ஆசிரியர் குறிப்பு:
கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். பொறியியலாராகத் துபாயில் பணி. வனம் இணையஇதழ் ஆசிரியர்களில் ஒருவர். ஏற்கனவே இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன, ,இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
முதல் தொகுப்பை Kids gloveஉடன் அணுக வேண்டிய தேவையில்லை என்று சொல்லிக் கொண்டு வருகின்ற தொகுப்புகள் குறைவு.
துபாயில் வசித்தாலும் இவரது கதைகள் இலங்கை இஸ்லாமிய மக்களின் வாழ்வியலைச் சுற்றியே மையம் கொண்டிருக்கின்றன. அடர்ந்து செறிந்த மொழியும், அதைக் கொண்டு மொழிநடையை ஒரு Forceஆக மாற்றுவதும்
சப்னாஸின் இலக்கியப்பயணம்.
அக்கரைப்பற்று முஸ்லீம்களின் வாழ்க்கை
சப்னாஸின் கதைகளில் அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது. போரின் போது விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவம் இடையே மாட்டிக் கொண்டு அடையாளச்சிக்கலில் தவிக்கிறார்கள். முஸ்லிம் தீவிரவாதம் உள்நுழையும் பொழுது அமைதிவிரும்பிகள் அவதியுறுகிறார்கள்.
அரசியல் காரணங்களுக்காக கொலை நடக்கிறது. அக்கரைப்பற்று போன்ற இடங்களிலும் அமெரிக்கா போல போதை மருந்துகள் தாராளமாக நடமாடுவது அதிர்ச்சி அளிக்கிறது.
சிருஷ்டியுலகம், முந்நூறுவா இரண்டுமே சிறார் மீதான வெவ்வேறு விதமான வன்முறைகள். பாலினம் மட்டும் வேறு.
இரண்டு கதைகளுமே எந்த வித மிகையுணர்ச்சியின்றி, தேவைப்படும் வார்த்தைகள் மிகாது சொல்லப்பட்டு இருக்கின்றது.
முதல் கதை Cannibalism. ஆனால் அந்தக் கதையை அருவருப்பு ஏற்படாத விதத்தில், நுணுக்கமாகவும் அங்கிங்கு போக்குக் காட்டியும் Present செய்தவிதம் நன்று. எல்லோருக்கும் புரிந்திருந்தால் ‘இசைவு’ கதை போல பலத்த விமர்சனத்திற்கு வாய்ப்பிருக்கும் கதை. சென்ட்ரல் யூனியன் கோப்ரட்டி என்வரையில் தொகுப்பின் சிறந்த கதை. வேறொன்றில் வாசக கவனத்தைத் திருப்பி, அநாவசியத் தகவல்கள் போல் சிலவற்றைச் சொல்லிக் கடைசியில் இரண்டையும் இணைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் கதை.
சப்னாஸ் அடிப்படையில் கவிஞர் எனவே வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் அதைத் தெளிவாகப் பயன்படுத்துகிறார். ‘முஸ்லிமே’ என்ற வார்த்தை இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வருகின்றது, ஆனால் ஒவ்வொரு முறையும் அது தரும் உணர்வு வேறு. விடுதலைப்புலிகள் பழகியாச்சே என்று உயிரோடு விட்டு ஊரைவிட்டுக் கிளம்பச் சொல்வது, இலங்கை ராணுவம் உடையை அவிழ்த்து முஸ்லிம் என்று விட்டுவிடுவது ஆகிய இடங்களில் ஒருமாத்திரை குரல் உயராது, சார்புநிலை எடுக்காது சொல்ல முடிவது நல்ல இலக்கியவாதியின் அடையாளம். தமிழுக்கு நல்லதொரு சிறுகதை எழுத்தாளர் சேர்ந்திருக்கிறார் என்பதை அறிவிக்கும் தொகுப்பு.
பிரதிக்கு:
தமிழ்வெளி