ஆசிரியர் குறிப்பு:
சோழவந்தான் அருகிலுள்ள கரட்டுப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் இவர் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்றவர். கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புத் தொகுப்புகளுடன் இதற்கு முன் ஒன்பது நாவல்களை எழுதியுள்ள இவரது பத்தாவது நாவல் இது.
திபெத்தில் யாரோ எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பு என்று திசைதிருப்பலுடன் ஆரம்பிக்கும் நாவல், பூமியின் வெவ்வேறு பகுதியில் பிறந்து வளரும், இரண்டு வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கும், இருவரின் நனவோடைப் பயணமே இந்த நூல். இருவருக்கும் பிறப்பாலோ, உறவாலோ எந்த விதத் தொடர்புமில்லை, ஆனால் சற்று உற்று நோக்கினால் ஒருவரின் இடத்தில் மற்றொருவர் இருப்பது புலப்படும்.
நாவல்களில் அடுத்தடுத்து விறுவிறுப்பான சம்பவங்கள் வாசகரை புத்தகத்தைக் கீழே வைக்கவிடாத கதையம்சம் என்பதைத் தவிர்த்து வித்தியாசமான உள்ளடக்கங்களில் சமகால உலகநாவல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. வேலை பார்ப்பவர்களின் வாக்குமூலங்களே ஒரு நாவல், பல ஆய்வறிக்கைகள் ஒரு நாவல், டிவிட்டர் பதிவுகள் பல இணைத்து ஒரு நாவல் என்று பலவிதமாக வருகின்றன. இந்த நாவல் கதையை விட தத்துவார்த்தம், தர்க்கவிவாதங்கள் நிறைந்த நாவல்.
துறவிகளை உலகம் புனிதமாகப் பார்ப்பதால் துறவு மேற்கொள்ளப்படுகிறதா? இல்லை துரோகத்தின் வலி தாளாமலோ, யாரும் இல்லாமலோ அல்லது மூன்று வேளை உணவுக்கு உத்திரவாதம் என்றோ……. எப்படியானாலும் துறவிகள் (பொதுவாக!) பெண்களைத் துறக்கிறார்களே தவிர, உணவை, உறக்கத்தைத் துறப்பதில்லை.
இல்லறவாழ்க்கை வாழ்வதிலும் துறவிகள் உண்டு. மாதம் முதலில் வீட்டு சாமான்கள் வாங்கிப்போட்டுவிட்டு, பின் எது குறித்தும் கவலையின்றி தூங்கி, முயங்கி, போட்ட சாப்பாட்டின் உப்பு, உரைப்பு குறித்து ஏதும் கருத்து சொல்லாது, காலத்தைக் கழிக்கும் துறவிகள்.
பெரும்பாலான ஆண்கள் விரும்புவது நிம்மி அண்ணியை, ஆனால் கிடைப்பதென்னவோ தீப்தி தான். கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் தீப்தியிடம் குறையென்று சொல்ல அதிகம் ஏதுமில்லை ஆனால் மனோவிடம் மூட்டைகட்டி இருக்கிறது என்பது விளங்கும். ஜய்தீப் செய்ததை அண்ணி செய்திருந்தால் கதையே வேறு இல்லையா? நோர்பு எடுக்கும் முடிவிற்கு லி யாங் அல்லது லாஸ்யா மட்டுமே காரணமா? இருவருமே ஒட்டிப்பிறக்காத இரட்டையர். சமாளித்து அதிலேயே உழல்வதும், சமாளிக்க முடியவில்லை என்று வெளியேறுவதும் மட்டுமே அவர்களிடையேயான வித்தியாசம்.
எதிர்க்கரை எப்போதுமே பசுமையானது மட்டுமல்ல, வசீகரமானதும் கூட. அடைய முடியாத பொருளில் இருக்கும் அதே ஆசையைத் தூண்டுவது எதிர்க்கரை. துறவும், இல்லறமும் நாணயத்தின் இருபக்கங்கள் என்பதைச் சொல்ல விழையும் கதையில் தத்துவவிசாரம் அதிகமாக வந்திருக்கிறது. தன்னையே ஒரு பார்வையாளன் மனநிலையில் தூர இருந்து பார்ப்பது என்பது போல பல கனமான விஷயங்களை நாவலில் கையாண்டிருக்கிறார். யுவன் சந்திரசேகரின் மற்ற நாவல்களிலிருந்து விலகியது இது. வாசகர்களிடம் கொஞ்சம் கூடுதல் Bandwidthஐக் கோரும் நாவல்.
பிரதிக்கு:
Zero Degree Publishing 89250 61999
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 420.