ஆசிரியர் குறிப்பு:
இலங்கை திரிகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்தவர். விஞ்ஞான ஆசிரியராக அரசுப் பள்ளியில் பணிபுரிவதோடு, ஊடகத்துறையிலும் இயங்கி வருகிறார். இவரது மூன்று நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது நான்காவது. கவிதைத்தொகுப்பு.
பர்தா ஒரு அடக்குமுறை. அது உடையல்ல. பாதிக்கப்பட்ட எத்தனையோ நாடுகளின் பெண்கள் இதைச் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் வெப்பப் பிரதேசமான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இன்னும் சிரமம். ஆனால் ஒரு பெண், அதை அணிவதைப் பாதுகாப்பாக உணர்கிறேன் என்று சொல்கையில் மற்றவர் யாரும் அது குறித்து எந்தக் கருத்தும் சொல்வதற்கு இடமில்லை.
” திரிக்கவும் உரிக்கவும் மட்டுமே விழைகிற
கூர்நகங்களுகிடையேயான
தொடர் பயணங்களுக்குள்
எப்படித் திறப்பேன் முகத்திரை”
நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன் என்று எப்போதோ சொல்லி விட்டார் கண்ணதாசன். விஷயம் புதிதல்ல. ஆனால் இந்தத் தமிழ்! இலங்கையில் தமிழ் சொல்லிக் கொடுக்கும் அத்தனை தமிழாசிரியர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
” வேலிக் கதியாலோடு
ஒன்றிப் படர்ந்தேறும்
பசுங்கொடியின் செவ்விளம்பூ
அதன் அகன்ற கிடுகுப் பின்னலுக்குள்
முகம் புதைந்து தரும்
வெகு ஆபூர்வமான
தரிசனங்களுக்குள்ளும் கூட
தவிர்க்க முடியாதபடி
தலைநீட்டுதே உன்முகம்”
இலங்கை வனப்பான தேசம் என்பதில் சந்தேகமில்லை. இயற்கை வர்ணனைகள் ஏராளமாக வந்திருக்கின்றன இவரது கவிதைகளில். இயற்கை கொஞ்சம் அகத்தையும் சேர்த்துத் தொடுகின்றது இங்கே:
” தென்னங் குருத்துரசும் மொட்டைமாடி
முகமோதும் ஈரத்துணியின் நறுமணம்
நெடிய கனவுச்சூரியன் சந்தினாகி
காதோரமாய் கிசுகிசுத்த
ஏகாந்தமான பொழுது”
இந்த தேசத்தில் இதுவே அப்பாவி ஜனங்களின் நிலை. பரஸ்பர நம்பிக்கையின்மையால் இழப்பு எல்லோருக்குமே. எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்பது சிலருக்கு மட்டுமே.
” வெற்றுக்கோசங்களின்
ஆரவாரங்களுக்குள்ளே
மௌனத்தின் கொடிய புழுக்கங்களோடு
இலையுயர்த்திக் கிடக்கிறது ஜீவிதம்.
எனினும் மறைந்திருக்குமென்
வேர் மயிர்களோ இன்னமும்
துழாவிக் கொண்டேயிருக்கிறது
மண்ணைத் தன் உயிர்ப்புக்கான
ஈரலிப்பை வேண்டி”
இலங்கை போன்ற தேசத்தில் இருந்து ஒரு இஸ்லாமியப் பெண்ணின் குரல் இது. அழகை, குழந்தைமையை, இடுப்பைச் சுற்றியிருக்கும் அன்பின் விரல்களை, காதலைப் பற்றிப் பேசுவதை விட தவிப்பு, ஏமாற்றம், அழிவு பற்றியே அதிகம் பேசப்படுகிறது. தான் சார்ந்த சமூகத்தில் அதுவும் ஒரு பெண்ணாகப் போரால் பாதிக்கப்பட்ட தேசத்தில் இருத்தலின் சிரமங்களைச் சொல்லும் குரல் இவருடையது. விளைநிலங்கள், கால்நடைகள் அபகரிக்கப்படுகின்றன. குஞ்சுக்குருமான்களோடு பெண்கள் சிறைவைக்கப் படுகின்றனர். இன்னும் என்னென்னவோ நடக்கின்றன. கண்ணீரில் மூழ்கும் தேசம்.
மொழி நல்ல செறிவாக இருக்கிறது. தங்கை மகனைப் பற்றிய கவிதைகளில் உணர்வும் அழகாக இவர் நினைப்பதை வெளிப்படுத்துகின்றது. ஆனால் பல இடங்களில் அதியுணர்ச்சி நாடகபாணியை ஏற்படுத்துகிறது. கவிதைகள் வெகுகூர்மையாக, ஊர்வசி சாரதாவின் மூக்கைப் போலிருத்தல் அவசியம். உதாரணத்திற்கு கடைசிக் கவிதையில் ‘இன்னமும்’ என்ற வார்த்தை இல்லாவிட்டாலும் வேர் ஈரத்தைத் தேடிக்கொண்டுதான் இருக்கப் போகிறது. ஆனால் ‘இன்னமும்’ என்ற வார்த்தை ஒரே நேரத்தில் நேர்மறை, எதிர்மறை இரண்டு உணர்ச்சிகளையும் வாசிப்பவரின் மனநிலைக்கேற்ப வழங்கக்கூடும். வார்த்தைகள் சிலநேரங்களில் அடர்இருளில் நடத்தும் வாள்சண்டை போல் ஆபத்தானவை. பல நேரங்களில் வண்ணத்துப்பூச்சிகளும் அவையே. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
பிரதிக்கு:
மோக்லி பப்ளிஷர்ஸ் 91768 91732
முதல்பதிப்பு 2017
விலை ரூ. 80.