ஆசிரியர் குறிப்பு:
புதுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,, ஹைதராபாத்தை வாழ்விடமாகவும் கொண்டவர். பட்டிமன்றங்கள், சொற்பொழிவு வாயிலாகப் பரவலாக அறியப்பட்டவர். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
நாட்காட்டியில் ஒவ்வொரு நாளும் தாளைக் கிழிக்கையில், இன்று ஆயுளில் ஒரு நாள் குறைந்தது என்ற எண்ணம் பொதுவாக வருவதில்லை. இன்று சாயங்காலம் அவன் வருவான், நாளை பிறந்தநாள் பார்ட்டி என்று மனது எப்போதும் முன்னோக்கித் தாவுவதில், கழித்தல் கணக்கு புரிவதில்லை.
” செய்யப்படாததும்
செய்தும் பிடிபடாததும்
மனதில் சரியாகப் பதியய்யடாததுமாய்
காலத்தைக் கிழித்துக் கொண்டு
பின்னோக்கிச் செல்கிறது
விடை மட்டும் தெரியாமல்”
கடந்தகாலத்தில் மாற்றங்கள் செய்வது இயலாதது. Ifs and buts நினைவுகளில் இன்பத்தை அளிக்கலாம் நிஜத்தில் அல்ல.
சு.ரா சொல்லியது போல் கடந்தகாலம் பிழைகளின் அவமானங்களால் நிறைந்திருக்கிறது.
” மர்ம உருளைகளை பூடகமாக உருட்டி
போக்குக் காட்டிக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு நடப்பிலும்
என்னைக் காட்சிப்படுத்த நினைக்கும்
கோமாளி பிம்பத்தை
சில கிறுக்கல்களில் சிலர் பார்வைகளை
நேராக்க விளைகிறேன்
தோற்காத முனைப்போடு
இன்னமும்……”
காதல் கவிதைகள் எழுதும் போதெல்லாம் விஜி இரண்டடி வளர்ந்து விடுகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.
” உள்ளுக்குள் குறுகுறுக்கிறாய்
ஏதோ சொல்ல முடியாத சமூக இடைவெளிகளில்
வெளிக்காட்டியும் காட்டாமலுமாய்
இதமாய் நெருடிய
ஜ்வாலைகளின் சாடைத் தீக்குள்
உள்ளிருந்தும் தெரியாத
நீர்த்துளியாய் நான்”
” உன்னுள் வலிகளைத் திணிக்கிறேன்
ஒப்புக்காய் வெறுக்கிறேன்
ஒற்றைச் சொல்லில்
ஏதேனும் ஒரு புள்ளிஉரசலில்
நம் காலாவதியான காதலுக்கு
திருப்புமுனை எங்கேனும் வரலாம் என்று”
பல காதல் கவிதைகளில் இறைஞ்சும் தொனி இருக்கிறது. முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது என்ற முனைப்பு தெரிகிறது. இதற்கு நேர்மாறாக அரசியல், சமூகப் பிரச்சனைகளைப் பேசுகையில் வார்த்தைகள் ஆத்திரம் தடவி வருகின்றன. அப்பா, அம்மா குறித்த கவிதைகளில் குழைவு கலக்கிறது. கவிஞர்கள் மட்டுமல்ல, நாமும் கூட எதிராளிக்குத் தக்க எல்லாமுமாக இருக்கிறோம் அல்லவா!
விஜியிடம் வார்த்தைப் பஞ்சமில்லை, மொழியாளுமையும் நன்றாக உள்ளது. கனவுப்பிரதிமை என்பது நல்லதொரு Coinage. ஆனால் பல கவிதைகள் நேரடித் தகவல் ஒன்றைச் சொல்லி முடிந்து விடுகின்றன. நேரிலோ, மேடையிலோ பேசுவது போல் அல்லாது, கவிதைகளுக்கு வாசகஇடைவெளி அவசியம். ” என் கண்களைக் கண்டதும் கமிழும் உன் கண்கள் கொசுவலையா அல்லது மீன் வலையா” என்று நாற்பதாண்டுகளுக்கு முன் வந்த வரிகளில், கொசுவலை உள்ளே விடாது துரத்துவது, மீன்வலை உள்ளிழுத்துக் கொள்வது என்பது வாசகஇடைவெளி.
“மருத மர நிழல்கள் மீட்டாத தண்டவாளச் சோகங்களை எனக்கேன் நிரந்தரித்தாய் சசி”
என்பதில் பெண்கள் அண்மையை அளிப்பது போல் அளித்து விலகும் போக்கு தெரிகிறது. கலாப்ரியா மறந்தாலும் நாம் மறக்கப் போவதில்லை.
தொடர்ந்து வரும் கவிதை நூல் பதிவுகளைப் படித்து ஒரிஜினல் பீமபுஷ்டி அல்வா கிடைப்பதை விட இந்த நூல்கள் கிடைப்பது சிரமம் போலிருக்கிறதே என்று சொல்லும் அன்பர்களை நானும் ஆமோதிக்கிறேன். பதிப்பக முகவரி, எண் இருந்தால் போதாதா என்பவர்களுக்கு, புத்தகமுழுவிலையுடன் அயல்மாநிலத் தபால் ரூ100ம் சேர்த்து வாங்கினால் என் மனைவி அடிக்கடி என்னை முட்டாள் என்பதை நானே நிரூபிப்பது போல் ஆகிவிடும். இந்தப் புத்தகக் கண்காட்சியில்,
100க்கு 99 பேர் வாங்கவிரும்புவதாகக் கூறிய நூல் ஒரிடத்தில் மட்டுமே, இருட்டுக்கடை அல்வா போல் எங்களுக்குக் கிளைகள் இல்லை என்றார்கள். “சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்” என்று இயேசு சொன்னதைப் போல புத்தகங்களை எங்களிடம் வரவிடுங்கள் என்று கூக்குரலிடத் தோன்றுகிறது.
பிரதிக்கு:
படைப்பு பதிப்பகம் 94893 75575
முதல்பதிப்பு 2021
விலை ரூ. 100