ஆசிரியர் குறிப்பு:
பள்ளி இறுதியில் கவிதைகள் எழுத ஆரம்பித்த சுபியின், முதல் தொகுப்பான ‘காலடித் தடங்கள்’ கிண்டில் வெளியீடாக வந்து, கடந்த ஜூலையில் வெளிவந்த “தேம்பூங்கட்டி’, ‘ நோமென் நெஞ்சே’ தொகுப்புகளுடன் இணைந்து மூன்றாவது அச்சுப்பிரதியாக வெளிவந்துள்ளது.
தமிழில், பிரபல பதிப்பகங்கள் தவிர்த்து, மற்ற பதிப்பக நூல்களை வாங்க நினைப்பவர்களுக்கு, Online link பெரும்பாலும் இருப்பதில்லை. தொலைபேசி எண் உபயோகத்தில் இருப்பதில்லை அல்லது அவர்கள் எடுப்பதில்லை. அதே போல் புத்தக வெளியீட்டுக்கு வரும் வாழ்த்துகள் வேறு, புத்தகங்கள் விற்பனை, அவை பொதுவெளியில் பேசப்படுதல் என்பது வேறு.
கவிதைகளாக்கும் முயற்சி என்றிருக்கிறார் சுபி முன்னுரையில். காலை, மதியம், அந்தி, இரவு என்று அனுதினம் எழுதும் கவிஞர்களும் அதையே செய்கிறார்கள். நீங்கள் சொல்கிறீர்கள், அவர்கள் சொல்வதில்லை. இந்தக் கவிதையின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதி எனக்குப் பிடித்திருக்கிறது. பல நேரங்களில் கவிஞரின் மனவெளியைத் தாண்டியும் கவிதைகள் பயணம் செய்யும். இந்தக் கவிதையின் கடைசிப் பத்தியில் ‘அவர்கள்’ திரைப்பட சுஜாதாவைப் பொருத்திப் பாருங்கள்.
” பற்றுதலுக்கான அத்தனை சாத்தியங்களும்
நிறைந்திருந்த ஒரு நன்னாளில் என் வீட்டின்
கம்பிகளில் படர்ந்திருந்தது அந்தக்கொடி….
மேல்வீட்டுக் குடியிருப்பின் புலம்பெயர்தலில்
எப்படியோ அதை மறந்து விட்டுப்
போயிருக்க வேண்டும்
பழைய உறவுகளைப் பிரியவும் முடியாமல்
புதிய உறவுகளை ஏற்கவும் முடியாததொரு
தவிப்பை அது தனக்குள் வைத்துக் கொண்டிருந்தது…..”
சோகமாக நாம் இருக்கையில் எதிர்படுபவர் எல்லோருமே ஆனந்தத்தில் இருப்பதாகத் தோன்றும். எதிர்காலம் குறித்த பயம் தூக்கத்தின் நடுவில் எட்டிப் பார்க்கையில், நம்மைத் தவிர எல்லோர் வாழ்வும் பாதுகாப்பானது என்று தோன்றும். வெளிநாட்டில் இருந்து கொண்டு பெண் கிடைக்காது தடுமாறுபவனுக்கு இந்தக் காட்சி கண்ணில் படவில்லையென்றால் தான் ஆச்சரியம்.
” கடும் பனியிலும்
கம்பளிச்சட்டைகளணிந்து
உதட்டடுப்பில்
காதலுணவு செய்பவர்கள்
ஒரு நாளைக்கு ஒருமுறையேனும்
கண்ணில் பட்டுவிடுகிறார்கள்”
கவிதைகள் காட்சிகளைக் கண்முன் கொண்டு வருவது இப்படித்தான். அபார்ட்மெண்ட்களாய் பார்த்த பிறகு, வீட்டின் முற்றமும், அதில் சோவெனப் பெய்யும் மழையும், போன ஜன்மத்து நினைவுகள் போல் மங்கலாய்….
” வடாம் போடும் மாமிகள்
வயதான காலத்தில்
மாடிக்கும் கூடத்திற்கும்
நடந்த வாண்ணமிருக்கிறார்கள்………
பறந்து விரிந்த பட்டாசாலையின்
முற்றத்தில் மழை மேலிருந்து கொட்டுமென
பக்கெட்டுகளை வைக்கிறாள் ஒரு சிறுமி
கப்பல் விடும் ஆசையுடன்………”
சிறுவயதில் என்னவாக வேண்டும் என்ற கனவுகள், கோமாளித்தனம், அம்மாவின் புடவை வாசம், அப்பாவின் சைக்கிள், அம்மாச்சி வாழ்ந்து கெட்டது, மரணம் விட்டுச் செல்லும் தடங்கள் பற்றி, ஆசையில் உழல்வதன் ஆனந்தங்கள் குறித்து தினம் கண்டு, கழிக்கும் வாழ்வைச் சுற்றியே எல்லாக் கவிதைகளும்.
“பிச்சியின் கண்களுக்கு கர்மாவின் கணக்குகள் புரிவதில்லை” என்று இடையே ஒரு வரி. கவிதைகளை இது போன்ற வரிகளே, ஆழமாக்குவது மட்டுமல்லாது, அகலமாக்கவும் செய்கின்றன. நாம் செய்ய வேண்டியது எல்லாம், பெண்கள் கையில் உருட்டிஉருட்டி மாவுருண்டையை பிசிறில்லாத அழகிய வடிவத்திற்குக் கொண்டு சேர்க்கும் பக்குவத்திற்கு வார்த்தைகளைக் கொண்டு வருவது தான். தொடர்ந்து எழுதுவதும், வாசித்தலும், எழுதியதையே மாற்றி எழுதுதலும் அதற்கான வழிகள். உங்கள் ‘கடைத்தெருவொன்றின்’ கவிதை போல் தமிழில் வாசகச்சூழல் இல்லை. கடைவிரித்தாலும் இன்னும் கொள்வாரில்லை. அதில் மனக்கிலேசம் அடையாது நம் பயணத்தை நாம் தொடர வேண்டியது தான்.
பிரதிக்கு:
Ukiyoto Publishing
விற்பனை உரிமை தமிழ்வெளி 90940 05600
முதல்பதிப்பு 2021
விலை ரூ.130.