ஆசிரியர் குறிப்பு:
யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தற்போது பிரான்ஸில் வசிப்பவர். தொடர் வாசிப்பிலும், வாசித்ததைப் பகிர்தலிலும் ஆர்வம் கொண்டவர். இவருடைய சிறுகதைத் தொகுப்பு மற்றும் அதர் இருள் எனும் இந்த நாவல் இரண்டுமே சமீபத்தில் வெளியானவை.
வெவ்வேறு நாடுகளில், வேற்றுக் கலாச்சாரங்களின் இடையே வாழ்பவர்கள், தமிழில் புனைவின் எல்லையை அதிகரிக்கிறார்கள் என்பது பலமுறை சொன்னது. Wikipedia எடுத்தாளர்களால் இதைச் செய்ய முடியாது, செய்தாலும் தேன்குழல் செய்யுமுன் மாவில் பிடித்துவைத்த பிள்ளையாருக்கு குரங்கின் சாயல் வந்தது போல் இருக்கும்.
1986ல் Chernobylல் அணுஉலை வெடித்துப் பெரும் விபத்தாகிறது. செர்னோபில் விபத்தில் கதிர்வீச்சின் பாதிப்பால் உருகி உயிரிழந்தவரின் மனைவி மூன்றுமாதத் குழந்தையுடன், அங்கிருக்கப் பிடிக்காமல் பிரான்ஸில் குடியேறுகிறாள். இலங்கையில் போரில் குடும்பம் மொத்தத்தையும் இழந்த சிறுவனை நண்பனின் தாய் வளர்த்து, உடைமைகளை விற்று பிரான்ஸுக்கு அனுப்புகிறாள். ரஷ்யப் பெண்ணுக்கும், இலங்கை இளைஞனுக்கும் விதி எங்கோ முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறது.
இந்த நாவலை பலருடைய கதையைச் சொல்லிக் கடப்பது நல்ல யுத்தி. அதே போல் உக்ரைன் மீது தொடுக்கப்பட்ட போரையும் உள்ளே கொண்டு வருவது. இலங்கையின் நிலைமை சில வரிகளில் ஆழமாகச் சொல்லப்படுகிறது. அகதி என்றால் அடுத்த நாடுகளும் விசாவிற்குத் தாமதம் செய்வது, புலம்பெயர்ந்த இடத்தில் தக்கஆவணங்கள் கொடுத்தால் குடியுரிமை கொடுப்போம் என்று சொல்வது (குண்டு போட்டுக் கொல்வோரிடம் ஆவணங்களை எப்படிப் பெறுவது!) என்பது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் ஓரிரு வரியில், தன்னிரக்கம் துளியும் இல்லாமல் சொல்லப்பட்டு கடந்து போகின்றன. சிறுநீர் கழிக்கையில் ஜிப் மாட்டிக்கொள்ளும் சிறுவன் வீடுசேர்ந்து எதிர்கொள்ளும் துயரம், ஊர்மக்கள் சேர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு மொத்தமாக திதி கொடுப்பது எல்லாம் இலங்கை போன்ற வெகுசில நாடுகளில் மட்டுமே நிகழும்.
போர் இந்த நாவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையில் நடந்த யுத்தமாகட்டும், பின்னர் உக்ரேனில் நடக்கும் யுத்தமாகட்டும் பல உயிர் இழப்புகளையும், பலவருடங்கள் காத்திருப்பையும் மட்டுமே கொண்டு வந்து சேர்க்கப்போகிறது.
அதர் இருள் Zeeo Degree 2022 குறுநாவல் போட்டியில் வென்ற நாவல்களில் ஒன்று. என்னைப் பொறுத்த வரையில் இந்த நாவல் வார்த்தைக் கணக்கை எல்லாம் ஒதுக்கிவைத்து எழுதப்பட்டிருந்தால் இன்னும் Powerful நாவலாக இருந்திருக்கும்.
வம்சி பதிப்பிற்காவது அதை செய்திருக்கலாம். அகரனின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். நம்பிக்கை அளிக்கும் எழுத்து. ஆனால் இது போன்ற வித்தியாசமான நாவலை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. புலம்பெயர்ந்த இலங்கை வாலிபனின் பார்வையில் பிரான்ஸ் தத்ரூபமாக வந்திருக்கிறது. அலெக்ஸ்-பனியின் பிரிவில் பிரெஞ்சுக் கலாச்சாரம் எதிரொலிக்கிறது. சிறிய நாவலில் இரண்டு முறை பல நூற்றாண்டுகளைக் கடந்த இரண்டு கதைகள் வந்து போகின்றன. அகரனுக்குச் சொல்ல வேண்டியது, எந்தக் காரணம் கொண்டும் எழுதுவதை நிறுத்தாதீர்கள், இயல்பாகவே அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.
பிரதிக்கு:
வம்சி புக்ஸ் 94458 70995
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 200.