இந்த நூல் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பான காலமான, கி.பி 1200 முதல் கி.பி. 1750 வரையான இந்திய வரலாற்றையும், நாகரீகத்தையும் பற்றி எழுதப்பட்ட நூல். இருவருமே Scholars, Catherine ஒரு Art Historian, குறிப்பாக இஸ்லாமிய பண்பாடுகள், Cynthia ஒரு Historian, ஏற்கனவேயே இஸ்லாமியர் வருகைக்கு முன்பான இந்தியா குறித்து ஆராய்ச்சி செய்தவர், உலகவரலாற்றில் ஆர்வம் கொண்டவர். இருவரையும் Cambridge University Press அணுகி, கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டு கால வரலாற்றை ஆய்வு செய்து எழுத அணுகியதன் விளைவே இந்த நூல்.

அராபியர்கள் எட்டாம் நூற்றாண்டில் படையெடுத்து வந்து சிந்துவை (பாகிஸ்தான்) கைப்பற்றுவதில் இருந்து முஸ்லீம் ஆட்சி இந்தியாவில் தொடங்குகிறது. பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கஜினி முகம்மது, சர்வதேச முஸ்லீம்கள் மத்தியில் தன் புகழைப்பரப்ப, முஸ்லீம் அல்லாதவர்கள் மீது தொடுக்கும் போரான Jihadஐ இந்தியாவின் மீது தொடுக்கிறான்.
பலமுறை போர் தொடுத்து செல்வங்களைக் கொள்ளையடித்த போதிலும் 1025ஆம் ஆண்டு சோமநாதர் கோயில் மேல் எடுத்த படையெடுப்பே கஜினியின் முக்கியமான படையெடுப்பு. ஐம்பதாயிரம் பக்தர்கள் ஆலயத்தைக் காக்க முயன்று உயிரிழக்கிறார்கள். நகைகள் மொத்தமும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்துக் கடவுளான சிவன், மூலவர் அழிக்கப்படுகிறார். இதுவரை ஏராளமான கடவுளர்களை வணங்கிய மக்கள், முஸ்லீம்கள் தங்களது ஒரே மதம் என்பதை வலியுறுத்தத் தொடங்கியவுடன், ஒருங்கிணைந்த இந்துமதம் என்று தங்களை அடையாளப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.

கஜினிக்கு இரண்டு நூற்றாண்டுகள் பின் வந்த முகமது கோரியின் நோக்கம் கொள்ளைடித்துப் போவது அல்ல, இஸ்லாமிய அரசை இந்தியாவில் ஏற்படுத்துவது. சுல்தான்களின் ஆட்சி இந்தியாவில் தொடங்குகின்றது.

இந்திய சரித்திரத்தை ஆராய்ந்த பல வரலாற்று ஆசிரியர்களின் முடிவு, இந்தியா ஒரு மதத்தாலோ, தேசத்தாலோ, இனத்தாலோ இணைக்கப்படவில்லை. பிரிதிவிராஜ் சௌகான், ஜெயசந்த் ஹகாடவல் போன்ற பெரிய வீரர்கள் அரசர்களாக இருந்த போதும் அவர்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருந்ததில்லை. அதுவே முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கும் பின்னர் ஆங்கிலேய காலனித்துவத்திற்கும் வழிவகுத்தது. மாறாக முகமதுகோரியின் படையில் அராபியர், துருக்கியர், மங்கோலியர் என்று பல இனத்தினரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வந்து இந்திய மன்னர்களை வீழ்த்தினர்.

முஸ்லீம்கள் இங்கேயே தங்கி ஆட்சிபுரியும் காலம் வரும்பொழுது மசூதிகளும், தர்ஹாக்களும் கட்டப்படுகின்றன. அவசரமாகக் கட்டவேண்டும் என்பதால் கட்டிடப் பொருட்கள், இந்து மற்றும் ஜெயின் ஆலயங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்படுகின்றன. பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் குதுப்மினார் கட்டப்படுகிறது. இஸ்லாமை பின்பற்றாதவர் நீதிவழங்கும் நாளில் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் என்பதைச் சொல்லக் கட்டப்பட்ட குதுப்மினாரின் செய்தி, அப்போதைய இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமே படித்தவர்களாக இருந்ததால், யாருக்கும் தெரியப்படாமலேயே வெறும் கட்டிடமாய் முடிந்துவிடுகிறது.

கோரியின் எதிர்பாராத மரணம், ஒரு குழப்பத்தை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தைக்கூட இந்திய மன்னர்கள் உபயோகித்துக் கொள்ளவில்லை. இல்துமிஷ் சுல்தானாக முடிசூட்டிக் கொண்டது, பல நூற்றாண்டு முகலாய சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டுகிறது.
இல்துமிஷே டெல்லியை கல்வி மற்றும் பண்பாட்டு தலைநகரமாக்கியது. இல்துமிஷின் மரணத்தின் பிறகு பலவீனமான அவனது மகனை இறக்கி, மகள் ரஷியா பதவி ஏற்கிறாள். முகலாய சாம்ராஜ்ஜிய வரலாற்றில் அரசாண்ட ஒரே பெண் ரஷியா. திரையைத் தூக்கிஎறிந்துவிட்டு, முகத்தைப் பார்க்கும் ஆண்களுக்கு அச்சத்தை அளித்த ரஷியா நான்கு ஆண்டுகளில் சதியால் கொல்லப்படுகிறாள்.

