மும்பையில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்பு பிறந்தவர். தற்போது ஆங்கில-அமெரிக்க எழுத்தாளராக அடையாளப்படுத்தப்படுகிறார். ருஷ்டியின் இந்த நாவல் பிப்ரவரி, 7, 2023ல் ஐரோப்பாவிலும் பிப்ரவரி 9,2023 இந்தியாவிலும் வெளிவந்தது.
Excerpt From the book;
” Nothing endures, but nothing is meaningless either. We rise, we fall, we rise again, and again we fall. We go on. I too have succeeded and I have also failed. Death is close now. In death do triumph and failure humbly meet. We learn far less from victory than from defeat.”
ருஷ்டி ஏற்கனவே கூறியபடி இது இந்திய நாவல். வரலாற்று நாவல். பதினான்காம் நூற்றாண்டில் ஹம்பியை ஆண்ட பொம்மை ராஜா தோற்கிறான், அவன் தலை கொய்யப்பட்டு சுல்தானின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அந்நகரப் பெண்கள் சிதை வளர்த்து மொத்தமாக விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அம்மா இறப்பதைப் பார்த்த ஒன்பது வயதுப்பெண் பம்பா ஒருபோதும் இது போல் நான் இறக்க மாட்டேன் என்று உறுதிகொள்கிறாள். அவள் நாவில் பார்வதிதேவி குடியேறுகிறாள். சங்கம சகோதரர்கள் இருவர் சுல்தானால் சிறைபிடிக்கப்பட்டு, சுன்னத்து செய்யுமுன் தப்பி விடுகிறார்கள். பம்பா சகோதரர்களுக்கு ஹம்பியில் பெண்கள் கூட்டாக உயிர் இழந்த இடத்தில் நகரை உருவாக்கச் சொல்கிறாள். சுல்தான்களின் இந்தியாவில் ஒரே ஹிந்து பேரரசாக விஜயநகர சாம்ராஜ்யம் உருவாகுகிறது.
ஒரு பெண்ணின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, விஜயநகரம் உருவாகிறது. அங்கே அரண்மனையில் பாதுகாப்புப் பணியில் பெண்கள், படையில் பெண்கள், கல்வியில் சிறந்த பெண்கள், மண்டியில் மூட்டை தூக்குவதிலும் பெண்கள். மூன்று சகோதரர்களை மணமுடித்த மூன்று சகோதரிகளுக்கு அரசாணை என்னவென்றால் எப்போதாவது நாட்டுக்கு எதிராக உங்கள் கணவன் திரும்பினால் கழுத்தை அறுத்துவிடு என்பது. காலமெல்லாம் கணவர்கள் மனைவிக்குப் பயப்படுகிறார்கள். பம்பா ஏககாலத்தில் ஒரு கணவனையும், ஒரு காதலனையும் வைத்திருக்கிறாள். இந்த நாவல் ஒரு Feminine Fantasy.
விஜயநகரத்தின் கதை என்பதை விட இதை பம்பாவின் கதை என்றே சொல்ல வேண்டும். இருநூற்று நாற்பத்தி ஏழு வருடங்கள் வாழ்ந்த பம்பா. அவள் மகள் வயோதிகம் அடைந்து பாட்டியாகிய போது அவளது பேத்தி போல் தோற்றமளித்த பம்பா. பத்து வருடங்களுக்கு ஒரு வயது ஏறும் பம்பாவின் உடலுக்கு. அவளே இந்த சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவள். மூன்று முறை அரசியாக இருந்தவள். அவளது பேத்தியின் பேத்தியின் பேத்தியின் மரணத்தையும் பார்த்தவள். அதிக ஆயுள் ஒரு சாபம். கிட்டத்தட்ட இரண்டரை நூற்றாண்டுகள்.
இந்த நாவல் வரலாறும், ஃபாண்டஸியும் கலக்கும் Fusion. கதைசொல்லியே கற்பனைப் பாத்திரம் என்பதால் எது வரலாறு எது மேஜிக்கல் ரியலிசப்புனைவு என்பதைக் கண்டுபிடித்தல் சிரமம். பிங்க் குரங்குகளின் வருகையை நாவல் தொடுகிறது. இந்துக் குரங்குகளையும், முஸ்லீம் குரங்குகளையும் நிரந்தரமாகப் பிரித்ததே அதன் முதல் வேலை என்பதை நான் சொல்லவில்லை, நாவல் சொல்கிறது. மாஜிக்கல் ரியலிசத்தை எப்படி Effectiveஆக உபயோகிக்கமுடியும் என்பதில் விற்பன்னர்
ருஷ்டி. ருஷ்டியின் Proseஐ வாசித்தல் தனியின்பம்.
எண்ணற்ற Scholarly articles, essays, websites, books இத்துடன் பதினான்கு நூல்கள் மிகவும் உதவின என்று அவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார். அதனால் தான் உணவு என்றால் அதிரசம், சந்தேஷ், அர்ப்பணிப்பு என்றால் ஆண்டாள் (சூடிக்கொடுத்த சுடர்நாச்சியார் என்ற பதத்தை ஆங்கிலத்தில் உபயோகித்திருக்கிறார்) , போர் என்றால் மதுரையில் அப்போது ஆட்சி நிலவரம், ,வாரிசுரிமை என்றால் சதிசெய்து கொல்வது அல்லது கண்களைக் குருடாக்குவது என்பது வரை சொல்ல முடிகிறது. ருஷ்டி இங்கு பிறந்திருந்தாலும் அவர், மனத்தால் ஒரு பிரிட்டிஷ் அமெரிக்கர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவும் தெற்கு அவர் அறியாதது. ருஷ்டிக்கு எழுபத்தைந்து வயதாகிறது. இவரை வாசிக்க நினைப்பவர்கள், குறிப்பாக ஆசியக்கண்டத்தினர் ஆரம்பிக்கலாம் என்று நான் பரிந்துரைக்கும் நூலை இவர் இந்தவயதில் எழுதியிருக்கிறார். விஜயநகர் மட்டுமல்ல, எல்லா சாம்ராஜ்யங்களும் அழிந்தது. எல்லா பேரரசர்களும் ஒன்றுமில்லாது காற்றில் கரைந்து போனார்கள். கடைசியில் எஞ்சியது வார்த்தைகள். ஆம் வார்த்தைகளே எப்போதும் நிரந்தர வெற்றியாளர்கள்.