மெல்போர்னைச் சேர்ந்த எழுத்தாளர். எடிட்டராக, புத்தக விற்பனையாளராக இருந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் இந்த நாவல், பெருவரவேற்பிற்குப் பின் இருபது நாடுகளில் பதிப்பிக்கப்படப் போகிறது. ஜெசிகாவின் இரண்டாவது நாவல் இது.
பெயர் சொல்லப்படாத நாட்டில் இருந்து, டோக்கியோவிற்கு வந்து மகள் விமான நிலையத்தில் அவள் அம்மாவிற்காகக் காத்திருக்கிறாள். ஒரு மணிநேரத்தில் அவளது அம்மாவும் வருகிறாள். இருவருமாக டோக்கியோவைச் சுற்றி உள்ள இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டு அவரவர் ஊருக்குத் திரும்பிப் போகிறார்கள். இதுவே கதையின் Summary. மற்ற நாவல்களில் இதைச் சொன்னால் Spoiler. ஆனால் இந்த நாவலுக்கில்லை. ஏனென்றால் இந்தக்கதையில் ஒன்றுமே நடப்பதில்லை, ஆனால் எல்லாமும் நடக்கிறது.
வெறுமனே டோக்கியோவை சுற்றிப் பார்க்கும் கதை போல் தோற்றமளிக்கும் இந்த நாவலின் கதைசொல்லி மகள். மகள், தாய் இருவரின் பெயரும் நாவலில் இல்லை. எதற்காக டோக்கியோவை மகள் தேர்ந்தெடுக்கிறாள், அம்மாவிற்கும் பெண்ணுக்கும் இடையில் என்ன, அவள் ஏன் தனியே வசிக்க வேண்டும், மூத்த சகோதரியின் வீட்டுக்கு ஒருமுறை கூடப் போனதில்லை என்கிறாளே அது ஏன்? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு நாவலில் பதிலில்லை.
அம்மா சீனாவில் ஒரு கிராமத்தில் பிறந்து, ஹாங்காங்கில் வளர்ந்து, குழந்தைகள் பிறக்குமுன்னரே ஆஸ்திரேலியா சென்று விட்டவள். தாயின் மொழி குழந்தைகளுக்குத் தெரியாது. மொழி தெரியாவிடில் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடியாது போய்விடுமோ! ஜப்பானிய மொழியில் வாக்கியமாக பேச முடியாது மகளால் என்பது டோக்கியோவில் அவர்கள் இருக்கும் போது தெரியவரும். மகள் டோக்கியோவைத் தேர்ந்தெடுத்ததே இனி.கிடைக்காத பழைய இனிய நிகழ்வுகளை மீட்டெடுக்கவும், அம்மாவுடன் கழிக்கவுமான சந்தர்ப்பம் என்ற இரட்டை மாங்காய்களா?
அம்மா அதிகநாள் இருக்கப் போவதில்லை என்பது தெளிவாக பல இடங்களில் குறிப்பிப்படுகிறது. அம்மாவுடன் மகள் செலவழிக்கும் நேரம் இதுவே கடைசியாக இருக்கும். அதே நேரத்தில் ஒவ்வொரு இடத்திலும் சிறிதுநேரம் அம்மாவைப் பிரிந்து சென்று பிரிவைப் பழக்கப்படுத்திக் கொள்கிறாள். அவளுக்கு வருமானம் தரும் வேலையில்லை. கொண்டு வந்த பணத்தில் கடைசி Yenஐயும் கடைசிநாளன்று செலவழிக்கிறாள். எதுவுமே விளக்கப்படுவதில்லை. அது போல் எதிர்காலத்தைப் பற்றியே எதுவும் இந்த நாவலில் வருவதில்லை, எல்லாமே நிகழும், கடந்தகாலமும் தான்.
கதைசொல்லி ஓரிடத்தில் சொல்வாள்.
” எழுதப்பட்டது எதையும் அப்படியே உண்மை என்று நம்பாதே”. அத்தனை நாட்களில் இவளுக்கு Laurie ஒருமுறை கூட அழைக்கவில்லை அல்லது மெசேஜ் செய்யவில்லை, இவளும் கூட என்பது நாவலில் நாமே கண்டுபிடிக்க வேண்டியது. அது போல் பல இடங்களில் வாசகஇடைவெளி விட்டே இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அம்மா தொடர்ந்து தத்துவார்த்தமாகப் பேசி கடைசியில் எதிலும் ஒன்றுமில்லை என்பதற்கு மகள் பதில் அளிப்பதில்லை. இந்த நாவல் வாசிப்பு ஒரு Game. தேர்ந்த வாசகர்களுக்கு விளையாட்டை விளையாடிய திருப்தி நிச்சயம்.