ஆசிரியர் குறிப்பு:
திருவேங்கடத்தில் பிறந்தவர். சென்னையில் வசிப்பவர். வாசித்தலிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். இது இவரது மூன்றாவது கவிதைத் தொகுதி.
காற்றைக் குடித்துப் பெருமாளை சேவிப்பவன் என்று சொல்வார்கள் ஈயாக் கஞ்சர்களைத் திருநெல்வேலிப்பக்கம். ஒரு நேரம் கூட வயிறு நிறையாத பகல்கள் நிரம்பியவளுக்கு விடியல் எப்போதும் பயத்தை அளிப்பது.
” முவ்வேளைக்கு ஒருவேளையேனும்
சாந்தப்படுத்த
முழுநாளையும் காவுவாங்கி
முழுமை கொள்ளாது தவிக்கிறது
அவளின் நாட்கள்
…..
விடியலின் கணக்குக்கு விடையாக
சூரியஒளியை மட்டும் சொன்னால் எப்படி”
இயற்கையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு முற்றத்தில் இருக்கும் மரமே மூலவர். மழைத்தண்ணீர் ஒழுகும் இலைகளில் அபிஷேகத்தீர்த்தம்.
” இலைப்புனலில் வழிந்தொழுகும்
தீர்த்த நீர்துளிகளை உள்ளங்கை வாங்கி
உறிஞ்சிக் கொள்கிறது அவ்வப்போது வாய்.”
கஷ்டமோ, சுகமோ தன்னளவு யாரும் அனுபவித்ததில்லை என்று மயங்கி விழும் மனம். அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு என்ற பக்குவம் வரும்பொழுது வாழ்க்கையில் முக்காலே மூணு வீசம் முடிந்து போகிறது.
” கனத்துக் கிடக்கும்
கால நெத்திச்சுட்டி
எறும்பின் நெற்றியிலும்
தவழ்ந்தேதான் கிடக்கும்”
ஜே ஜே சில குறிப்புகளில் பீச்சைக்காரனின் எதிர்வினையைப் பார்த்து சலனமடையும் ஜே.ஜே. கோயில் வாசலில் வரிசையாக நாணயங்களை உதிர்த்து விட்டு மகாராணியின் நடைபயின்று காரில் ஏறும் அந்த செவ்வரி ஓடிய கண்களைக் கொண்டவள் இன்னும் ஏன் மாஸ்க் அணிகிறாள்? செயல் ஒன்று எதிர்வினைகள் பல.
” விளிம்பு ஒடிந்த
நெளிசல் தட்டில்
மதியாமை வீசியெறிந்த நாணயம்
இல்லாமையின் இழிவாகிறது”
அம்மாவான பின்னும் தன் அம்மாவின் அருகாமை தேடும் பெண், பொம்மைகளுடன் சேர்ந்து தனிமையை விரட்டும் பாப்பு, அம்மாச்சியுடன் விளையாடும் குட்டிப்பெண், அம்மித் துவையலில் பிரியத்தைப் பகிர்ந்து கொள்ளும் தம்பதிகள், கணவனைச் சார்ந்தே காலங்கழித்து அவனில்லாமல் மீதி வாழ்க்கையைத் தின்று தீர்க்கும் பெண் என்பது போல எளிய மனிதர்களின் பிரியங்களால் நிரப்பப்பட்ட கவிதைகள் இவை.
கர்ப்பிணி மனைவி, பிள்ளைகளைப் பட்டினி போட்டு குடியில் மகிழும் ஒருவனைப் பற்றிச் சொல்லும் கவிதையிலும் கூட அவன்மேல் துளி வெறுப்பில்லை. எல்லோரிடமும், மரம் செடி கொடி, பறவை, விலங்குகள் யாவற்றின் மீதும் தீராத அன்பு செலுத்தும் மனம் வெகுசிலருக்கே வாய்க்கிறது. அந்த அன்புதான் கொஞ்ச நேரத் தனிமையையும் பொறுக்காமல் சும்மாவாவது யாரேனும் அழைப்புமணியை அடியுங்களேன் என்கிறது.
கனகா பாலன் செய்ய வேண்டியது எழுதிய கவிதையில் எந்தெந்த வார்த்தைகளை எடுத்தால் அல்லது மாற்றினால் கவிதையின் அழுத்தம் கூடும் என்பதைக் கண்டறியும் விளையாட்டு. உதாரணத்திற்கு இதில்வரும் கடைசிக் கவிதையில் ‘கையேந்துபவனுக்கு’ என்ற கடைசி வரி தேவையில்லாதது. கனகாவிற்கு மட்டுமல்ல எல்லா வளர்ந்து வரும் கவிஞர்களுக்கும் சொல்வது, உற்றார்,உறவினர், நண்பர்கள்,
பெண்களென்றால் ஆண்கள், ஆண்கள் என்றால் பெண்கள் சொல்வதை எல்லாம் ஒருபோதும் நம்பாதீர்கள். நீங்கள் யாருடைய கவிதைகளை வாசித்து பிரமிப்படைகிறீர்களோ, அவர்களைக் கடந்து செல்லவே நான் கவிதை எழுதுகிறேன் என்பதை உங்களுக்குள்ளேயே வைராக்கியமாகச் சொல்லிக் கொள்ளுங்கள்.
பிரதிக்கு:
படைப்பு பதிப்பகம் 94893 75575
முதல்பதிப்பு 2020
விலை ரூ.80.