைகள் செய்வதில்லை நான்!
தலைவலித்தால் கொஞ்சம்
மாத்திரை போட்டுக் கொள்கிறேன்
அவ்வளவே…..”
அன்புக்காக ஏங்கும் ஜீவன், காயப்படக்கூடாது என்று பாதுகாப்புடன் தனிமையைத் தழுவும் பெண், கவிதையை வடிகாலாக்கி ஆசுவாசம் அடையும் பெண், பெண்பாலினம் என்பதால் சுதந்திரச் சிறகுகள் வெட்டப்பட்டது கண்டு மருகும் ஒருத்தி, தன்னுடைய சிறிய உலகில் சுற்றும்முற்றும் நடப்பதைக் கவிதைகளாக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு.
இது தான் கவிதை என்று யாரும் அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை. இன்றைய உலக கவிதைகள் உணர்வின் தளத்தில் இயங்குவது, மொழி விளையாட்டு எல்லாவற்றையும் தாண்டி, ஒரு விஷயத்தில் ஏற்படும் பாதிப்பைச் சொல்லவதற்கே அதிகம் முயல்கின்றன. உரைநடையை விடக் கவிதை பெரிய விஷயம் என்ற நம்பிக்கை எனக்கில்லை, ஆனால் சுருங்கச் சொல்லி நிறையவே கொடுப்பது கவிதை.
கவிதை ஒரு பயிற்சி, அவ்வளவே. எல்லோருக்குமே சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். தீபிகாவும் வாசிப்பையும், பயிற்சியையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அமிர்தம் எழுதிய அதே தி.ஜா தான் பின்னாளில் மோகமுள் எழுதினார்.
பிரதிக்கு:
கடல் பதிப்பகம் 86808 44408
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 120.