நிழலின் அசைவு – விஷால் ராஜா:
பெருநோய் மரணம் குறித்த கண்ணோட்டத்தை எல்லோருக்குமே மாற்றியிருக்கிறது. ஜிம்மில் தினம் தவறாது இரண்டு மணிநேரம் உழைப்பவன் மரணிக்க, பெருத்த உடலைத் தூக்க முடியாது விடாது Junk food சாப்பிடுபவன் பிழைத்துக் கொண்டான். இந்த நிலையாமையைக் கதையில் கொண்டு வந்ததோடு, ஒரு பெண் வாலிபர்கள் இடையில் வந்து ஒரு சமநிலையைக் குலைப்பது, Depression எப்படி தன் பிடியை இறுக்கிக் கொண்டே போகும் என்பதும் கதையில் நன்றாக வந்திருக்கிறது. கதை முழுதும் தஸ்தயேவ்ஸ்கியைப் பேசுபவர் கதையின் முடிவில் Poeவின் சாயல் தெரிகிறது.
எத்திசை செலினும் அத்திசைச் சோறே:
காலங்களை கடக்க முடிந்தால் எத்தனையோ நாகரீகங்களைக் கடக்கலாம். வயிற்றில் பசி அனலாகத் தகிப்பவனுக்கு காதல் தலையை எட்டிப் பார்க்காது. சமூகவிதிகள் எப்போதும் யார் பலசாலியோ அவனுக்கே சாதகமானவை. வித்தியாசமான முறையில் சொல்லப்பட்ட கதை.
நிலைவிழி – அஜிதன்:
நாவலை விடசிறுகதைகளில் அஜிதனால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது என்பது என் கருத்து. மரணம் நிச்சயம் என்று தெரியும் போது குடும்பபாசம், லோகாதய ஆசைகள் கூடும். அந்தக் குடும்பத்தில் மூன்று பேருக்கிடையேயான தருணங்கள் அழகாகப் படம்பிடிக்கப் பட்டிருக்கின்றன. பிரேமாவைப் பார்த்து இவளை மணப்பவன் அதிர்ஷ்டசாலி, தன் உடலைப் பார்த்து அசூயை கொள்வது என்று பல இடங்கள் வெகு நுணுக்கமாக வந்திருக்கின்றன. கடைசிப்பத்தியில் குட்டியைக் கவ்விவரும் புலி ஒரு கனவின் சாயையும், தாளமுடியாத ஏக்கத்தையும் ஒருங்கே கொண்டு வந்து சேர்க்கிறது. இந்த வயதில் இவ்வளவு நுட்பமாக எழுதுவது ஆச்சரியம். தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.