ஆசிரியர் குறிப்பு:
இலங்கையின் வெளிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவர். அரசுப்பள்ளி ஆசிரியர். தமிழ் முதுகலைமாமணி பட்டம் பெற்றவர். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு.
இந்தக் கவிதையை விளக்க முயன்றால் பிரத்யேக வாசிப்பனுபவத்தைக் கெடுத்தது போலாகும் என்ற பயம் மேலிடுகிறது. சேர்ந்தோம், இருந்தோம், பிரிந்தோம் என்பதின் அழகியல் வெளிப்பாடு இது:
” மரத்துக்கும் மரத்துக்குமான பாவுதலைப்
போல் இருக்கவில்லை
ஒரு கிளைக்கும் இன்னொன்றுக்கும்
வேர்களை முறுக்கிவிட்டது போன்ற
திரட்சியில் நானும் நீயும்
ஒருக்களித்த காலத்தை முன்பல்லில்
கொறித்துக் காட்டும் அணில்
அருந்துயர் கழிதலில் விட்டுச்செல்லும்
முன்கதைகளைக் கூடுதாவும்
குரங்கின் வால் மதப்புற்று சுழன்றடிக்கும்
காற்றில் பரவும் வித்து போல
தாவித்திரியும் கதைபிரித்து
முதுகு வரைந்த முக்கோட்டுக் கபிலம்
மதில் தாண்டிப் போகும்”.
தேர்ந்த ஓவியனின் கைகள் அலட்டாமல் இழுக்கும் கோடுகளில் சித்திரம் பூரணத்துவம் பெறுவது போல, இவரது கவிதைகளில் வார்த்தைகள் கச்சிதமாக இடைவெளியின்றி பொருந்திக் கொள்கின்றன.
” புகையும் வயிறு ஆற
நீர்கொள்ளும் கறிச்சட்டிக்கு
மூன்று கல் ஆழம்”
” அதரத்தை நனைத்த
எச்சில் மணத்தால்
அழகு
சற்றைக்கெனப் பூத்திருந்தது”
” உறைந்து போன காலவெளியில்
சூனியம் மட்டுமே
பேய்ச்சியாகச் சூழ்வுரும்”
“ரகசியப் புகைப்படங்களின்
கடவுச்சொல்லைத் தொலைத்து விட்டு
நெல்குற்றிப் பதர் புடைக்கும் மனசு”
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு புதிய உலகம் இருக்கிறது. அவர்களது கவிதைகளில் அது வெளியுலகத்திற்குத் தெரிய வருகிறது. பெண்ணை சமமாகக் கருதாதது குறித்த வருத்தம், காதல், புறக்கணிப்பு, சோகம் என்று அகவயமான கவிதைகள் தொகுப்பில் பல இருக்கின்றன.
தேசம் குறித்து, போரினால் அழிவு குறித்து சில கவிதைகள். ” என் தேசத்துமக்கள் காலத்திடம் மண்டியிட்டனர், காலம் கருணையற்று நின்றிருந்தது”
சரியும் சுவர்கள் குறியீடு. குறியீடுகளையும், படிமங்களையும் கவிதைகளில் ஏராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றை கவிதைகளில் சொல்ல வருவதை, மறைமுகமாகச் சொல்ல உபயோகிக்கிறார். குறிப்பாக ‘வாப்பா’ கவிதை. வாசித்து முடித்ததும் கணநேர அதிர்ச்சியில் இருந்து மீளவேண்டியதாயிற்று. நல்ல, செறிவான மொழி உங்களுக்கு. இந்த மொழி கவிதைகள் மட்டும் எழுதி கூட்டத்தில் தொலைந்து போகக்கூடாது. சிறுகதைகளையும் முயற்சி செய்யுங்கள் ரிஸ்மியா.
பிரதிக்கு:
கடல் பதிப்பகம் 86808 44408
முதல்பதிப்பு ஏப்ரல் 2022
விலை ரூ.100.