Veronesi இத்தாலிய எழுத்தாளர். இது இவருடைய ஒன்பதாவது நாவல். ஏற்கனவே இத்தாலிய இலக்கியத்தின் உயர்விருதையும், வருடத்தின் சிறந்த நாவல் விருதையும் பெற்ற இந்த நூல், உலக வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Elena Pala இத்தாலியைச் சேர்ந்தவர். மொழியியலில் முனைவர் பட்டத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பெற்றவர். 2008ல் இருந்து இங்கிலாந்தில் வசிப்பவர். பல தொழில் முயற்சிகள் செய்துவிட்டு மொழிபெயர்ப்பில் உள்ள ஆர்வத்தில் அந்தத்துறைக்குத் திரும்பியிருக்கும் இவரது முதல் மொழிபெயர்ப்பு இது.

Marco அவனது நண்பனுடன் இன்னொரு நகரில் சூதாட விமானத்தில் ஏறியதில் இருந்து, விமானப்பயணத்திற்கு பயப்படும் நண்பனது தொல்லைகளைத் தாங்காது முடிவில் இருவரும் இறங்கி விடுகிறார்கள். அந்த விமானம் விபத்துக்குள்ளாகி பயணம் செய்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை. அதே விமானத்தில் நான் போயிருக்க வேண்டியது என்று தொலைக்காட்சியில் அழுதபடி பேட்டி கொடுத்த ஏர்ஹோஸ்டஸ் Marinaவிற்கும் தனக்கும் விதி முடிச்சுப் போட்டிருக்கிறது என்று நம்பிய Marco, அவளைத் தேடிப்பழகித் திருமணமும் செய்து கொள்கிறான். Wrong decision. உண்மையில் Marinaவிற்கு அன்று விடுமுறை தினம்.

Marina போல பலரை நம் வாழ்வில் பார்க்கலாம். எல்லாமிருந்தும் அவர்களுக்கு எப்போதும் சோகமாக இருக்க வேண்டும். சோகமாக இருப்பதற்கான காரணங்கள் அவர்களுக்கு கடல்நீரீல் கிடைக்கும் உப்பை விட எளிதில் கிடைக்கும். எது கிடைத்தாலும் அவர்கள் வாழ்க்கையில் திருப்தி என்று சொல்லப் போவதில்லை.

Marco சிறுவயதில் அந்த வயதுக்குரிய வளர்ச்சியை அடையாது ஏதோ ஹார்மோன் குறைபாடால் சின்னத் தோற்றத்தில் இருந்ததால், அவனது தாயாரால் Hummingbird என்று செல்லமாக அழைக்கப்படுகிறான். அவள் கற்பனை கூட செய்திருக்க மாட்டாள், அந்தப் பெயர் பறவையின் இன்னொரு குணாதிசயத்திற்கும் பொருந்தப் போகிறது என்பது. சூறைக்காற்று அடிக்கையில், Hummingbird இறகை வேகமாக அடித்து, இருந்த இடத்திலேயே இருக்கும். அது தான் அவன் வாழ்க்கை மொத்தமும் நடக்கப் போகிறது. அதுவே இந்த நாவல்.

Platonic love இந்த நாவலில் முக்கிய அம்சம்.
எவ்வளவு உயிருக்குயிராய் காதலித்திருந்தாலும் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்ந்தால் ஒரு சேமியா உப்புமாவில் கூட சண்டை வரும். அதுவே கைகூடாத காதல் என்றால் சாகும்வரை புனிதமாகப் பார்த்துக் கொள்ளலாம். “You are mine and I am yours, Let us write it like that, Luisa, Luisa, My Luisa, On every surface on the god’s green earth”.

நாவல் பின்நவீனத்துவபாணியில் ஏராளமான யுத்திகளை இணைத்து, முன்னும் பின்னுமாய் நகர்கிறது. இது Marcoவின் வாழ்க்கை. ஏன் சிலருக்கு மட்டும் வாழ்க்கை எண்ணற்ற துக்கங்கள், இழப்புகள், நிம்மதியின்மை நிறைந்தவையாக இருக்கிறது? சிலருக்கு வாழ்க்கையின் அதிகபட்ச சோகமே முன்முடிவுசெய்த பயணம் ரத்தாவது. அந்த சோகத்தையே அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத வசதியான வாழ்க்கை. முன்வினை என்று சொல்லும் சமாதானமெல்லாம், ஆண்பிள்ளையுடன் பேசினால் மாடுமுட்டும் என்பது போன்ற சால்ஜாப்பு. வாழ்க்கை புதிர்களால் நிரம்பியது. Marcoவிற்காவது அத்தனை இடியும் தாங்கிக்கொண்டு வாழ, ஒரு குறிக்கோள் இருந்தது. நம்மில் பலருக்கு அதுவுமில்லை. Elena Palaவின் மொழிபெயர்ப்பை அற்புதம் என்ற வார்த்தையால் தான் சொல்ல வேண்டும். Guardian இந்த நாவலை Magnificent என்றிருக்கிறது. பல எழுத்தாளர்கள் இதை மாஸ்டர்பீஸ் என்றிருக்கிறார்கள். தி.ஜாவின் செம்பருத்தி நாவலை முதன்முறை படித்தபோது இருந்த மனநிலை எனக்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s