சுல்தான் ஜலாலுதினின் மருமகனான அலாவவுதின் கில்ஜி, சுல்தானைக் கொன்று அரசைக் கைப்பற்றுகிறான். கில்ஜி மங்கோலியரை மட்டுமல்ல எதிர்த்த எல்லோரையுமே தோற்கடித்து வலுவான முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு வழிவகுக்கிறான். கில்ஜி ஒரு போரில் கூடத் தோற்றதில்லை.

முகலாய அரசர்கள் பலரும், எதிரி இந்து அரசர்களை வென்று கொல்லுமுன், அவர்கள் பெண்களை சிறைபிடிப்பதும், அவர்கள் வழிபாட்டுத்தலங்களை மொத்தமாக அழிப்பதும் வழக்கமாக வைத்திருந்தனர். அவர்கள் படையெடுப்பு முடிந்ததும், அமைதி திரும்பியதும் மீண்டும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. முகலாயர்களுக்கு முன்னான மதத்தை விட இந்துமதம் ஒருங்கிணைந்த வலுவான மதமாகியது. கல்வி மற்றும் இலக்கிய வளர்ச்சி, நகரமயமாக்கல் முதலிய வளர்ச்சிகளுக்கு சுல்தான்களின் ஆட்சி காரணமாக அமைந்தது.

முகலாயரின் பிடியில் இந்தியா இருக்கையில், அவர்கள் கண்முன்னே எழுந்து இருநூறு ஆண்டுகள் அரசாண்ட இந்து சாம்ராஜ்ஜியம் விஜயநகரம். கிருஷ்ணதேவராயரின் தலைமையின் போது விஜயநகர சாம்ராஜ்ஜியம் அதன் உச்சத்தை அடைந்தது.

கபீர் தன் பாடல்களில் முதன்முதலாக ராம் மட்டுமே கடவுள் என்கிறார். கபீரின் ராம் விஷ்ணுவின் அவதாரமல்ல. 1500ல் இருந்து இந்துக்கள் சிவன் என்னும் கடவுளிலிருந்து கிருஷ்ணனுக்கு மாறுகிறார்கள். வட இந்தியா முழுதும் பக்தி இயக்கம் பரவலாகிறது.

ஔரங்கசீப்பிலிருந்து முகலாய சாம்ராஜ்ஜியத்தின் அழிவு தொடங்க ஆரம்பிக்கிறது. தீவிர இஸ்லாமியவாதியான ஔரங்கசீப், அக்பர் போன்ற பல முன்னோர்கள் சேர்த்துவைத்த மதநல்லிணக்கத்தை அழிக்கக் காரணமாகிறார்.

அரசியல், மதங்கள் மட்டுமில்லாது கட்டிடக்கலை, இசை, இலக்கியம், நாகரீகம், வழிபாடு, பழக்கவழக்கங்கள் என்றுபல மாற்றங்களை முகலாய சாம்ராஜ்ஜியம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இந்நூல் விரிவாக ஆராய்கிறது. இந்த நூலின் மற்றுமொரு சிறப்பு ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்தத் தலைப்பில் வந்திருக்கும் ஏராளமான புத்தகங்களின் பெயர்கள். ஆயுள் முழுக்க முகலாயர் வரலாறைப் படிக்கும் அளவிற்குப் புத்தகங்கள்.

இந்த நூல் வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வின் பின் எழுதிய நூல் என்பது மட்டுமன்றி, இரண்டு மதங்ளையும் சாராத, வெளியில் இருந்து பார்க்கும் ஆசிரியர்கள் எழுதிய நூல். மாவீரர்களான இராஜராஜன், இராஜேந்திர சோழன் போன்றோரது மிகப்பெரிய சாம்ராஜ்ஜியங்கள் முடிந்தது, பெரிய படை இல்லாது குறுநில மன்னர்களின் படைகள் சேர்க்கப்பட்டு போர்புரிந்த போது அவர்களுக்குள் இயல்பான ஒருங்கிணைவு ஏற்படாதது என்பது போன்றவை முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஆரம்பத்திற்குக் காரணம். ஔரங்கசீப் போன்றவர்களின் அரசியல், மதவெறி, பக்தி இயக்கங்கள் பல மக்களை இந்துமதம் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது மட்டுமன்றி, மதத்தை வளர்க்க உதவியதும், ஆங்கிலேயர் வந்ததில் இருந்து பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டதும், வலுவான சுல்தான்கள் தோன்றாமல் போனதும் அதன் அழிவிற்கு காரணங்கள். ஆர்வமுள்ளோர் William Dalrympleன் The Last Mughal நூலைப் படிக்கலாம். இந்த நூலும் இந்தியாவில் முகலாயப்பேரரசின் தாக்கங்கள் குறித்து அறிய சிறந்த நூல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s