ஆசிரியர் குறிப்பு:

கோவையில் பிறந்து, வளர்ந்தவர். பெங்களூரில் வசிக்கிறார். கணினிப் பயன்பாட்டில் முதுகலைப்பட்டம் பெற்று ஐடித்துறையில் பணியாற்றியவர். இவரது ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு மொழிபெயர்ப்பு நூலும் ஏற்கனவே வெளிவந்தவை. இது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

சந்திரோதயம் படப்பாடலில் ஒரு Stanza “இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ” என்று ஆரம்பிக்கும். மொத்தப்பாராவும் தணிக்கை செய்யப்பட்டு “மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ” என்று காமெடிப் பாடலாக மாறியிருக்கும். அதற்கு ஏழு வருடங்கள் முன்பே வந்த அம்பிகாபதி பாடல் வரிகள் ” பல்வரிசை முல்லை என்றார் கன்னி இளமானே, பாடும் வண்டாய் நான் வரவா கன்னி இளமானே” . இரண்டு பாடல்களும் சொல்வது ஒன்றே, ஆனால் இரண்டாவதில் செயல்விளக்கம் குறைந்து, நுட்பம் அதிகரித்திருக்கிறது. கவிதைகள் எழுதுபவர்கள், பழகிக்கொள்ள வேண்டியது இரண்டாவதைத் தான்.

சில பயணங்களில் இலக்கை அடையவோ, திரும்பி வரவோ முடிவதில்லை. வடக்கிருப்பது போல முடிந்து போவது. சில உறவுகளும் அப்படித்தான். விடவும் முடியாமல், தொடவும் முடியாமல்……….. கவிதை முழுவதும் நன்றாக வந்திருக்கிறது.

” சூரியனை அடையும் பயணத்தில்
நினைவு முள் குத்துகிறது
பேயைப் பூசிக்கொண்டு
காலத்தைத் தொடர்கிறேன்.
இலை உதிர்த்த
கிளைமீது பாடும்
தனிப் பறவையின் குரல்
குறுகலான தெரு போலிருக்கிறது………….”

கவிஞன் கண்டாலே கவிதை என்பது இது தான். கலைடயாஸ்கோப் கண்களில் காணும் காட்சிகள், சாதாரண பார்வைகளை நிரப்புவதில்லை.

” தன்னைத் தாங்கிப் பிடித்து
அழைத்துச் செல்பவரின் கை விடுத்து
கைநடுங்கப் பள்ளம் தோண்டி
செடி நடுகிறாள் பாட்டி

அந்த நொடியில்
சிறுபிள்ளையாய் மாறிப் போனவளின்
கைச்சுருக்கங்களில் மண்நிரப்பி
தழுவிக் கொள்கிறது பூமி

…………….
பின்னொரு நாள்
மண்வேறு அவள் வேறு
என்றறியாத வண்ணம்
அவள் விருட்சமானாள்”

(கடைசி வரியில் அவள் தேவையில்லை)

அதிகமாக உடலுக்குக் கொடுக்கும் stress எதிர்பாராத Periodsஐ வரவழைக்கும். எல்லோராலும் கைப்பையில் எப்போதுமிருக்கும் Sanitary Napkinsஐ கொண்டு செல்ல முடிவதில்லை. எல்லோரிடமும் கைப்பையும் கூட இருப்பதில்லை. ஆனால் தவறாமல் எல்லோருடைய கைகளிலும் குழந்தைகள் இருக்கின்றன.

” கைகளில் இருக்கும்
சிறு வயிறுகளுக்காக
அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின்
பாத்திரங்கள், துணிகள், கழிவறை என
எல்லாவற்றின் நேற்றையும்
இன்றெனத் துலக்கிவிட்டு
நிமிர முயற்சிக்கையில்
மின்சாரம் தாக்கிக் கீழே விழுகிற
சிறு குருவியைப் போல்
ஆடை தொடுகிறது மாதவிடாய்க் குருதித்துளி.”

ஏராளமான படிமங்களையும், உருவகங்களையும் கவிதைகளில் உபயோகித்திருக்கிறார் மலர்விழி. ஸ்திரி பாட்டு போன்ற சில கவிதைகளில் கடைசியில் O Henry பாணித் திருப்பம் நேர்கிறது. வித்தியாசமான பார்வையும் இருக்கின்றது. குப்புறப்படுத்துக் கொண்டு பாட்டுக் கேட்கும் பெண்ணை, தாவரம் என நினைத்து நான்கைந்து முடிகளைக் கலைக்கும் காற்று. சுவாரசியமான பார்வை. ஏன் காற்று பெண்ணெனவே நினைத்துத் தொடாதா!
” அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ”.

மலர்விழி செய்ய வேண்டியது, பல கவிதைகளில் வரும் Repetitive natureஐக் கலைவது. கலாப்ரியா அதையே அணிந்துரையில் கேள்வி, பதில் போலிருக்கிறது என்றிருக்கிறார். பலவித அனுபவங்கள் பார்வையை விசாலமாக்கும். ஆனால் எல்லோருக்கும் சிறிய வாழ்வில் அனுபவக்கொள்முதல்கள் அதிகம் கிடைப்பதில்லை. அதனாலேயே வாசிப்பு அவசியமாகிறது. உரைநடையாளர்களைப் காட்டிலும், கவிஞர்கள் வாசிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சொன்னால் வே.நி.சூர்யாவின் உலகக்கவிதைகள் குறித்த தொடர் வாசிப்பு. அவரது வாசிப்பைப் பார்க்கையில் எனக்கு உண்மையில் பொறாமை. மலர்விழி கவிதைகள், மொழிபெயர்ப்பு, கதைகள் என்று பயணத்தை ஆரம்பித்துள்ளார். இப்போதைய உற்சாகம் எப்போதும் தணியாதிருக்க வாழ்த்துகள்.

பிரதிக்கு:

வேரல் புக்ஸ் 96787 64322
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 100.

Leave a comment