ஆசிரியர் குறிப்பு:
திருப்பூரில் பிறந்தவர். கோயம்பத்தூரில் காப்பீட்டு அதிகாரியாகப் பணிபுரிகிறார்.
இந்தி முதுகலைப்பட்டம் பெற்றவர். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நாவல்கள் என்று கடந்த இருபது வருட.களுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருகிறார். இது சமீபத்திய நாவல்.
கோபாலகிருஷ்ணனை வாசிக்காதவர்கள் அவரது மணற்கடிகை நாவலில் இருந்து தொடங்கவாம்.
Ken Folletன் Kingsbridge seriesல் இதுவரை நான்கு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன, அடுத்தது வரும் செப்டம்பரில் வெளியாகிறது. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள். ஆயிரத்தைநூறு வருட மேற்கத்திய நாகரீகத்தைச் சொல்லும் Series. இது ரந்தம்பூர் கோட்டை ஜெயந்த் சௌகானால், பன்னிரண்டாம் நூற்றாண்டில் வனப்பகுதியில் அமைக்கப்படுவதில் இருந்து, இன்று அது புலிகளின் சரணாலயமாக, சுற்றுலாத் தலமாக மாறியிருக்கும் வரையான 1100 வருடங்களின் சரித்திரக்குறிப்புகள் புனைவு வடிவத்தில்.
நூலின் தலைப்புக்கேற்ப வேங்கை வனமே கதைக்களம். ஆட்சி அதிகாரங்கள் மாறுகின்றன, மனிதர்கள் வருகிறார்கள், போகிறார்கள் ஆனால் புலிகள் அங்கேயே இருக்கின்றன. சிங்கப்பூரின் கடைசிப்புலி நூறு வருடங்களுக்கு முன் கொல்லப்பட்டு இனவழிப்பு நடந்தது போல் ரந்தம்பூரிலும் நடந்திருக்க வேண்டியது. இந்தியப்புலிகளுக்கு ஆயுள் கெட்டி போலிருக்கிறது. ஜெயந்த் காலத்தில் இருந்தே புலிவேட்டை ஆரம்பிக்கிறது. முதலில் தங்கள் உயிரைக் காப்பாற்ற நடந்த கொலைகள் பின்னர் புலிவேட்டை வீரவிளையாட்டு என்ற நம்பிக்கையில் மன்னர்கள், சிற்றரசர்கள் பின்னர் வந்த வெள்ளைக்காரர்கள், சரணாலயம் அமைக்கப்பட்ட பின்னரும் Poacherகளால் என்று புலிவேட்டை நூற்றாண்டுகளாக நடந்திருக்கிறது. அறுபது பேர் எதிர் திசையில் விரட்ட, தயாராக, பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு புலியைச் சுடும்
வீரம்!
வேங்கைகள் வேட்டையாடப்படும் போது மனிதர்களும் வேட்டையாடப்படுகிறார்கள். கில்ஜியால் ரந்தம்பூர் கோட்டை தாக்கப்பட்டு கைப்பற்றப்படுகிறது. பின்னர் மேவார், ஜெய்ப்பூர் மன்னர்கள் என்று கோட்டை கைமாறிக் கொண்டே இருக்கிறது. எல்லாக் காலங்களிலும் புலிவேட்டை வீரவிளையாட்டாகக் கருதப்படுகிறது. ஜஹாங்கீர், ஷாஜஹான் எல்லோரும் இடையே வருகிறார்கள். முகலாயர் காலத்து அரசியல் நிகழ்வுகளும் நாவலில் ஒரு பகுதியாக வருகின்றன.
ஜஹாங்கீரின் அனார்கலி-சலீம் கதை கேட்டு வளர்ந்தவர்கள், ஜஹாங்கீர் போதையிலேயே வழ்க்கையைக் கழித்ததும், அவரது காதலி மெஹர் என்ற நூர்ஜஹான் நாட்டை தன்னுடைய கைப்பிடியில் கொண்டு வந்ததும், எழுதத் தவறுவது. ஆனால் கோபாலகிருஷ்ணன் அதையும் கதையில் கொண்டு வந்திருக்கிறார். ஜஹாங்கீர் பலவீனமான பாதுஷா, ஷாஷஹான் எல்லோரும் நினைப்பது போல் காதல் வயப்பட்டவன் மட்டுமல்ல பலம்பொருந்திய அரசன்.
பல வரலாற்று சம்பவங்கள் கச்சிதமாக நாவலில் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் புனைவின் சுதந்திரமும் முழுக்கக் கையாளப்பட்டிருக்கிறது. புலிகள் இணைசேரும் நேரம், அதன் வேட்டை விதிகள் போன்ற சிறுதகவல்கள் கூட இதில் சரியாக வந்துள்ளன. பின்னுரையில் சொல்வது போல் புலிகள் மற்றும் இந்த வனம் குறித்து பல நூல்களைப் படித்திருக்கிறார்.
கில்ஜி படையெடுத்து வெல்லும் போது, அந்தப்புரப் பெண்கள் தடாகத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வது ஒரு முக்கியமான நிகழ்வு இந்த நாவலில். இது போன்ற உயிர்மாய்த்தல் மற்றும் சதி குறித்து சித்ரா பானர்ஜி ‘ The Last Queen’ நாவலில் காரணங்களுடன் விளக்கியிருப்பார்.
பல நூற்றாண்டுகள் கழித்து ஒரு வெள்ளைக்காரப்பெண் அந்தத் தடாகக்கதையைக் கேட்டு கருத்து ஏதும் சொல்லாமல் பெருமூச்சு விடுவது, புலிகளைப் பாதுகாக்க நகரத்தின் நல்ல பதவியை உதறி வந்தவனின் மனைவி பலரிடம் சோரம் போவது, டேவிட் எனும் யூதனுக்கும் சாராவிற்கும் படுக்கையறை விவாதம் போன்ற பல இடங்களில் கோபாலகிருஷ்ணன் தன் இருப்பை அடிக்கடி தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்.
கோபாலகிருஷ்ணனின் ஆன்மீகக்கதைகளில் வரும் மொழிநடையும், பிற சிறுகதைகளில் எழுதும் மொழிநடையும் ஒன்றல்ல. இந்த நாவல் ஆரம்பத்தில் சரித்திர நாவல்களின் மொழிநடையில் தொடங்கி பின் மாறுகிறது. எனக்குத் தெரிந்தவரை தமிழில், தமிழ்நாடில்லாத ஒரு இடத்தைக் கதைக்களமாக்கி பல நூற்றாண்டுகள் பயணம் செய்வது இதுவே முதன்முறையாக இருக்கும். (இரா. முருகனின் மிளகு கர்நாடகச் சிற்றூர் பற்றிய கதை என்றாலும் அதன் களம் வேறு). புலிகளை மையப்படுத்தி அதன் Backdropல் பல மனிதர்கள் வந்து போவதும் அடிக்கடி தமிழில் வந்ததில்லை (தேக்கடி ராஜா என்று சிறுவயதில் படித்த நாவல் யானை வளர்வதில் இருந்து மறைவது வரை வந்திருக்கும், இதில் வரும் மச்லி போல) .
மற்ற நாவல்களை விட இதற்காக அவர் அதிகநேரம் செலவழித்திருக்க வேண்டும், இரண்டுமுறை ரந்தம்பூர் சென்று பார்த்திருக்கிறார், அதன் பலன் எல்லாமே நாவலில் தெரிகிறது.
பிரதிக்கு:
தமிழினி 8667255103
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 550.