நன்றி அகநாழிகை/ பொன்.வாசுதேவன்.
தமிழில் பட்டியல் என்றாலே இப்போதெல்லாம் பயம் வருகிறது. மூளையின் செயலிக்கும், கைவிரல்களுக்கும் இருக்கும் தொடர்பு அறுந்து போகிறது. நினைவில் நின்றவை என்று சொல்வதில், பட்டியல் வந்தாலும் கூடப் பழி நினைவிற்குப் போய்ச்சேரட்டும்.
நாவல்கள் எப்போதுமே தமிழ் நவீன இலக்கியத்தின் பலவீனம் என்றே சொல்ல வேண்டும். சிறுகதைகளில் ஒரு பொறியை வைத்து, பிரகாசமாகக் காட்டும் வித்தை நாவல்களில் கைகூடுவதில்லை. நாவல் நின்று விளையாட வேண்டிய களம். சிறுகதைகளில், கவிதைகளில் நாம் உலகத்தரத்தில் இருக்கிறோம் என்று இறுமாப்புடன் சொல்வது போல், நாவலில் நம்மால் சொல்வதற்கில்லை. அனுபவக்குறைவு, ஆய்வு செய்யாமல் எழுதுவது, அதிககாலம் எடுக்கத் தயங்குவது போன்றவையே முக்கியமான காரணங்களாகச் சொல்லலாம். சமகால உலக நாவல்களில் இருக்கும் வீச்சின் அருகில் செல்லக்கூட நமக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது தெரியவில்லை.
நவீன நாவல்கள் ஒரே மையச்சரடைத் தொற்றிக் கொண்டு தொடர்ந்து செல்பவை அல்ல. ஆய்வறிக்கை, வாக்குமூலங்கள், இரண்டுகதைசொல்லிகள் வேறுவேறு கதையைச் சொல்வது போன்று எத்தனையோ வடிவ மாற்றங்கள் வந்து விட்டன.
நாவல் வேறு ஒருஉலகத்திற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்பதே நோக்கமாதலால், கிளைக்கதைகள் இடை வந்து சொல்லாமல் விடைபெற்றுக் கொள்ளும். ஒவ்வொன்றிற்கும் மையக்கதைக்கும் என்ன தொடர்பு என்பதில் யாரும் இப்போது கவனம் செலுத்துவதில்லை. புக்கர் இன்டர்னேஷனல் விருதை வென்ற Tomb of Sand பல கிளைக்கதைகளின் தொகுப்பே. இந்த நேரத்தில் இரண்டு தமிழ் நாவல்களைக் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. முதலாவது தேவிபாரதியின் நொய்யல். உலக நாவல்கள் வாசிப்பு இல்லாத பலரும் அதை பலரது கதை பாதியில் நின்றுவிடுவதாகக் கூறினர்.
இரண்டாவது லாவண்யா சுந்தர்ராஜனின் காயாம்பூ. நாவலின் முதல் வடிவம், பல கிளைக்கதைகளை உள்ளடக்கி விஸ்தாரமாக விரிந்து நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குவது. நூல் வடிவில் வந்தது, மையச்சரடைத் தொடர்ந்து செல்லும் கதையை மட்டும் அடக்கிய அபூர்வ சகோதரர்கள் அப்பு வடிவம்.
தேவிபாரதியின் முதல் மூன்று நாவல்களின் மறுவாசிப்பும் நொய்யல் வாசிப்பும் இவ்வருடம் நிகழ்ந்தது. இப்போது தமிழில் எழுதும் நாவலாசிரியர்களில் சந்தேகத்துக்கிடமின்றி முதல் ஐந்து இடத்திற்குள் வருபவர் தேவிபாரதி. நொய்யல் தமிழ்நாவல்களில் ஒரு மைல்கல்.
மூன்று தலைமுறைக் கதைகளுடன், நதியின் கதையையும் அதைச் சுற்றி வாழ்ந்த பல சமூகத்தின் கதையையும் சேர்த்து சொல்வது.
யதார்த்தனின் ‘நகுலாத்தை’ போர்மேகம் சூழ்ந்த நாட்டில் வன்னி கிராமவாழ்வைச் சொல்வது. சிறுதெய்வங்கள், பண்பாடு, நம்பிக்கைகள் என்பதில் அதிக கவனமும், போரைப் பின்புலமாகவும் கொண்ட நாவல்.
நரனின் ‘பராரி’ மூன்று காலகட்டங்களில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை யதார்த்தத்துடன் சொல்வது. நரனின் மொழியாளுமையும், நுட்பமும் சிறுகதை வடிவத்தை விட நாவலில் தெளிவாகத் தெரியும். ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரனின் எழுபத்தி மூன்றாவது கூட்டத்தினர் சிறுபான்மைச் சமூகத்தின் அடையாளச்சிக்கலை நடுநிலைமையுடன் புனைவின் வழி சொல்வது.
