வெற்றுப் பூந்தட்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு – சுஸந்த மூனமல்பே – சிங்களத்தில் இருந்து தமிழுக்கு ரிஷான் ஷெரீப்:
ஐந்துவிளக்குகளின் கதை என்று சமீபத்தில் வெளிவந்த தொகுப்பின் கதைகளில் ஒன்று இது. X videosஆ பார்ப்பதே இல்லையே என்று சொல்லும் தமிழ்ச்சூழலில் இருந்து விலகிய கதை இது. கள்ள உறவுகளை கானொலியாக (பெரும்பாலும் பெண்ணுக்குத் தெரியாமல்) எடுத்து வைத்துக் கொள்வதை ஒரு பதக்கம் போல் எண்ணுவர்கள் பலர். அப்பாவி முகங்கள் கடைசியில் சந்தி சிரிக்கும். இந்தப் பின்னணியில், எப்படி இது நேர்ந்தது என்பதை வெகு இயல்பாகச் சொல்லி முடியும் கதை இது. ரிஷானின் சிறந்த மொழிபெயர்ப்பு.
பாட்டுவெயில் – சாந்தன்:
சாந்தனின் கதை வயதான காலத்தில் ஒரு Nostalgia பயணம் போல் சென்று முடிவில் சட்டென்று திசைமாறுகிறது. பெண்கள் மட்டும் ஆண்கள் அழகாக இருக்கிறாய் என்றால் குளிர்ந்து போவதில்லை, எத்தனை வயதானாலும் ஆண்களும் தான் பெண்கள் அப்படிச் சொல்கையில் சலனமடைகிறார்கள். பொதுவாக, பெண்களைப் பலவருடங்கள் கழித்தும் ஆண்கள் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்கள், இதில் தலைகீழ். எளிமையாகச் சொல்லப்படுவது போன்ற கதை உணர்வுகளின் ஆழத்திற்குச் செல்வது மட்டுமல்லாது இலங்கை எனும் தேசம் சிதிலமடைந்ததையும் கோடிட்டுக் காட்டுகிறது.