ஆசிரியர் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர். MBA பட்டதாரி. மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது இவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பு.
எல்லாக் கதைகளுமே இவர் முன்னுரையில் கூறியிருப்பது போல ஊர்க்கதைகள். கோபாலு என்ற ஒரு பெயரினால் மட்டுமல்ல, சில கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது போலிருப்பதன் காரணம் இவை ஒரே ஊரின் மாந்தர்கள். ஜாதிப்பிரிவினை நகரங்களில் நீறுபூத்த நெருப்பாக இருப்பது போலல்லாது கிராமங்களில் சுடர்விடும் தீயாகவே இருக்கிறது. உடல்வேட்கைக்குப் பார்க்காத ஜாதி, சூரியன் உதயமானதும் முன்வந்து நிற்கிறது. ‘வழித்தடம்’ ஒரு நல்ல பெண்ணியக்கதையும் கூட.
பல கதைகளில் மணவினை தாண்டிய உறவுகள் நடக்கின்றன. அநேகமாக எல்லாமே ஆண்களின் கண்ணோட்டத்தில் நகர்பவை. ஆனால் ‘ பந்தி ‘ பெண்ணை மையப்படுத்தி எழுதியது. வினியின் இரகசியத்தை மற்றவர்களும் காப்பாற்றுவது இயல்பாக வந்திருக்கிறது.
‘சுடலையாண்டவர்’ ஒரு Bold ஆன கதை. நாம் இன்னார் என்று வெளியில் சொல்லவே
பயப்படும் சூழலில் வாழ்கிறோம். இவர்கள் நேரடியாக ரோமில் இருந்து வந்தது போல, எப்போது மதம்மாற்ற சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களின் நம்பிக்கைகளை நாத்திகர்கள் மதிக்கும் அளவில் பாதி கூட ஆத்திகர்கள் மதிப்பதில்லை.
ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பு. எட்டே முக்கால் என்பது, தேங்காய் உடைக்கையில் கண்ணில் இருந்து கீறல் விழுந்தால் அபசகுனம் என்ற நம்பிக்கை, உப்புக் கொண்டு வருவது என்பது போன்றவை நெல்லையில் கடைபிடிக்கும் சடங்குகள். இவர் கதைகள் விவரணைகள் செய்யாமல், கதையின் போக்கில், ஒரு சில வார்த்தைகளில் நுணுக்கமாக கதை விரியும் பாணி. குறிப்பாகச் சொன்னால் ‘எட்டே முக்கால்’ ‘ வழித்தடம்’ போன்ற கதைகள். கல்யாணராசி, அரளிக்கொட்டை போன்றவை குறைப் பிரசவங்கள். முந்தைய தொகுப்பிலிருந்து அடுத்ததில் முன்னேற்றம் தெரிகிறது ரமேஷ் ரக்சனுக்கு. எல்லாவற்றையும் விட அதுதான் முக்கியமானது.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ்
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 135.