நர்மதா குப்புசாமியின், தஸ்தயேவ்ஸ்கியின் குறுநாவல் மொழிபெயர்ப்பான ‘நிரந்தரக் கணவன்’ நல்ல நாவல். தமிழுக்கு நல்ல மொழிபெயர்ப்பில் கிடைத்திருக்கிறது. ஷஹிதாவின் கூட்ஸி மொழிபெயர்ப்பான மானக்கேடு நாவலும் கூட்ஸியின் மாஸ்டர்பீஸ். லதா அருணாச்சலத்தின் மொழிபெயர்ப்பான ‘பிராம்ளஸ்கி விடுதி’ தமிழுக்கு வித்தியாசமான களத்தில், நுட்பமாக எழுதப்பட்ட நாவல். ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பான கிஹோர் குறுநாவலும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று.
குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பில் T D ராமகிருஷ்ணனின் ஐந்து நாவல்களையும் வாசித்தது இவ்வாண்டில் சிறந்ததொரு அனுபவம். ராமகிருஷ்ணன் வரலாற்றுத் தகவல்களையும், கற்பனையையும் எது எங்கே கலக்கிறது என்பதை மறைத்து யதார்த்தத்திலும் மாயயதார்த்திலும் கதைகள் எழுதுபவர். மீரான் மைதீனின் கலுங்குப் பட்டாளம் ரசமான, சிறிய நாவல். மைதீன் அதிகம் கவனிக்கப்படாத நல்லதொரு எழுத்தாளர்.
நசீமா ரசாக்கின் ‘மராம்பு’ அந்நிய நிலத்தில் நம் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசும் குறுநாவல், நல்ல முயற்சி. தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் இரு நாவல்களின் (பீடி, கடுந்துயருற்ற காதலர்கள்……) மொழிபெயர்ப்பு ரிஷான் ஷெரீப்பால் செய்யப்பட்டு வெளிவந்தன. ஸ்வர்ணமாலி சமகால இலக்கியத்தில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர். சிற்பி பாலசுப்ரமணியன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த கே.ஆர். மீராவின் ‘அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ சிறிய நாவல்களை சக்தி வாய்ந்தவையாக மாற்றும் மீராவின் திறமைக்கு மற்றுமொரு உதாரணம். மோ.செந்தில்குமாரின் மொழிபெயர்ப்பில் மீராவின் ‘ஆராச்சார்’ ஒரு மாஸ்டர்பீஸ். மலையாளம் தமிழுக்கு வழங்கும் கொடை.
கண்ணன் ராமசாமியின் ‘ ஹமார்ஷியா’ Online games Conceptல் தமிழில் வெளிவந்த முதல் நாவல். கௌதம சித்தார்த்தனின் ‘ இப்போது என்ன நேரம் மிஸ்டர் குதிரை’ விஞ்ஞானக் கதைகளில் வித்தியாசமான கதை. இந்த இரண்டு நாவல்களுமே பரிட்சார்த்த முறையில் தமிழின் புனைவு எல்லையை விரிவுபடுத்துபவை.
ஷோபா சக்தியின் ‘ ஸலாம் அலைக்’ நுட்பம் மிகுந்த எழுத்தாளரின் மற்றுமொரு பங்களிப்பு. இரா.முருகனின் ‘மிளகு’ பெருநாவல் காலத்தில் தொலைந்துபோகும் கதை. தி.அ.ஸ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘ அத்தைக்கு மரணமில்லை’ என்ற நூல் இந்திய இலக்கியம் எவ்வளவு செழுமை வாய்ந்தது என்பதன் ஒரு சோற்றுப்பதம். கே.நல்லதம்பியின் மொழிபெயர்ப்பில் வந்த கிருஷ்ண சந்தரின் காஞ்சன சீதை’ ஒரு கன்னட அபிதா. யுவன் சந்திரசேகரின் எண்கோணமனிதன் தேடலின் இனிய ஆராதனை.
பெண்களிடமிருந்து வித்தியாசமான களங்களில் எழுதப்பட்ட நாவல்கள் அதிகமாகிக் கொண்டுவருவது தமிழிலக்கியத்திற்கு நல்லதொரு அறிகுறி.
மைதிலியின் ‘ பிறப்பொக்கும்’, ரமாவின் ‘ அம்பரம்’, கலைச்செல்வியின் ‘ ஆலகாலம்’,
லஷ்மி பாலகிருஷ்ணனின் ‘ஆனந்தவல்லி’
ஆகியவை முக்கியமானவை. கலைச்செல்வி தொடர்ந்து எழுதுகிறார். காந்தியை விட்டு விலகினால் அவர் எழுத்தின் நுட்பம் எல்லோருக்கும் தெரியவரும். ஒரு வாசகனாகவே இதைச் சொல்கிறேன். மற்ற மூவரும் ஒன்றுடன் நிறுத்தாமல் தொடர வேண்டும். தங்கள் முதல் நாவலில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்திய கண்மணி, பிரியா விஜயராகவன் போன்றோர்களும் தான்.
தமிழ் நாவல்கள் காய்ந்த நிலம். ஒரு துளி மழையில் கூட ஒரு சிறுசெடி முளைவிடலாம்.